தனதும் தன் பற்றியதுமான அத்தாட்சிப் பத்திரங்களுக்கு
கொழும்பிடம் விண்ணப்பித்தபடி
அகதியாகிறான் இவன்.
புலம்பெயர் தேசத்தில்
காசு கேட்டு வருகிறான் தமிழ்மக்களுக்காக
இவன்களிலொருவன்.
அரசின் ஊதியத்தை எதிர்பார்த்து
வாழ்கிறான் ஒருவன் அங்கு.
வரிகேட்டு நிற்கிறான் இவன்களிலொருவன்.
தன் தோட்டத்தில் வியர்வை பூத்து
மரக்கறிகளை காய்க்கிறான் அவன்
வரி கேட்டு பிடுங்குகிறான் இவன்.
மண் கானல் நீரில் நனைகிறது.
ஆலைகள் சுவடில்லாமல் போயிற்று
ஆனால் மண்ணின் பெயரில் வரி மட்டும்
செழிக்கிறது.
இதில் நாம் எதை மீட்டோம்.
இழந்தவைகள் ஏராளம்.
கதறுகிறாள் தாய்
கண்ணீர் வடிக்கிறான் தகப்பன்
காணாமல் போகிறார்கள் பிள்ளைகள்;.
நாளுக்கொரு கொலை காணா தேசமொரு தேசமா என
வரலாறு சிதைகிறது.
போர் நிறுத்தமென்ன போர்நிறுத்தம்
உயிர்கொல்லிப் பிசாசுகள்
கூவித் திரிகின்றன.
இனம்தெரியாதோரால் சுட்டுக் கொலை என
எழுதுமோர் கருத்துச் சுதந்திரத்தைப்
பாட
எமக்கு வெட்கமற்றும் போய்விட்டது.
சிதைவுகளை நிர்மாணித்த போரையும்
உயிர் சப்பி
உடலங்களை துப்பும் பிசாசையும்
போர்த்த ஓர் மண்ணில்
பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என
ஓடுகின்றார் மனிதர்கள்.
சமாதானத்தை எங்காவது கண்டால்
காட்டுங்கள் இந்த
மனிதர்களுக்கு!
– ரவி (21052005)