ஊரோவியம்
Posted January 7, 2004
on:- In: கவிதை
- Leave a Comment
ஒரு கனவாவது கண்டுவிடவேண்டும்
என்
சிறுபருவ நாளொன்றை.
நாளும் பொழுதுமாய் அன்று நான்
இளந் து£ரிகை கொண்டு
வரைந்த
எம்ஊர்ச் சித்திரத்தை
இப்போதைய என் ஊர்சுற்றலாலும்
அழிக்கமுடியவில்லை.
பதினெட்டு ஆண்டுகளை
பனித்தேசத்தில் படரவிட்டு இப்போ
படர்ந்தும்போனேன்தான்.
ஆனாலும் எனது ஊர்
என்னிடம் ஓவியமானது.
யுத்தம் நடந்துசென்ற வீதிகளெல்லாம்
சிதைந்து
மணல்வாரி ஒழுங்கைகளாக,
ஒழுங்கைகள் ஒற்றையடிப்பாதையாகிப் போன பின்னும்
எதுவும்
என் இளமைப்பருவ ஊரை
அழித்துவரையமுடியாமல் போனதுதான், போ!
எனது இளமைப்பருவ ஊர்
அழிக்கப்பட முடியாததாய் மனசில்
மாட்டப்பட்டே இருக்கிறது.
எனது இளமைப்பருவ நட்புகளும்
என்னிடமே இருக்கிறது.
என் பால்ய நண்பர்களை கண்டதும் பேசியதும்
மிக சாதாரணமாகவே இருந்தது.
அம்மாவைக் கண்டதும்
பேசியதும், ஏன் கோபித்ததும்கூட
இயல்பாகவே இருந்தது.
குறுகிய சந்திப்பின் பின்னான ஒரு நீள்
பயணத்தின்பின்
எதுவெதுவெல்லாமோ பேசியிருக்கலாம் என்ற
நினைவுகளின் முளைப்புகள் இப்போ
வயற்காடுபோல் விரிகிறது.
வலிந்து நான் பிரதியீடு செய்யும்
முனைப்பிலிருந்து ஊர்ச் சித்திரம்
நழுவிவிடுகிறது.
எனது பயணத்தின் வலிமை
அதன் காத்திருப்பு வருடங்கள்
எல்லாமே
தோற்றுத்தான் போயிற்று.
இன்னொரு பயணத்தின் உந்தல் எனது
இளமைப் பருவத்து ஊரோவியத்தால்
வளைந்துபோயுள்ளது.
சிறுபராய நாளொன்றை நான்
கனவில் பயிரிடும் கணமொன்று
எனக்கு வேண்டும்
பசித்துப்போயிருக்கிறேன்.
– ரவி (070104)
Leave a Reply