சுடுமணல்

“மால்கம் எக்ஸ் – என் வாழ்க்கை” நூல் அறிமுகம்.

Posted on: October 21, 2006

“கூவர சுவாற்ஸ்” (ஊத்தைக் கறுப்பா) என்று அவன் பேசுகிறான். நான் கறுப்பா? பார் என்ரை நிறத்தை. பிரவுண். ஆபிரிக்கர்கள்தான் கறுப்பு என்கிறேன்;. சரியான பதிலாக திருப்தியடைகிறேன். வெள்ளைக்கார நண்பன் எனக்கான சான்றிதழொன்றைத் தந்து திருப்திப்படுத்த முயற்சிக்கிறான். “அவன் கறுப்புத்தான், ஆனால் மனசு வெள்ளை” என்கிறான். திருப்திப்படுகிறேன்.

இந்த எதிர்கொள்ளல் சரியானதா?. வெள்ளைமயப்படுத்தப்பட்ட சிந்தனையே இந்தப் பதிலில் ஊறியிருக்கிறது. அதாவது ஆணிய சிந்தனை பெண்ணிடம் ஊறியிருப்பதுபோல. இப்போ எனது பதில் இப்படியாய் வருகிறது. கூவர சுவாற்ஸ்! …ஆம் நான் கறுப்பன்தான். உனக்கு என்ன பிரச்சினை அதிலை?. வெள்ளை மனசு!… இல்லை என்ரை மனசும் கறுப்புத்தான்… அது வெளிப்படையானது. இதை இப்படித்தான் எதிர்கொண்டாக வேண்டும் எனப் படுகிறது எனக்கு.

அன்றாடம் ஏதோவொரு வடிவில் நான் கறுப்பன் என நினைவுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சூழலில் “மல்க்கம் எக்ஸ்- என் வாழ்க்கை” என்ற நூலை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. 730 பக்கங்கள் கொண்ட இந்த நூல் எனது வாசிப்பை தீவிரப்படுத்திக் கொண்டே இருந்ததற்கு நிறவெறிமை அகலாத புகலிட வாழ்வில் எனது இருப்பு காரணமோ என எண்ணுகிறேன். சே, பனான், மார்க்கோஸ், லுமும்பா… என தத்துவவாதிகளை போராளிகளை தமிழுக்கு விலாவாரியாக அறிமுகமாக்கிக்கொண்டிருக்கும் விடியல் பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கிறது மல்கம் பற்றிய நூல். விடியல் பதிப்பகத்தின் வெளியீடுகளுடாக தேர்ந்த மொழிபெயர்ப்பாளர்களாக வெளிப்பட்டிருப்பவர்கள் பாலச்சந்திரன், கோவிந்தசாமி ஆகியோர். இந்த நூலும் கோவிந்தசாமியால் சரளமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வாசிப்பை தடங்கலின்றி இழுத்துச் செல்கிறது.

நாம் காந்தியை தெரிந்து வைத்துக் கொள்ளும் அளவுக்கு சுபாஸ் சந்திரபோஸினை தெரிந்து வைத்துக் கொண்டதில்லை. வெள்ளையர்களுடன் சமவுரிமைக்காக குடியுரிமைக்காக அகிம்சை வழியில் போராடிய மார்ட்டின் லூதர் கிங்கினை அறிந்திருக்குமளவிற்கு வெள்ளைக் கருத்தியலின் எதிர்மறுப்பாளனாக கலகக்காரனாக வெளிக்கிளம்பிய மல்கம் எக்ஸ் இனை நாம் தெரிந்துவைத்திருக்கவில்லை. எப்போதுமே ஒரு தலைவன் ஒரு இயக்கம் என்ற பரிமாணத்துள் -அதன் பக்க பலங்களை புறந்தள்ளி- விளக்க முயலும் மனோபாவமும், தீவிர அரசியலின் போக்கை நிறுத்த மிதவாத அரசியலை முன்நிறுத்தியவர்களை அங்கீகரிக்க வைக்கும் முதலாளிய சூழ்ச்சியும் எமது புரிதல்களை மட்டுப்படுத்திவிடுகிறது.

அமெரிக்காவில் கறுப்பின மக்களின் நானூறு ஆண்டுகால அடிமை வாழ்வின் ஒரு கொந்தளிப்பான மனிதனாக மல்கம் எக்ஸ் வெளிக்கிளம்பினார்.

ஒரு தலைமுறைக் காலம்வரை கறுப்பு அடிமைப் பெண்களை அவர்களுடைய வெள்ளை எசமானர்கள் பாலியல் அடிமைகளாக நடத்தியதில் தமது சொந்த குடும்பப் பெயர்கள் என்னவென்று தெரியாத – மூளைச்சலவை செய்யப்பட்ட- சந்ததி உருவாகியது. இந்தக் கலப்பினத்தின்மீது வெள்ளையர்கள் தங்கள் குடும்பப் பெயர்களைத் திணித்தார்கள். அவர்களை நீக்ரோக்கள் என்ற இனப்பெயர் கொண்டு அழைக்கத் தொடங்கினார்கள். இதனால் லிற்றிள் என்ற தனது “குடும்பப் பெயரை” எக்ஸ் என்று மாற்றிக்கொண்டு மல்கம் எக்ஸ் ஆனவர். தங்களால் அறிந்துகொள்ள முடியாத தங்களுடைய ஆபிரிக்கக் குடும்பப் பெயராக எக்ஸ் என்ற பெயரை சூட்டிக்கொண்டார்.

