சகோதரியே
நீ
வெடிகுண்டை உன் உடலின்
பாகமாக்கிய கணத்திலேயே
இந்த மண்ணிலிருந்து உனது வேர்கள்
அறுக்கப்பட்டுக் கொண்டிருந்ததை
உணர்ந்திருப்பாய்.
மனித அறிதலுக்கு உட்படாத உன்
உணர்வுகளை நீ
யுகங்களை விழுங்கி அவஸ்தைப்பட்டதை
புயலின் முன்னரான மேகக்கூட்டங்கள்
பேயோட்டமாய் காவிச்சென்றதடி.
உடலை சிதிலமாக்கிய வெடிகுண்டோ
உன் முகத்தை
இரத்தசாட்சியாய் விட்டுச்செல்லும் என
நீ கற்பனைபண்ணியிருக்க சாத்தியமில்லைத்தான்
மனிதக் குண்டின் கோரத்தை
துண்டமாகிய உன் தலை
வரைந்துகாட்டியதை எப்படி மறப்பது
எப்படி நாம் வாழாவிருப்பது?
மனிதச் சிதைவின் காட்சிக்கூடத்தில்
உன் முகம்
ஆயுளையும் வென்றதுபார்.
இதுகுறித்து மண்பெருமை பேச என்னால்
முடியவில்லை
துரோகிகளை தண்டித்தவன்;
பின்னாளில் துரோகியாகிப்போகிறான்
துரோகிகளாய்ப் போனவர்களின் வாரிசுகள்
வரையறுப்பாளர்களின் வாயாகிப்போகிறார்கள்.
ஆனாலும் பார் நாம்
தொடர்ந்தும்
வரையறை செய்துகொண்டுதானிருப்போம்.
பால்யத்தின்மீது நாம் வெடிகுண்டுகளை
பொருத்திக் கொண்டுதானிருப்போம்;
நீங்கள்
குண்டுகளுடன் பாய்ந்துகொண்டேயிருங்கள்.
அவர்களின் வரையறுப்புகளின்படியேதானும்
துரோகி சமன் போராளி என
உயிர்ச்சமன்செய்யும் வாய்ப்ப்பாட்டை
புரிந்துகொள்ளமுடிவில்லை எம்மால்.
தியாகத்தின் அதிஉணர்வையும்
சேர்த்துக்கொன்றதுவோ
நீ அணிந்த வெடிகுண்டு என
சந்தேகப்படுகிறேன் நான்.
இன்னமுமாய் பார்
உனது முகவரியை தியாகத்தின்
பட்டியலிலிலிருந்து மறைத்துவிடுகிறது
கிறுக்கப்பட்டுக்கொண்டிருக்கும்
சமாதானத்தின் முகப்போவியம்.
சகோதிரியே
உனது இரத்தசாட்சியை மீறி
கனவிலும்கூட துலங்க
மறுக்கிறதடி சமாதானம் என்ற
செய்தியை நான்
சொல்வதற்காக என்னை மன்னித்துக்கொள்!
– ரவி (09072004)