நான் அநேகமாக நித்திரையாகிக் கொண்டிருந்தேன். நான் வாசித்துக் கொண்டிருந்த சிறுகதைத் தொகுப்பின் நான்காவது கதையை நான் வாசித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். கையிலிருந்து புத்தகம் நழுவி தலையணையில் மெல்ல சாய்ந்துகொண்டது. அதன் போதையை நான் சுகித்திருக்க வேண்டும். கையில் புத்தகங்களை எடுத்தாலே இடையில் ஓர்; பக்கம் திறந்திருக்க நான் தூங்கிப் போய்விடுவதுண்டு. எழுத்து என்னில் ஊறுவதும் எழுத்தாளனிடமிருந்து நான் விடைபெற்று அதை நகர்த்தபவனுமாய்ப் போவேன். பின்னர் தூங்கிப் போய்விடுவேன்.
இப்போ அவன் தொலைபேசியில் தொடருகிறான். ஏன்ரா கடிதம் எதுவும் போடுவதில்லை. ரெலிபோனும் அடிப்பதில்லை. சண்டை முடிஞ்சுதெண்டாப்போலை எல்லாம் சரிவந்திட்டுதெண்டு நினைக்கிறியோ… ஒரே கஸ்ரமாயிருக்கு. கொஞ்சமாவது சாசு அனுப்பிவை.
ம்…
தொலைபேசியை வைத்து பல நிமிடங்கள் போயிருக்கும். என்னிடம் சொல்வதற்கு இப்போதெல்லாம் வார்த்தைகள் தயாரிக்கப்பட்டும் இருப்பதில்லை. தானாகவே வருவதுமில்லை. இந்த விடயத்தில் நான் களைத்துப் போயிருந்தேன். கொழும்பு வந்து தொலைபேசி எடுத்து.. பின் யாழ்ப்பாணம்…பின் ஊர் மனையில் முளைத்த ரெலிகொம்கள்.. என இப்போ வீட்டுக்கும் வந்தாயிற்று. சண்டைகள் நின்று அமைதி வந்து செய்துவிட்டுப்போன சலுகை.
இப்போதெல்லாம் ஓம் என்று மட்டும் சொல்லிவிட்டு பேசாமல் இருந்துவிடுவது சுலபமான வழியாகப் பட்டது.
பனிக்காலம் தொடங்கி நாட்களாகியும் காருக்கு இன்னும் வின்ரர் ரயர் மாற்றாததால் பொலிசில் மாட்டுப்பட்டிருந்தேன். ஒரு வாரத்துக்குள் ரயரை நான் மாற்றிவிடவேண்டும். கால அவகாசம் மிகக் குறுகியதாகப் பட்டது எனக்கு. ஒரு பதினைந்து கோப்பி குடிக்கும் காசு போதும் இதைச் செய்வதற்கு. இன்று திகதி 20. சம்பளம் வர இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. அதற்கு முன்னரே இதை நான் செய்து முடித்துவிட்டு அந்தத் துண்டை -ஆதாரமாக- பொலிசில் சென்று காட்ட வேண்டும். இந்தப் பணத்தை உருட்ட நான் யோசித்துக் கொண்டிருந்தேன். தொலைபேசி உரையாடலை நான் மறக்க வேண்டும்.
பியர் ஒன்றை எடுத்துக் கொள்கிறேன். மெல்லிய தாகமாய் இருந்திருக்க வேண்டும். புத்தக அலுமாரியில் புத்தகங்களை ஒழுங்காக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் வேலைத்திட்டம். சரி அதை இன்று முடித்துவிடுவோம். புத்தங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஜீவியாக என்னுடன் பேச.. நானும் ஆத்மாநாம் உடனோ கலாமோகனுடனோ அல்லது அமார்க்ஸ் உடனோ இன்னும் போய் கப்ரால் உடனோ பேசிக்கொண்டிருந்தேன். புத்தக அடுக்கலும் சரியாய்ப் போய்விட்டது. அள்ளி அடைசிவிட்டு பியரையும் முடித்துக் கொள்கிறேன்.
இப்படியாக நாட்களில் நான் உருண்டுகொள்கிறேன்.
நான் இப்போ அயர்ந்து தூங்கியிருந்திருக்க வேண்டும். இன்றும் தலைமாட்டில் புத்தகம் நழுவிக் கிடந்தது. நான் எழுந்தபோது அதுவும் தரையில் விழுந்தது. என்னதான் அவசரம் இருந்தாலும் அதை அப்படியே தரையில் விடுவது எனக்கு உடன்பாடானதாக இருப்பதில்லை. சிறுவயதில் புத்தகத்தை காலால் மிதித்தால் தொட்டுக் கும்பிட வேண்டும் என்று எனது அப்பா சொல்வது அல்லது நிர்ப்பந்திப்பது சரியானதாகப் படுவதால் தட்டாது செய்வேன். அது எனக்கு இப்போதும் சரியானதாகவே படுகிறது.