தலைவர்கள் என்றால் சிறுவயதிலேயே ஞானம் கொண்டவர்களாக அசாதாரண பிறவிகளாக, ஒழுக்கவிழுமியங்களை சிரமேல்கொண்டு வளர்ந்தவர்களாக உருவகிக்கப்படும் வரலாறுகளை நாம் படித்துக்கொண்டிருக்கிறோம். இந்த மனோபாவத்துடன் மல்கம் எக்ஸ் இனை படிக்கத் தொடங்கினால் புத்தகத்தை அவர் இருபது வயதை அடைவதற்கு முன்னரே மூடிவைத்துவிட வேண்டியதுதான். மாவோ கூறியதுபோல சூழ்நிலைகள் மனிதஜீவியின் உணர்வுகளை தீர்மானிக்கிறது என்பதுடன் உணர்ச்சிகளையும் தீர்மானிக்கும் என்றவாறான ஒரு குறியீடாய் மல்கம் எக்ஸ் வெளிக்கிளம்பினார். அவரது தடாலடியான பேச்சுகளும் செயலும் இதைக் காட்டுகின்றன.

நடுத்தர வர்க்கங்களிலிருந்து உருவாக்கப்பட்ட தலைவர்களின் வரலாறுகளைப் படித்து உணர்ந்த மனநிலையில் மல்கம் எக்ஸ் இனைப் புரிந்துகொள்வதில் பல இடர்ப்பாடுகள் வந்து சேரும். 20 வயதுவரையான அவரது “பொறுக்கி” வாழ்வு கற்றுத் தரப்பட்ட எமது ஒழுக்கமதிப்பீடுகளுக்குக் குறுக்கே வருவன. அதேபோல் அவரது முஸ்லீம் மதமாற்றம் அல்லது மதநம்பிக்கை சோசலிச புரட்சி மதிப்பீடுகளுக்குக் குறுக்கே வருவன. மனதர்கள் மனிதர்களாகக்கூட மதிக்கப்படாத ஒரு உளவியலில், வாழ்வாதாரம் அடிமைவேலைமுறைக்குள் முடக்கப்பட்ட ஒரு அடித்தட்டு நிலையில் களவு, போதைப்பொருள், அடிதடி, அடியாள் வேலை, கொந்தளிப்பான மனநிலை… என்றெல்லாம் நிலவியதை புரிந்துகொள்ளும் நெகிழ்வுத் தன்மைதான் மல்கம் எக்ஸ் உடன் எம்மை நெருக்கமாக இணைக்கும்.

400 ஆண்டுகால கறுப்பின அடிமைகளாக சேர்pப்புறங்களே வாழ்விடமாக ஒதுக்கப்பட, வெள்ளையின மேலாண்மையை வெள்ளைப் புத்திஜீவிகள் கருத்தியல்களை கட்டமைத்து வளர்த்தெடுத்தனர். அப்பாவி கறுப்பின மக்களும் இதற்குள் பலியாகிப்போயிருந்தனர்
“தாங்கள் மனிதர்கள் என்பதை நினைவுபடுத்துவதற்கு வெள்ளையர்களுக்கு யாரும் தேவையில்லை. ஆனால் எங்களுக்கு அந்தத் தேவை இருக்கிறது. தன்னுடைய மக்களுக்கு மல்கம் செய்த மறுக்கமுடியாத நன்மைகளில் இதுவும் ஒன்று” என ஒஸ்லி டேவிஸ் என்ற திரைப்பட நடிகர் கூறினார்.

மல்கம் தனது சுயசரிதையை ஓய்வாக குந்தியிருந்து எழுதவில்லை. எப்போதும் கறுப்பு எதிர்மறுப்புகளுடனும் ஓய்வற்றும் இயங்கி வறுமையுடனும் போராடிய கலவரமான மனநிலைகளில் அலைக்கழிக்கப்பட்ட அவரால் இதைச் செய்திருக்கவும் முடியாது. மல்கம் எக்ஸ் இன் இந்த சுய வரலாற்றை அலெக்ஸ் ஹேலி என்ற எழுத்தாளர் பதிவுசெய்தார். மல்கம் நேரடியாகச் சொல்லியதையும் அவர் கிறுக்கிவைத்துவிட்டுச் செல்லும் துண்டுக் காகிதங்களையும் கொண்டு மல்கம் இன் கொந்தளிப்பான மனநிலையைப் புரிந்துகொண்டு அவர் இதைப் பதிவுசெய்தார்.

“எந்தவொரு நபரைப் பற்றியும் புரிந்துகொள்ள வேண்டுமானால் அவருடைய பிறப்பிலிருந்து தொடங்கி முழு வாழ்க்கையையும் பரிசீலனை செய்ய வேண்டும். நம்முடைய அனுபவங்கள் அனைத்தும் நம்முடைய ஆளுமையில் இரண்டறக் கலந்துள்ளன. நமக்கு ஏற்படும் எந்த அனுபவமும் நம்முள் ஒரு அடிப்படைக் கூறாக மாறிவிடுகிறது” என்று கூறிய மல்கம் எந்த சுயதணிக்கையுமின்றி தனது பலவீனங்கள், தவறுகள், கருத்து மாற்றங்கள், குற்றவுணர்ச்சி உட்பட எல்லாவற்றையுமே சொல்கிறார்.

“தீவிரவாதியாக இல்லாத ஒரு கறுப்பனை நீங்கள் எனக்குக் காட்டுங்கள். மனநோய் மருத்துவரிடம் யாரை அழைத்துச் செல்வது என்பதை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்” என்றார் மல்கம். கறுப்பின மக்களுக்கென சேரிகளை உருவாக்கி பெரிய பெரிய விசயங்கள்மீது அவர்கள் ஆசைகொள்ள முடியாத அளவிற்கு ஒரு நிர்ப்பந்தமான சூழலில் வெள்ளையர்கள் அம் மக்களை வைத்திருந்தார்கள். ஒவ்வொருநாளும் உயிhவாழ்வதே அரிதான விசயமாக இருக்கும் ஒரு சமூகத்தில் பிழைத்திருப்பதே மதிக்கப்பட வேண்டிய விசயமாக இருந்தது என்ற அவருடைய கூற்று கறுப்பின சேரிகளை படம்பிடிப்பதாகும்.

