அவன் கூரைமீது ஏறி நிற்கிறான்
அச்சத்தின் ஒரு முளைப்பாய்.
குளிர் குலைத்த அதிகாலைப் பொழுது
இரவு உடையில் அந்த குர்திஸ்காரன்.
கூடாய்த் தொங்கியது எமது
அகதிகள் முகாம்.
சுற்றிவர பொலிசார்
மோப்ப நாய்கள்
அதிகாலை நான்கு மணிய
தூக்கப் பொழுதின் கிழிசல்களை
அரவமற்றுக் கடந்து
கைதுசெய்யும் தந்திரத்தில் தோற்றவர்கள்,
இப்போ சுற்றிவர நின்றனர்.
அவன் இறங்குவதாயில்லை.
மெல்லத் தாவி ஏறுகிறான் தயைகூர்த்து
மொழிபெயர்ப்பாளன்,
கையசைத்துக் கையசைத்து.
~~தம்பி குதிச்சிடாதை! அவங்கள் உன்னை
நாட்டுக்கு திருப்பி அனுப்ப மாட்டம் என்ற
உறுதிமொழி சொல்லுறாங்கள்.
குதிச்சிடாதையும்… மெல்ல கீழை இறங்கி வாரும்.||
நிராகரிக்கப்பட்ட அரசியல் தஞ்ச விண்ணப்பம்
அவன் அறையில் தூங்குதல் கூடும்.
அவன் தூக்கமற்று குளிருற்றான் கூரையில்.
வானம் இப்போதும்
தொலைது£ரத்தில்தான்.
என்ன நடக்கப் போகிறது!
அண்ணார்ந்தலை விடவேயில்லை நாம்
வாயைத் திறந்தபடி.
அவன் போராடினான்
பொலிசார் மெல்ல நமட்டாய் சிரிப்பதும்
இரகசியப்படுவதும்
நிச்சயமற்ற மனிதர்களுக்கு அச்சம் தந்தன.
எனது மனசில் அவன் உதைத்து நின்றான்
நேற்றுக் காலைதான் வீட்டுக்கு போட்டோ அனுப்பியிருந்தேன்,
பனித்திரளுக்குள் புதைந்து நின்று.
முகத்தில் வரவழைத்த சிரிப்பு,
கையில் பனித்திரள் ஏந்தல்.
மனசுக்குள் அவன் சிறகடித்து சிறகடித்து
மோதி விழுகின்றான்.
கீறல்களால் அகதி அகதி என
பிராண்டுகிறான்…
பிராண்டினான்.
இந்த இருபது வருடங்கள்
ஒரு கீறலைத்தன்னும் அழித்து
ஊதுவதில்
தோற்றுத்தான் போயின!
– ரவி (20072006)
(நான் கண்ணுற்ற உண்மைச் சம்பவம் இது.)