இன்று ஞாயிற்றுக் கிழமை. தொடர்ச்சியாக வேலைசெய்து நான் கழற்றிவிடப்படும் நாள் இன்றுதான். நான் இடைஞ்சலற்று, அலார்ம் ஒலியற்று, நீண்டுவளரும் தூக்கத்தில் பயணிப்பதில் ஆனந்தம் கொண்டிருந்தேன். அதுவும் மீண்டுமோர் ஊர்த் தொலைபேசி மணியால் உதறப்பட்டுவிட்டது. இனி தூங்குதல் சாத்தியமில்லை. மதிய உணவுக்கு ஏதாவது தயார் செய்தாக வேண்டும். கொஞ்சம் காலாற காற்றுவாங்க ஒரு நூறு மீற்றராவது நடக்க வேண்டும். வேலைக்கு இழுத்துச் செல்லும் எனது காரை திரும்பிப் பார்க்காதிருக்க வேண்டும். எல்லாம் சிறிய ஆசைகளாகவும் பட்டது. சாத்தியப்படுமா என்பதில் பதட்டமும் இருந்தது. சிலவற்றை சாதித்தேன்.
தொலைக்காட்சிமுன் குந்துகிறேன். எல்லாம் ஈராக்கினுள் படையெடுப்புச் செய்துகொண்டிருந்தன. பொய் எது உண்மை எது என்று மண்டையைப் போட்டுக் குழப்புவதற்கு கொஞ்சம் அரசியலும் தேவைப்பட்டது. முட்கம்பிகள் அருகில் 4 வயதுப் பாலகன் தகப்பனுடன் இருத்தப்படடிருந்தான். தலையை மூடி சாக்கு கட்டப்பட்டிருந்தது. பத்திரிகையாளன் குறிவைத்து சுடப்படுகிறான். குழந்தைகள் எரிகாயங்களில் அலறுகிறார்கள் வைத்தியசாலையில். வைத்தியசாலைமீது குண்டு விழுகிறது. மனித உரிமைகள் பற்றி அமெரிக்க ஜனாதிபதி உரையாற்றுகிறார். அவரின் இழுப்பில் சுற்றிச் சுற்றி ஓடுகிறது பிளேயர் -பிரித்தானியப் பிரதமர். அமெரிக்க ஜனாதிபதியையும் கிற்லரையும் அருகருகாகக் கொணர்ந்து செய்தியை முன்னறிவுப்புச் செய்கிறது அல்மெனார் என்ற லெபனான் தொலைக்காட்சி. எல்லாம் தடல்புடலாக நடந்துகொண்டிருந்தது.
இன்னும் இரண்டு மணி நேரத்தில் நாதனும் அவனுடன் கூட்டாளிகளும் வரப்போகிறார்கள். மனிதாபிமான அடிப்படையிலாவது பங்களிப்பு செய்யும்படி கேட்பார்கள். சகல ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடும் ஒரு இனத்தைச் சேர்ந்தவன் நீ என்று போன தடவையும் ஞாபகப்படுத்திவிட்டுப் போனார்கள். இன்று மீண்டும் வருவதாக அடித்த தொலைபேசி ஞாபகத்துக்கு வந்துபோனது. நாதனுடன் வந்த அந்த தடித்த இளைஞன் பெயர் மறந்துவிட்டது. அவன் தனது கையில் பைல் ஒன்றுடன் நட்ட கல்லுப் போன்று உட்கார்ந்திருந்தான். மற்றவர்கள்போல் எதுவுமே விவாதிக்காமல் இருந்தவன் போகும்போது கதவுக்கு வெளியில்… அண்ணை! ஒருநாளைக்கு வருத்தப்படுவீங்கள் என்றுவிட்டுப் போனான்.
எழுபதுக்கும் மேற்பட்ட உலக நாடுகளில் ஈராக் யுத்தத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. உலக வரைபடத்தில் இன்னொரு நாடாகப் போகிறது எங்கள் நாடு என்பவர்கள் இந்த யுத்த எதிர்ப்பை எங்கு காட்டப் போகிறார்கள் என்று நான் நினைத்தது எனது தவறாகப் பட்டது. இடையிடையே நான் ஏதாவது அதீதமாக யோசிக்கிறேனா என்றுவிட்டு தரையிறங்கிவிடுவேன்.
தொலைக்காட்சியில் வெடிகுண்டுகள் புகைமண்டலங்கள் அழுகுரல்கள்… ஈராக்கிய மக்களின் எதிர்காலம் மீது கவிழ்ந்துகொண்டிருந்தது.
வெளியில் நல்ல வெயில். குளிரற்று காலநிலை சிரித்துக்கொண்டிருந்தது. அவர்கள் வருவார்கள். நான் தமிழன்தான் என்பதையும் எனது இனம் ஆக்கிரமிப்புக்கு எதிரானது என்பதையும் அவர்கள் மீண்டும் ஞாபகப்படுத்திவிட்டுப் போவார்கள். மனிதாபிமானம் பற்றியும்தான்.
தொலைபேசியின் இருப்புக்கு அடியில் எனது குழந்தை பத்திரமாகச் சொருகியிருந்த பேப்பர் கட்டிங் காற்றிடைஅசைகிறது. பட்டினியில் வாடும் ஆபிரிக்கக் குழந்தைக்கான உதவிகேட்டு அது என்னை அசைத்துக் கொண்டிருக்கிறது.
– ரவி (சுவிஸ்)