சேரியில் வாழும் கறுப்பன் வெள்ளை அதிகார அமைப்பிற்கு மரியாதை காட்டுவதில்லை. சேரி அடியாள் மனத்தளவில் எதற்கும் கட்டுப்பட்டவன் அல்ல. அவனுக்கு மதம் இல்லை. ஒழுக்கவிழுமியங்கள் குறித்து எந்தக் கருத்தும் அவனிடம் இல்லை. குடியுரிமை சார்ந்த பொறுப்புணர்வும் அவனிடம் இல்லை. அச்சம் இல்லை. எதுவும் இல்லை. அன்றாடம் வாழ வேண்டும் என்பதற்காக மற்றவர்களை ஏமாற்றியபடி அலைந்து திரிவான். மனித பலவீனங்களை ஒரு வேட்டைநாய் போல நுணுக்கமாக மோப்பமிடுகிறான். எந்தநேரத்திலும் வெறுப்பிலும் பதற்றத்திலும் ஏதேனும் ஒன்று செய்ய வேண்டும் என்ற கவலையிலுமே இருக்கிறான். எதைச்செய்தாலும் அதற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்கிறான்… என மால்கம் இச் சூழலை விரித்துக் காட்டினார். அவரின்; ஆரம்பகால வாழ்க்கையும் இதற்குள் சுழன்றதுதான்.

இருபத்தியொரு வயதில் கிரிமினல் குற்றத்துக்காக அவர் பிடிபட்டு சிறைக்குச் செல்லும்வரை அவரும் வெள்ளையினக் கருத்தியலுக்குள் இசைந்து போனவர்தான். வெள்ளையர்கள் போன்று தனது தலைமுடியை நேராக்கும் ஆசைகொண்டவராகவும் அவர் இருந்தார். ஆனாலும் இனவொதுக்கலை சகித்துக்கொள்ள முடியாதவராக இருந்தார். அவர் சிறு பராயமாக இருந்தபோது அவரது தந்தையாரை வெள்ளை இனவெறி அமைப்பான குக்கூஸ் கிளான் அமைப்பினர் அடித்து தண்டவாளத்தில் வீசி கொன்றார்கள். இவர்களின் வீட்டை தீயூட்டி கொலைசெய்ய முயற்சித்தபோது தப்பிய தந்தை எரியும் வீட்டின் முன் நின்று “நான் ஒரு மனிதன்” என்று கத்தியது மல்கத்தின் நினைவை தொல்லைப்படுத்தியது. சிறையில் “நேசன் ஒப் இஸ்லாம்” அமைப்பைச் சேர்ந்த, வாசிப்பில் அதீத கவனம் செலுத்திய ஒரு கறுப்பினத்தவரின் தொடர்பு அவருக்குக் கிடைக்கிறது. சிறையில் மல்கம் வாழ்வு திசைதிரும்புகிறது. அப்போது தனக்குத் தெரிந்த சொற்களை எண்ணினால் ஒரு சில நூற்றுக்கணக்கானதே என்றார். சிறையில் வாசிப்புப் பழக்கம் ஏற்பட்டது. ஒரே வாசிப்பில் மூழ்கினார். அது அவரது வாழ்க்கையை மாற்றியமைத்தது. சிந்திப்பதற்கு நேரம் தேவையென்றால் அதற்கு மிகச் சிறந்த இடம் கல்லூரிக்கு அடுத்தபடியாக சிறைச்சாலைதான் என்று சொன்னார்.

அமெரிக்காவிலேயே மிகக் கோபக்கார நீக்ரோ என்று வர்ணிக்கப்பட்ட மல்கம் தான் வன்முறையைத் தூண்டுபன் என்ற குற்றச்சாட்டை மறுக்கும்போது கூறுகிறார்
சேரிகளின்மீது திணிக்கப்பட்டுள்ள வாழ்நிலை (வேலையின்மை, மோசமான இருப்பிடங்கள், குறைவான கல்வி, அடையாளமின்மை… என்பன) ஒரு அபாயகரமான கிரிமினல் சூழல். இந்த வெடிகுண்டு வெடிப்பதற்கு யாரும் நெருப்பு வைக்க வேண்டிய அவசியம் இல்லை. தன்னுள்ளிருந்து தானே தன்னியல்பாக எரியும் என்றார். அப்படி பற்றிப்பிடித்த ஒரு தீப்பொறியாக மல்கம் எக்ஸினை நாம் காண்கிறோம்.

எட்டாம் வகுப்புவரை மட்டுமே படித்திருந்த மால்கம் ஒரு பதினெட்டு வருட நிறவெறி எதிர்ப்பு அரசியலில் அபரிதமான வளர்ச்சியைப் பெற்றார். அடியாள் உலகுக்குத் தேவையான தன்மானம் துணிச்சல் என்ற பண்புகளையெல்லாம் தனது நிறவெறிக்கெதிரான குரலுடன் திசைதிருப்பினார். பத்திரிகையாளர்கள் அவரது பதில்கள் வெடிகுண்டுகளாக எதிர்க்கேள்விகளாக வந்துவிழுவதை எதிர்கொள்ளும் பதட்டத்துடனேயே இருப்பர். ஒரு கலவரத்தைத் தூண்டும் வல்லமையும் அதேபோல் ஒரு கலவரத்தை நிறுத்தும் வல்லமையும் கொண்ட ஒரேயொரு தலைவர் மல்கம் என்று பத்திரிகைகள் எழுதுமளவிற்கு நெருப்பாய் நடமாடினார்.

