யுத்தம்
தொலைக்காட்சிகளின் பிரமாண்டங்கள்
வெடிகுண்டுகளின் பேரோசை
புகைமண்டலங்கள் காற்றை விழுங்கி ஏப்பமிட
அதிர்வுகளில் ஈடாடியது
ஈராக் பூமி
பதுங்குகுழியுள் ஒளிந்திருக்கும் ஓர்
குழந்தையின் இதயஒலி
உயிரோசையாய் அதன்
குருத்துலகை அதிரச் செய்தது.
கோரம்,
இதையும்விட வேறெதுவாய்…
எனக்கு சொல்லத் தொ¤யவில்லை.
ஆக்கிரமிப்பாளரின் காலடிகளை
ஈராக்கிய பாலைவனங்களும் அழித்துவிட
மறுப்பதாய்
வரலாற்றின் தொடர்ச்சியில் நின்று
நான் பேசுகிறேன்.
நிச்சயமின்மையாய்
எரியும் ஒரு திரியின்மேல் வாழ்வு
ஏற்றப்பட்டதாய் உணர்தல் கொடுமை.
இன்றோ நாளையோ
எரிகாயம் பிராண்டிச்சென்ற பிஞ்சுடலாய்
கால் முறித்தெறியப்பட்ட அல்லது
இரத்தம் வழிந்து அச்சம்தரும் சிதைவுடலாய்
போய்விடுமா என் பிஞ்சுகள் என
ஏங்கும் ஒரு தாயை
புரிதல்கூடுமோ காண்.
அந்நியன் வந்து எமை ஆள்வதா என
கொதித்தெழுவது அவர்கள் உரிமை
வளங்களெல்லாம் களவாடப்படுதல் கண்டு
எந்தப் பூமியும் பொறுத்துக் கொண்டதாய்
வரலாறும் இல்லை
அதனால் படுக துயர் என
ஒவ்வொரு அமெரிக்க இராணுவத்தையும்
அழைக்கக் காத்திருக்கிறது
வரலாறு.
ரவி (04052003)