ஊடகவியலாளரின் வெளி
இயலற்றுப்போனதாலோ என்னவோ
ஊடகர் என வலுவிழந்திற்று அந்த வார்த்தை.
பொருத்தமானதுதான்.
சினிமா இன்றி தமிழ்த் தொலைக்காட்சி
அணுவளவும் அசையாது
என்றதான இருப்பில் கனவுகள்
விற்கப்படுகின்றன புகலிட தேசத்திலும்.
இடையில் ஒரு நொறுக்குத் தீனிபோல
அல்லது மூளைச்சலவையாக
செய்திகள் தயாராகின்றன.
செய்தி வாசிப்பவர்களை மட்டுமே
காட்சிகளாய்த் தரும் இயலாமை,
பிரச்சாரங்களின் நெடி – இவைதாண்டி
வெளிகொள்ள வலுவற்றுப் போகிறது நம்
தொலைக்காட்சிகளின் ஊடகவியல்.
இப்படியாய் சலிப்புற்றிருந்த பொழுதுகளில்
சிலிர்ப்புத் தரும் ஒரு தளிராய்
ஊடகவியலில் படர்ந்தது
வெக்ரோன் தமிழ்த் தொலைக்காட்சி.
திரும்பவும் திரும்பவும் பேனாக்கள்
துப்பாக்கிகளின் குழல்களில்
சொருகப்பட்டு எய்யப்படுகின்றன.
பயங்களைப் பரப்பும் வெடியோசையில்
பேனாக்களின் சிதறுபுகை
அழுத்தமாகவே படிகிறது மனதில்.
சருகுகளுள் வீசப்பட்டுக் கிடக்கிறான்
இன்னொரு பேனாதாங்கி சிவராம்.
எங்கு நாம் போய்க்கொண்டிருக்கிறோம் என்ற
கேள்விகளை கழற்றிவிட முடியவில்லை.
இதுவும் வியாழன் இருபத்தியெட்டு.
நள்ளிரவில் மூடிக்கொள்கிறது
வெக்ரோன் தொலைக்காட்சி.
நாடுகள் உலவிய காட்சிகள் மறைந்துகொள்கின்றன.
விபரங்கள் நீண்ட செய்திகள் ஓய்ந்துபோகின்றன.
வேதனைப்பட மட்டுமே சொல்லிச் செல்கிறது
வரலாறு, அதிர்ந்துபோகவல்ல.
யார்செய்தார் இதனை என்றுகூட தன்
இறுதிவார்த்தைகளை சொல்லிவிட முடியாமல்
முடிந்துகொள்கிறது பாருங்கள்.
அந்தளவிலும் பாய்கிறது
குரல்கொல்லிப் பிசாசு.
வான்வெளியில் வீசப்பட்டுக்கிடக்கிறது வெக்ரோன்
சம்பந்தமற்றுப்போன இன்னொரு தீர்ப்பில்
மண்ணில் குருதிதோய்ந்து கிடக்கிறது
இன்னொரு பேனா, சிவராமின் கையைவிட்டு.
சக மனிதனின் வார்த்தைகள்மேல்
சகிப்பற்றுத் தொலைத்தோம் எம்
தேசத்தை – அவர்களென்ன
நாமும்தான்!
-ரவி (01052005)