இங்கு நாம் “ஊத்தைக் கறுப்பா” என்று திட்டப்படும்போது அப்பாவித்தனமாக பதிலளிப்பவர்கள் பலர். நாங்கள் கறுப்பா இல்லையே நாங்கள் மண்நிறம் கொண்டவர்கள் என்று சொல்வர். இங்கு நிறம் இரண்டாம் பட்சமாகவே செயற்படுகிறது. வெள்ளையின கருத்தியலே (அதாவது அரசியல்) முதல்பட்சமாகிறது என்ற விடயத்தைப் புரிந்து கொள்ளாததும், அதேபோல் எமக்குள்ளேயே வெள்ளைக் கருத்தியல் செயற்படுவதை கண்டுகொள்ளாமல் இருப்பதுமாகும். வெள்ளை தவிர்ந்த எல்லாமே கறுப்பு என்ற இருமையை வெள்ளையின கருத்தாக்கம் கொண்டுள்ளது. அமெரிக்காவிலும் கறுப்பின மக்களுக்கு அடுத்தபடியாக யூதர்கள் ஜப்பானியர்கள் சீனர்கள் மீதும் இந்த நிறவெறி செயற்பட்டது. உதாரணமாக இரண்டாம் உலகப் போரின் போது குடியுரிமை பெற்ற ஜப்பானியர்கள்கூட முகாம்களில் அடைக்கப்பட்டார்கள். ஆனால் -வெள்ளையர்களான- யேர்மனியர்கள் சுதந்திரமாகவே விடப்பட்டார்கள். அமெரிக்காவைக் காப்பாற்றுவதற்காக என்று சொல்லி அணுகுண்டை வீச தேர்ந்தெடுத்த இடம் வெள்ளையரல்லாத உலகின் பகுதியின் மீது பாரிய பாதிப்பைச் செலுத்தியது என்கிறார் மல்கம்.

கறுப்பு, வெள்ளை என்பதற்கான அர்த்தங்களை வெஸ்ரேர்ண் அகராதியில் இப்படி எழுதிவைத்தார்கள். கறுப்பு என்றால் துன்பம், பயங்கரம், முடிவற்ற குழி, துப்பரவின்மை, மந்தம்… என்றவாறும், வெள்ளை என்றால் தூய்மை, அப்பாவித்தனம், புத்திசாதுரியம்… என்றதோடு “கறுப்பின் எதிர்ச்சொல்” என்றும் குறிப்பிடப்பட்டிருப்பது வெள்ளையினக் கருத்தியலைப் புரியவைப்பவை. இதிலிருந்துதான் பிளாக் டே, பிளாக்மெயில், பிளாக் கார்ட்… என்றெல்லாம் சொற்கள் உருவாக்கப்பட்டன. துக்கத்திற்கான குறியீடாக கறுப்பை தேர்ந்தெடுப்பதையும், கறுப்பு நாள், கறுப்பு ஜுலை என்ற சொற்களை நாம் பயன்படுத்துவதையும், அதேபோன்று “வெள்ளைநிற” மணப்பெண் தேடுவதையும் வெள்ளையினக் கருத்தியலின் கசடாகவே பார்க்க முடியும். இவ்வாறான வெள்ளைமயமாக்கப்பட்ட சிந்தனை பற்றி பல நடைமுறை உதாரணங்களை நாம் அன்றாடம் காணுகிறோம். அது -இனவெறி சூழலுக்குள் வாழ்ந்துகொண்டே- ஆபிரிக்கர்களை எம்மைவிட தாழ்ந்தவர்களாகப் பார்க்க வைக்குமளவிற்கு எம்மிடம் ஊறியிருக்கிறது.

வெள்ளையினக் கருத்தியலை எதிர்கொள்ள மூலமனிதன் பற்றிய மரபணுவியலை (ஜெனற்றிக்) கையாண்டார் மல்கம். கறுப்பு மனிதனிலிருந்து தொடங்கினால் வெள்ளை மனிதனை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் வெள்ளை மனிதனிலிருந்து தொடங்கினால் கறுப்பு மனிதனை உற்பத்தி செய்ய முடியாது. ஏனெனில் வெள்ளை மனிதனின் உயிர்மத்திலுள்ள மரபுக்கூறு இனக்கலப்பின் மூலம் ஏற்பட்ட உயிர்மத்திலிருந்து உருவான மரபுக்கூறாகும் என்ற ஒஸ்ரியா ஆள்வாளர் ஒருவரின் கூற்றைப் பயன்படுத்தினார் மல்கம்.

வரலாறு மிகப் பெருமளவில் வெள்ளைமயமாக்கப் பட்டுள்ளது என்பதற்கு இன்னொரு அசல் உதாரணத்தைக் காட்டுகிறார். யார் இந்த யேசு? எஸ்ஸெனி என்றழைக்கப்பட்ட எகிப்திய மெய்ஞ்ஞானிகளின் சகோதரக் குழுவைச் சேர்ந்தவர்தான் யேசு. அவரின் காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற எகிப்திய வரலாற்று அறிஞர் பிலோ மூலம் இந்த உண்மை அறியப்பட்டிருக்கிறது. இஸ்லாம் மதத்தின் மூன்று முக்கிய தீர்க்கதரிசிகள் யேசு, முகமது, மோசஸ். ஜெரூசலத்:தில் யேசுவுக்கு முஸ்லிம்கள் கோயில் கட்டினார்கள். உண்மையான யூதர்கள் வெள்ளை நிறத்தவர்களல்ல. யேசுவின் நிறத்தை வெள்ளையாக்கி நீலநிறக் கண்களை ஒளிரவிட்டது வெள்ளையினக் கருத்தியல்தான். இதனால்தான் “நான் யேசுவை நம்புகிறேன் கிறிஸ்தவத்தை அல்ல” என்று பில் கிரகாம் சொன்னார். பாடகி மடோனா யேசுவை கறுப்பு உருவமாக்கி பாடிய பாடல் கத்தோலிகர்களை எரிச்சலடைய வைத்திருந்தது இங்கு நினைவுக்கு அழைக்கக்கூடியது.

