அழிவுகளைக் கணக்கிட்டுக் கொள்ளும்
காலங்கள் இவை.
இராணுவவீரன் களைத்துப் போய் இருக்கிறான்.
குண்டுவீசி பெயர்த்த இடிபாடுகளின் நடுவே
இவன் ஒரு சிகரட்டையோ கட்டையோ ஊதியபடி
இளைப்பாறுகிறான்.
பதவிநடை பிசகாமல் அரசியல்வாதிகள்
ஒலிவாங்கி; நோக்கி நடக்கின்றனர்.
பத்திரிகையாளர்கள் குறிப்பெடுக்கின்றனர்.
ஒருவன் தன்னை பாதுகாக்கும் உரிமை என்பது
இன்னொருவனை
அல்லது இன்னொருவளை அழிப்பதாகும்
என்பது கோட்பாடாகிறது.
ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியவனுக்கு
பயங்கரவாதி பட்டமளிக்கப்படுகிறது.
போர்விமானத்தின் இரைச்சலில் ஊர்
ஒளித்துக்கொள்கிறது பதுங்கு குழிகளினுள்.
குண்டுகள் வலைவீசி இழுத்த
கட்டடங்களின் சிதைவுக்குள்
குழந்தை அந்தரிக்கிறது.
நாய் இருப்புக் கொள்ளாமல் ஓடித்திரிகிறது.
கிற்லரின் யூதவதை முகாமிலிருந்து கிளம்பிய
ஒரு பிசாசுபோல்
புகைமண்டலங்களின் நடுவே
வெளித்தெரிகிறது இஸ்ரேல்.
மீண்டும் லெபனானுக்குள் புகுந்துகொள்கிறது.
ஆயுதங்களை பிரசவிக்கும் ஆலைகளில் இங்கு
இயந்திரங்கள் சூடாகிக்கொண்டிருக்கின்றன.
இவர்களுக்கான சொர்க்கங்கள்
தமது மண்ணிலேயே எழுதப்பட
ஏழைநாடுகளுக்கான சொர்க்கங்கள்
அடுத்த பிறவியில் என
சிலுவையை உயர்த்துகின்றனர் பாதிரிமார்
வத்திக்கானின் மேலாக.
அவர்கள் எம்மிடம் காவிவந்த பைபிள்
இப்போதும் எம்மிடம் இருக்கின்றன.
எமது வளங்கள் எம்மிடம் இல்லை.
சபிக்கப்பட்ட பூமியின் ஏழ்மைக்கு
சபிப்பவன்
போரை முதலுதவியாய் வழங்குகிறான்.
அழி! எஞ்சிய எல்லாவற்றையும் அழி!
மனிதாபிமானம் பற்றிப் பேசு
போர்நெறி பற்றிப் பேசு
ஓயாது குண்டுவீசு, கொல்
கொன்று போடு ஒரு தாயையோ
குழந்தையையோ அன்றி ஒரு நாயையோ
கிடையாதபோது
அசையாமல் நிற்கும் ஒரு பல்லிக்குமேல் தன்னும்
குண்டுவீசு.
தன்னைப் பாதுகாக்கும் உரிமை என்பது
மற்றவனை அழிப்பதென்பதாகும்.
வீசு!
– ரவி (05082006)