கறுப்பு என்பது சாபம் என்றும் அவர்களுடைய இன்றைய துன்பத்துக்கு சொர்க்கத்தில் விடிவு கிடைக்கும் என்றும் போதித்து இந்த இழிநிலையைத் தொடர அனுமதித்த கிறிஸ்தவ மதத்தை கறுப்பர்கள் விட்டெறிந்து சகோதரத்துவத்தைப் பேணும் முஸ்லிம் மதத்தைத் தழுவினார் மல்கம். இனவொதுக்கலின் உளச்சிக்கலில் அகப்பட்ட கறுப்பின மக்களுக்கு இஸ்லாம் இதமான மருந்தானது. இன ஒதுக்கலின்மீதான எதிர்மறுப்பில் இஸ்லாம் இவர்களுக்கு உத்வேகம் தந்தது. முஸ்லிம் மதத்தின் புனிதராக எலிஜா முகமதுவை ஏற்றுக்கொண்டு முஸ்லிம் மதத்தைத் தழுவிய மல்கம் அவரின் போதனைகளில் திளைத்தார். பின்னர் முஸ்லிம் மதப் போதகராகவும் பத்துக்கு மேற்பட்ட மசூதிகளை அமெரிக்காவில் நிர்மாணிப்பதற்கான செயற்பாட்டாளனாகவும் மல்கம் சுழன்று திரிந்தார். மல்கம் எக்ஸ் இன் நண்பரான காசியஸ் கிளேகூட முஸ்லிம் மதத்துக்கு மாறி முகமட் அலி என பெயர் மாறினார். (வெள்ளையின குத்துச் சண்டை வீரர்களுடனான வெற்றிகளையெல்லாம் கறுப்பினத்தின் வெற்றியாக கறுப்பின மக்கள் கொண்டாடினர்)

நீக்ரோக்கள் என்றொரு இனம் உண்மையில் இல்லை. கறுப்பின மக்களை ஆபிரிக்காவிலிருந்து அடிமைகளாக கப்பலில் ஏற்றிவந்த நாள் முதலே இந்தப் பெயர் வெள்ளையர்களால் சூட்டப்பட்டது. பத்துக் கோடிக்கும் அதிகமான கறுப்பின மக்கள் (அதாவது 1930 இன் அமெரிக்க சனத்தொகைக்கு சமமானவர்கள்) அடிமை வியாபாரத்தின்போது கொல்லப்பட்டார்கள். அதாவது பத்துக் கோடி கறுப்பர்களை பலி கொடுத்து ஒன்றரைக்கோடி கறுப்பர்களை அடிமைகளாக வைத்திருந்தார்கள். 60 களில் நிலவிய இனவொதுக்கல் முறையில்கூட கல்வி வேலைவாய்ப்பு என்பவற்றில் முன்னுக்கு வராதபடி தடுக்கப்பட்டிருந்தனர். பஸ்களில் வெள்ளையர்கள் ஏறும்போது கறுப்பர்கள் எழுந்து இடம்கொடுக்க வேண்டும். இது சட்டத்தில் ஏற்கப்பட்டுமிருந்தது. இதைச் செய்ய மறுத்த ரோசா பார்க் என்ற பெண்மணி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய போராளியானார். பின்னர் இந்தப் போராட்டம் மார்ட்டின் லூதர் கிங்கினால் தொடர்ந்து எடுத்துச் செல்லப்பட்டது.

உண்மையான அமெரிக்கனான சிவப்பிந்தியனின் பழங்குடி இனத்தை தாழ்வான இனமென்று என்றைக்கு (வெள்ளையன்) முடிவெடுத்தானோ அன்றைக்கு ஒரு இனப்படுகொலையில் பிறந்ததுதான் அமெரிக்கா. இந்த நாட்டின் கடற்கரைகளை நீக்ரோக்கள் எட்டுவதற்கு முன்னரே இனவெறுப்பு என்ற வடு காலனியச் சமூகத்தை அலங்கோலப்படுத்திவிட்டது. பண்டைய கலாச்சாரம் கொண்ட செவ்விந்திய மக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டு வறுமை நிறைந்த ஒதுக்குப்புறப் பகுதிகளில் மந்தைகள்போல அவர்கள் முடக்கிவைக்கப்பட காரணமாயிருந்த வன்முறைக்கு மரியாதை தரும்படி இன்றும்கூட நமது குழந்தைகளுக்கு கற்றுத் தந்து வருகிறோம் என்று இனவெறியின் வேர்களை இழுத்துக் காட்டுகிறார் மல்கம்.

1963 களில் மதம் குறித்து பேசிவந்ததை குறைத்துக்கொண்டார் அவர்;. நல்லொழுக்கம் சம்பந்தப்பட்ட விவாதத்தை தள்ளிவைத்துவிட்டு சமூகக் கோட்பாடுகளையும் நடப்புச் சம்பவங்களையும் அரசியலையுமே முஸ்லிம்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அவரது பார்வையின் விரிவு மதத்தின் எல்லையை தாண்டவைத்தது. சேரிப்புற வாழ்வின் கறுப்பின மக்களுக்கு நல்லொழுக்கத்தைப் போதிப்பதிலும் தங்கள் அடையாளங்களை உணர்த்துவதிலும் தன்னம்பிக்கைகளை தூக்கிநிறுத்துவதிலும் முஸ்லிம் மதம் அவர்களிடம் ஒரு வரலாற்றுக் கடமையைச் செய்தது. இருந்தும் கறுப்பின மக்களின் போராட்டத்தை மேல்நிலைக்குக் கொண்டுவருவதில் மல்கம் இதைத் தாண்டவேண்டியிருந்தது. இதை எலிஜா முகமதுவின் “நேசன் ஒப் இஸ்லாம்” அமைப்பு சகித்துக்கொண்டதாகத் தெரியவில்லை.

“கொடுமைக்கு உள்ளாகிவரும் ஒருவர் தன்னைத் தற்காத்துக் கொள்ள எந்தவொரு முயற்சியும் எடுக்காமல் தொடர்ந்து அந்தக் கொடுமையை ஏற்றுக் கொண்டு வந்தால் அது குற்றம் என்ற கருத்துக் கொண்டவன் நான். கிறிஸ்தவ தத்துவத்திற்கு இப்படித்தான் விளக்கம் தரப்படுகிறது என்றால் இதைத்தான் காந்தியம் போதிக்கிறது என்றால் அவற்றை கிரிமினல் தத்துவங்கள் என்றே அழைப்பேன்” என்ற மல்கத்தின் கூற்று அவரது அரசியல் பார்வையின் அடுத்த அடிவைப்பாகக் கருதமுடியும். அதேபோல் கிறிஸ்தவத்தையும் காந்தியத்தையும் ஏற்றுக்கொண்ட மார்ட்டின் லூதர் கிங் இன் பாதையிலிருந்து வேறுபட்டதே மல்கத்தின்; பார்வை என்பதை இக் கூற்று உணர்த்துவதுமாயிற்று.

மெக்கா பயணத்தின் பின் அவரது பார்வை இன்னும் விரிவடைந்தது. 1964 இல் பெய்ருத், கெய்ரோ, நைஜீரியா, கானா என்றெல்லாம் பயணம் மேற்கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. சென்றவிடமெல்லாம் கிடைத்த வரவேற்பும் உற்சாகமும் அவரின் போர்க்குணத்துக்கு உரமாயின.

தானே உருவாக்கிக்கொண்ட வீண் தற்புகழ்ச்சிகளை தனக்குப் பலியானவர்கள் ஒப்புக்கொள்ளத் தயாரில்லை என்பதைக் கண்டுகொள்ளும்போது அதிர்ச்சியில் தள்ளாடும் அளவிற்கு வெள்ளையன் தன்மீது தானே தீவிரமாக அன்பு செலுத்தி வந்தான். மறுபுறத்தில் கறுப்பின மக்கள் தாழ்வுச் சிக்கலில் அகப்பட்டுப்போய் இருந்தார்கள். இந்த இரு எதிரும் புதிருமான உளவியல் தளங்களை அடித்து நொருக்குவதில் மல்கம் தீவிரமாகச் செயற்பட்டார். இதன் சிதைவிலேயே மார்ட்ன் லூதர் கிங் முன்வைத்த சகோதரத்துவம், ஒன்றிணைவு என்பன சாத்தியப்படவும் அர்த்தப்படவும் முடியும்.

“வெள்ளையர் கறுப்பர் பழுப்பு நிறத்தவர் அல்லது சிவப்பு நிறத்தவர் என எந்தவொரு இனத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும் ஒவ்வொரு மனிதனையும் மனிதனாக அங்கீகரிக்க வேண்டும். மனிதகுலத்தை ஒரு குடும்பமாகக் கருதினால் ஒன்றிணைவு குறித்தோ கலப்புத் திருமணம் குறித்தோ எந்தப் பிரச்சினையும் எழாது.” என்றார்.

கறுப்பின மக்களின் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டிருந்த வெள்ளையின சமூக சக்திகளை புறந்தள்ளியதோடு அவர்களின் பங்களிப்பு சம்பந்தமாக ஆரம்பத்தில் மல்கத்திடம் அக்கறையும் இருக்கவில்லை. அவரது பார்வைகள் விரிவடைந்த காலத்தில் அதற்காக மனம்வருந்தியதாகக் கூறப்படுகிறது. வெள்ளையின சமூக சக்திகள் தனியான அமைப்பு வடிவத்துள் நின்று அவர்களது சமூகத்துள் கறுப்பின மக்களின் நியாயப்பாடுகளை முன்வைத்து செயற்பட வேண்டும் எனவும் கறுப்பின மக்கள் தனியான அமைப்பாகவே தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும் அவர் இப்போது விரும்பினார்.

பெண்கள் பற்றி அவர் சொல்லிவந்த கருத்துகள் எல்லாம்; மூடத்தனமானது என்றே சொல்லத் தோன்றுகிறது. இந்த விடயத்தில் மதம் சொன்ன கருத்துகளுக்குள், சேரிப்புற வாழ்வியலுக்குள் பெண்களை வைத்துப் பார்த்த அவர் இப்போ அதிலிருந்தும் விடுபட ஆரம்பித்தார். பெண்களையும் தனது புதிய அமைப்பில் பொறுப்புகளில் சேர்த்தார். ஆனாலும் இதுபற்றிய தெளிவான வாதங்களை இந் நூலில் எங்கும் அவர் சொல்லாதது நெருடலாகவே இருக்கிறது.

மற்றபடி ஒரு தலைமைக்குரிய பக்குவங்களை அவர் எட்டியிருந்தார் என்பதற்கு அவரது கீழ்வரும் கூற்று சாட்சியாகிறது.

“சிந்தனை மீதும் சமூகங்கள் மீதும் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை நான் கடுமையாக எதிர்க்கிறேன். தன்னுடைய அறிவால் உணரும் எந்தவொரு விசயமும் அறிவுபூர்வமானது என்று நம்புவதற்கு ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமையுண்டு என்பதை நான் மதிக்கிறேன். இதேபோன்ற உரிமையை என் விசயத்திலும் ஒவ்வொருவரும் மதிக்கவேண்டும்.” என்றார். இக் காலப் பகுதியில் வியட்நாமின் மீது அமெரிக்கா தொடுத்த ஆக்கிரமிப்புப் போரை தீவிரமாக எதிர்த்தார். வியட்நாம் போரை எதிர்த்த முதல் தலைவர் மல்கம் என பாலச்சந்திரன் குறிப்பிடுகிறார். அதுமட்டுமல்ல உள்நாட்டில் கறுப்பின மக்களை இனவொதுக்கிக் கொண்டு இராணுவத்தில் கறுப்பினத்தவரையும் சேர்த்து – அமெரிக்காவின் இறையாண்மையைக் காப்பாற்றுவது என்ற பெயரில்- தொடுத்த இந்த யுத்தத்தை அம்மணமாக்கிக் காட்டினார்.

21 பெப்ரவரி 1965. கடைசிக் காலத்தில் சதா தொலைபேசி மிரட்லுடன் தனது மரணத்தை எந்நேரமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மல்கம் எக்ஸ் கொலைசெய்யப்பட்டார். மேடையில்வைத்து கொடுரமான முறையில் -அவரது உடன் மரணத்தை நிச்சயப்படுத்திக்கொள்ளும் வெறித்தனத்தோடு- கறுப்பினத்தவர் மூவர் சேர்ந்து துடிக்கத் துடிக்க பலமுறை சுட்டுச் சல்லடையாக்கினர். அவரது மூன்று குழந்தைகள், மனைவி முன்னிலையில் அவர் மரணமானார். 40 வயதை எட்டிப்பிடிக்கும் காலத்தில் அவர் வாழ்வு பறிக்கப்பட்டது. 22000 பேர் அவரது உடலைப் பார்த்து அஞ்சலி செலுத்தினர். 21 வயதில் பூச்சியத்திலிருந்து தொடங்கிய அவரது இனவொதுக்கலுக்கு எதிரான அரசியல்; முப்பத்தொன்பது வயதில் இந்தளவு அபரிதமான வளர்ச்சியைக் கண்டது வியப்பூட்டுகிறது. வீதிகள் தொடங்கி பல்கலைக் கழகங்கள் வரை ஒலித்த அந்த கலகக் குரலை மரணம் அடக்கியது.

நேசன் ஒப் இஸ்லாம் அமைப்பிலிருந்து வெளியேறியபின் “முஸ்லிம் மசூதிகள் கூட்டமைப்பு” என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். பின்னர் “ஆபிரிக்க அமெரிக்கர்களின் ஒற்றுமை அமைப்பு” (ஓ.ஏ.ஏ.யூ) என்ற அமைப்பை மதச்சார்பற்றதாக உருவாக்கினார். இது மனித உரிமைகளை அடைவதற்காக ஆக்கபூர்வமான திட்டத்தின்கீழ் ஆபிரிக்க அமெரிக்கர்களை ஒன்றுதிரட்டுகின்ற குறுகிய கண்ணோட்டம் இல்லாத ஓர் அமைப்பாகும் என்று அறிவித்தார். கறுப்பின மக்களது அதிகாரத்தைக் கட்டமைத்தல், கறுப்பின மக்களின் சுயமரியாதை, பொருளாராத மேம்பாடு, அரசியல் ரீதியலான அணிதிரளல்.. இவற்றுக்குக் கீழ் எல்லா அமைப்புகளும் ஒன்றுபட வேண்டும் என்று விரும்பினார்.

இந்தப் போக்கு “நேசன் ஒப் இஸ்லாம்” அமைப்பின் பகையுணர்வைச் சந்தித்தது என்பதற்கு மல்கத்தின் கொலை சம்பந்தமாக எலிஜா முகமது சொன்னதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்து சாட்சியமளிப்பதோடு மனிதாபிமான அடிப்படையில் புரிந்துகொள்ளப்பட முடியாததும் ஆகும். அத்தோடு இந்தக் கூற்றானது கொலையில் நேசன் ஒப் இஸ்லாமையும் சந்தேகிக்க வைத்ததில் வியப்பில்லை.

“அவருடைய முட்டாள்தனமான போதனையே அவருக்கு மரணத்தைக் கொண்டுவந்தது. எனக்கும் உங்களுக்கும் அல்லா அனுப்பிவைத்த நல்ல விசயங்களை பைத்தியக்காரர்கள் நாசம் செய்வதை நான் அனுமதிக்கப் போவதில்லை.” என்பதே அக் கூற்று.

கைதேர்ந்த கொலைகளை செய்வதன் மூலம் அரசியல் போக்குகளைக் கட்டுப்படுத்தும் சி.ஐ.ஏ, எப்.பி.ஐ தான் இதைச் செய்தது அல்லது சூத்திரதாரியானது என்று கூறப்படுகிறது. “கறுப்பின மீட்பரின் எழுச்சியை உடனடியாக நாம் நிறுத்தவேண்டும்” என எப்பிஐ உயரதிகாரி எட்கார் கூவர் தனது கீழதிகாரி ஒருவருக்கு கடிதம் எழுதியிருந்தார் என பின்னாளில் தெரியவந்தது. மல்கம் எக்ஸ் இனைப் பற்றி எப்.பி.ஐ உளவுதெரிந்து வைத்திருந்த ஆவணங்கள் 44 ஆயிரம் பக்கங்களைக் கொண்டது. அவரது கொலையுடன்தான் இந்த ஆவணம் பூர்த்திசெய்யப்பட்டது.

பிரபலமான உளவியல் வல்லுனரான டாக்டர் கென்னத் பி கிளார்க் சொன்னார். “அவர் தேடிய மரியாதைக்குரிய ஓர் இடத்தை எட்டிப்படிக்கும் நேரத்தில் அவர் மரணமடைந்தது துயரமானது.”

கறுப்பின மக்களின் எழுச்சியை ஒரு அரசியல் இயக்கமாக (ஓ.ஏ.ஏ.யூ) வடிவமைக்க முற்பட்ட போக்கையே அமெரிக்க உளவுப்படை மல்கத்தின் கொலையால் தடுத்து நிறுத்தியது என பலர் நம்புகின்றனர். இறுதிக் காலங்களில் சோசலிசம் பற்றி அவர் கரிசனை கொண்டதாகவும் இந் நூலின் பிற்குறிப்பில் சக மொழிபெயர்ப்பாளர் பாலச்சந்திரன் குறிப்பிடுகிறார்.

லண்டன் பத்திரிகையாளர் கூட்டத்தில் மல்கத்தின் மரணம் கறுப்பர் இயக்கத்திற்கு ஒரு பின்னடைவு என்று சொன்ன -எழுத்தாளரும் நாடகாசிரியருமான- ஜேம்ஸ் பால்ட்வின் வெள்ளையினப் பத்திரிகையாளர்களைச் சுட்டிக்காட்டி “நீங்கள்தான் இதற்குக் காரணம்…யார் இதைச் செய்திருந்தாலும் இது உருவானது மேற்குலகின் உலைக்களமான அமெரிக்கக் குடியரசில்தான். ஆபிரிக்காவை ஐரோப்பா “கற்பழித்ததால்தான்” இனச்சிக்கல்கள் உருவாயின. மல்கத்தின் முடிவு அங்குதான் தொடங்கியது.” என்றார். ஆம், மனிதகுலம் இருக்கும்வரை இந்தக் குரலுக்கு அர்த்தம் இருந்துகொண்டே இருக்கும்.

வரலாறுகள் தனிமனிதர்களால் அல்லது தனி அமைப்புகளால் வடிவமைக்கப்படுவதில்லை. கறுப்பின மக்கள் மத்தியில் அங்கும் இங்கமாக பல அமைப்புகள் செயற்பட்டுக் கொண்டிருந்தன. மார்ட்டின் லூதர் கிங் இன் போராட்டங்களும் முனைப்பாக நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில்தான் மல்கம் எக்ஸ் உம் களத்தில் இருந்தார். இருவருக்கும் இடையில் கொள்கையளவில் உடன்பாடு இருக்கவில்லை. ஆனாலும் ஒருவரையொருவர் அடித்துக் கொள்ளும் நிலையிலும் இல்லை. மார்ட்டின் லுதார் கிங் அகிம்சாவாதி. அத்தோடு கத்தோலிக்க மதபோதகராக இருந்தவர். மல்கம் கத்தோலிக்க மதத்தை, அதன் இனவொதுக்கல் இசைவை எதிர்த்து சகோதரத்துவத்தைக் கடைப்பிடித்த முஸ்லிம் மதத்துக்கு மாறி அதன் மதபோதகராகவும் செயற்பட்டவர். கிங் வெள்ளையினத்தவரோடான சகோதரத்துவத்தைக் கோரினார். சமவுரிமையைக் கோரினார். குடியுரிமையைக் கோரினார். மல்கம் இவைகளைச் சாத்தியப்படுத்தக்கூடிய நுண் அரசியலுக்குள் ஒரு கலகக்காரனாக செயற்பட்டார். நீக்ரோக்களின் உருவாக்கம், கறுப்பு, வெள்ளை என்பதன் அரசியல், மூலமனிதன் பற்றிய ஆய்வுகளை முன்நிறுத்தியமை, சிந்தனையின் வெள்ளைமயமாக்கல் போன்றவை அடிமை மனோபாவத்தினை இயல்பாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்த கறுப்பின மக்களை தன்நம்பிக்கை கொண்டவர்களாகவும் சுயமரியாதை கொண்டவர்களாகவும் நிமிர்த்தியது. உரிமையைக் கேட்டுப் பெறுவது என்ற நிலையிலிருந்து அதை தாமாகவே எடுத்துக் கொள்வதற்கான போர்க்குணத்தை வழங்கியது.

மல்கம் எக்ஸ் இன் இறுதிக்கால அரசியல் போக்கு இந்த போர்க்குணங்களை உள்வாங்கி இன்னொரு பரிமாணத்தை வழங்கிவிடக்கூடிய “ஆபத்தை” அமெரிக்க உளவுப்படை சரியாகவே கணித்தது. மல்கம் கொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று கூறினார் மார்ட்டின் லூதர் கிங். அவரும் மூன்று ஆண்டுகளின்பின் கொலைசெய்யப்பட்டார். மல்கம் எக்ஸ் வளர்த்தெடுத்த போர்க்குணம் சமூக சாராம்சமாகி கிங்கின் வழிநடத்தலுக்குள் கலந்துவிடலாம் என்ற “முன்னெச்சரிக்கை” சிலவேளை கிங்கின் மரணத்தைக் கோரியிருக்கலாம். எது எப்படியோ மல்கம் கணித்திருந்ததுபோல எதிர்பார்த்ததுபோல மல்கத்தின் மரணம் முந்திக்கொண்டது.

– ரவி (21102006)

நூல் விபரம்…

மால்கம் எக்ஸ் – என் வாழ்க்கை
மால்கம் எக்ஸ் சொல்ல எழுதியவர் : அலெக்ஸ் ஹேலி
தமிழாக்கம் : வெ.கோவிந்தசாமி
வெளியீடு : விடியல் பதிப்பகம், 11 பெரியார் நகர், மசக்காளிபாளையம் (வடக்கு) கோயம்புத்தூர் 641 015
(21.10.06 அன்று பேர்ண் (சுவிஸ்) இல் நடந்த “திரைப்பட இலக்கிய விழா” நிகழ்ச்சியில் இந் நூல் அறிமுகம் செய்யப்பட்டது. இந் நிகழ்ச்சிக்காக தொகுக்கப்பட்டது இது.)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Pages

Follow சுடுமணல் on WordPress.com

Archives

Blog Stats

  • 30,546 hits
%d bloggers like this: