கமரா எழுதிய கவிதைகள்

குறுந்திரைப்பட விழா
யூரோ மூவிஸ்
சுவிஸ்
15 பெப்ரவரி 2003

பனிக்கால விடுமுறையில் உயிர்ப்பித்தலின்றி மரங்கள் அமைதியாய் உறக்கமுற்றிருந்தன. கிராமத்தின் எளிமை பார்வைமீது இதமாக வீச…தேவாலயத்தை அண்மித்தேன். எந்த அசுமாத்தமும் இல்லை. அமைதி என்னை தொந்தரவு செய்ய மண்டப வாசல் தேடினேன். நேரம் பத்து மணியை தாண்டியிருந்தது. இருள் வேண்டப்பட்ட அந்த மண்டபத்துள் நுழைந்து ஒரு இருப்பிடம் தேடவும் ஆங்கில மொழியில் விவரணம் சூழ்ந்து என்னை தனக்குள் இழுத்துக் கொண்டது. நேதாஜி. நேதாஜி சுபாஸ் சநதிரபோஸ் பற்றியும் அவரின் ஐ.என்.ஏ (இந்திய தேசிய இராணுவம்) பற்றியுமான விவரணப் படம் போய்க் கொண்டிருந்தது.

யூரோ மூவிஸ் இந்த குறும்பட விழாவை நடத்திக்கொண்டிருந்தது. இந்திய, இலங்கை, புலம்பெயர் குறும் படங்கள் (விவரணப் படங்கள் உட்பட) இந்த மண்டபத்தின் உள்ளிடத்தை திரையரங்காக மாற்றிப் போட்டிருந்தன. ஒரு இந்திய தமிழ்ச் சினிமா என்றால் அரங்கு களைகட்டியிருக்கும். திரை மட்டுமன்றி அருகில் இருப்பவனும் கதையளந்துகொண்டிருப்பான். தமிழ்த் திரையரங்குக்கு விசிலடி, கத்தல், இரைச்சல், குழந்தைகளின் அழுகுரல் என்பதெல்லாம் ஆசுவாசமான விசயம் தமிழ் ரசிகர்களுக்கு. ஆனால் இந்த குறுந்திரை அமைதி கிரகிப்பு உற்றுக் கேட்டல் என்பதையெல்லாம் எம்மிடம் தந்துவிட்டு தான் மட்டும் பேசிக்கொண்டிருந்தது.

எனது எதிர்பார்ப்பையும் மீறி இருக்கைகள் நிறைந்திருந்தன. சுமார் 150இலிருந்து 200 பேர்வரை பார்வையாளர்களை உள்வாங்கியிருந்தது அந்த மண்டபம்.

என்ன சொல்ல… 2002 இல் ஜேர்மனியை புலம்பெயர் நாடாகக் கொண்ட தர்சனாவால் எடுக்கப்பட்ட படம். மேற்குலக வாழ்வின் விரைதலுக்குள் அகப்பட்ட இரு புலம்பெயர் பெண்களின் வேலைச் சுமை, ஓய்வின்மை, நிறைவான நித்தரையின் மீதான வேட்கை, தம்மீதான கவனிப்புக்கான இன்மைகள் இவை தரும் மனஉளைச்சல்கள் என்பவற்றினூடு பயணிக்கின்றது. குடும்பப் பெண்ணானவள் தனது கணவனின் புரிதலின்மையின் வலியால் அவதியுறுகிறாள். தனது மன உளைச்சலை சினேகிதியுடன் பகிர்கிறாள். குறிப்பாக தன்மீதான கணவனின் சந்தேக மனப்பான்மையில் சலிச்சுப்போகிறாள். பெண்ணியம் பேசும் ஆண் ஒருவன் தனக்குக் கிடைத்திருந்தால் இப்படியான பிரச்சினைகளிலிருந்து தப்பிவிடலாம் என்ற அப்பாவித்தனமான குரலை அவளின் நண்பி ஒரு -அர்த்தம் பொதிந்த- சிரிப்பால் நொருக்கிவிடுகிறாள். அற்புதமான காட்சிப் படிமமாகி படம் முடிவடைகிறது திரையில். இன்று நாம் நடைமுறையில் காணும் கோலங்களில் இதுவும் ஒன்று. யாரும் பெண்ணியத்தின் மீதான நியாயமான நேசிப்பால் நெருடலுக்குள்ளாகலாம். (படம் பெண்ணியத்தை மறுப்பதாக அன்றி பெண்ணியம் பேசி நடைமுறையில் தலைகீழாக இருப்பவர்களையே சுட்டுகிறது) இந்தத் தவறுகளை மறைத்து ஆடை உடுத்துவது இன்னும் ஆபத்தானது. இதன்மூலம் பெண்ணியத்தின் நியாயப்பாட்டைக் காப்பாற்றுவதாக நினைத்தால் அதற்கு தர்சனாவின் சிரிப்பையே மீண்டும் பதிலாகத் தரலாம். அவ்வளவு அழுத்தமான காட்சிப் படிமத்தைத் தந்திருக்கிறார் தர்சனா. பாராட்டுக்கள்.

இப்போ யூரோ மூவிஸ் வந்து போகிறது. கறுத்துக் கிடக்கும் திரையில் நெருப்பு உலை. தங்கத் துண்டொன்றை உருக்குகிறான் அவன். சிறுவன் முன்னால் குந்தியிருக்கிறான். அவனும் ஒரு வேலையாளியாக சுவாலையின் நிறத்தில் சிவந்து போயிருக்கிறான். தங்கம் தட்டி எடுக்கப்படுகிறது, உருக்கப்படுகிறது, கம்பிகளாக நாராக்கப்படகிறது…இ;ப்படியே படிமுறைகளினூடாக ஒரு ஆபரண செதுக்கலுக்கு வருகிறது. சிறுவனும் எடுபிடி வேலைகளில் அல்லாடுகிறான். சிறிய அறை. அதற்குள் ஆறு பேர். நிலத்தில் அமர்ந்தபடி பார்வையைக் கூராக்கியபடியே மணிக் கணக்கில் செதுக்குகின்றனர். எந்த நவீன தொழில் நுட்பமும் அந்த அறையை எட்டிப் பார்க்கவில்லை. அழகழகாக நுண்ணிய வேலைப்பாடாக விரல்கள் அநாயாசமாக விரைவுபட்டு வேலைசெய்தன. எனக்குப் பின்னால் இருந்தவர்கள் சுவிஸ் நாட்டவர்கள். அவர்கள் அதிசயித்துப் போயிருந்தது அவர்களது வியப்புச் சொல்லைக் கேட்டபோது ஊகிக்கக்கூடியதாக இருந்தது. இது ஒரு விவரணப் படம் என்பதால் திரையை வார்த்தைகள் கனமாக்கிக் கொண்டிருந்தன. இந்தத் தொழிலாளர்கள் ஒரே இடத்தில் -அதுவும் நிலத்தில்- குந்தியிருப்பதாலும் உற்றுப் பார்த்தபடியே வேலைசெய்ய வேண்டி இருப்பதாலும் இவர்களின் மருத்துவச் செலவுக்கே இவர்களது உழைப்பு சரியாகிவிடுகிறது என்ற செய்தி சொல்லப்படுகிறது. இந்த அவலமான வாழ்விற்குள் நுழைந்திருக்கும் அந்தச் சிறுவன் மனசில் வந்துபோகிறான். நெருப்பு உலையின் முன்னால் சிவந்துபோயிருக்கும் அவன் முகத்தின் விகாரத்தை இருட்டுத்திரையில் கமரா பதிவாகியிருக்கிறது ஒரு படிமமாய். இன்றை தொழில்நுட்பத்தின் பிரமாண்டங்களுக்குள் இந்தத் தொழிலையும்கூட இழந்துகொண்டிருக்கும் இந்தச் சிற்பிகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிக் காட்டுகிறது மூடப்பட்டுக் கிடக்கும் சிறுநகைக்கடை முகப்புகள்.

எண்ணற்ற கனவுகளோடு யதார்த்த சினிமாவுலகில் பரந்து கிடக்கும் படைப்புகளையும் படைப்பாளிகளையும் ஒன்றிணைக்கும் ஒரு சிறு துளி முயற்சியே இது என்ற குறிப்புடன் ய+ரோப் மூவிஸ் இந் நிகழ்ச்சியை அடையாளப்படுத்தியிருந்து. அதில் அது வெற்றியும் பெற்றது என்றே சொல்லலாம். 14 குறுந்திரைப்படங்களையும் 5 விவரணப்படங்களையும் நிகழ்ச்சி உள்ளடக்கியிருந்தது. காலை 10 மணியிலிருந்து மாலை 7 மணிவரையான ஒரு பொழுதில் வெளியுலகிலிருந்து துண்டிக்கப்பட்டு இந்தக் குறும்;படங்கள் எமை அக உலகுக்கு மாற்றி மாற்றி அழைத்துச் சென்றிருந்தன.

சிறுமி ஆயிஷாவுக்கு சைவத் தமிழ்க் குடும்ப சிறுமியொருத்தி நண்பி. இரு சிறிசுகளும் சேர்ந்து விளையாடுவதை, பழகுவதை சைவத் தமிழ்க் குடும்பத்தாருக்கு பிடிப்பதில்லை. ஆயிஷா உன்னை வீட்டில் தேடுவினம் கெதியிலை போ என்று அனுப்பி வைப்பதும் ஆயிஷா அவையளோடு எங்களுக்கு சரிவராது என்ற பெற்றோரின் கூற்றுக்கு பிள்ளை தகப்பனிடம் காரணம்; கேட்கிறது. அது இப்போ உங்களுக்கு விளங்காது, அம்மா அப்பா சொன்னால் ஏன் என்று திருப்பிக் கேட்கக் கூடாது என்ற -தமிழ்க் குடும்ப ஆதிக்கச் சிந்தனையின்- விடை பிள்ளைக்குக் கொடுக்கப்படுகிறது. அதை ஜீரணிக்க மறுக்கிறது அந்தப் பிள்ளை. அதை அற்புதமாக குழந்தைத் தனமானமாகவும் எதிர்மறுப்பாகவும் தன் பார்வையால் இந்தச் சிறுமி வெளிப்படுத்துகிறாள். (இதை ஆழமான படிமமாக்க கமரா தவறிவிட்டது என்று சொல்லலாம்.) சமய பாடத்தில் தனக்கு விளங்காத வீட்டுப் பாடத்தை சிறுமி தகப்பனிடம் கேட்கிறாள். என்ன இது விளங்கவில்லையா என்ற அவரது பதில் அவரது முகத்துக்கு நேரே கேள்விக்குறியாக வரும் என அவர் எதிர்பார்க்கவில்லை. அவர் விளக்குகிறார். கடவுளின் முன்னால் எல்லா மனிதர்களுமே சமம் என பொருள் சொல்கிறார். குழந்தை ஒவ்வொருத்தராக கேட்க ஓம் (சமம் என்று) சொல்லிக்கொண்டிருக்கிறார். அப்ப ஆயிஷாவும்… என்றவுடன் கேள்விக்குறி சிக்கிய வலியில் முகம்கொள்கிறார். படம் முடிவடைகிறது. மிக எளிமையாக ஆழமான கருத்தொன்று பதிவாக்கப்பட்டுள்ளது. ஆனால் படமாக்கப்பட்டதில் அந்த ஆழம் இருப்பதாகத் தெரியவில்லை. படத்தின் முடிவில் நிறப்பிரிகையை இயற்கை ரீதியிலும் சமூக ரீதியிலும் விளக்கும் விதத்திலான வசனங்கள் திரையில் எழுத்துருவில் வருகின்றன. இது தேவையானதாகப் படவில்லை. இந்தப் படத்தை நிர்மலா ராஜ் எழுதி இயக்கியுள்ளார்.

காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த படவிழா 12.30 மணிவரையில் 6 குறும்படங்களை (விவரணப்படம் உட்பட) காட்சிக்குத் தந்திருந்தது. இந்த இடைவெளிக்குள் அம்ஜத் மீரா அகிலன் இயக்கிய அடையாளம் என்ற படம் தொழில்நுட்பம் மற்றும் இசை என்பவற்றில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியளவு மிகத் தெளிவான முறையில் படமாக்கப்பட்டிருந்தது. ஒரு காலேஜ் மாணவனின் கதை இது. படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது சின்னத்திரையை பார்த்துக்கொண்டிருப்பதுபோன்ற உணர்வே ஏற்பட்டது. ஒரு முழுக்கதையாக படம் நீண்டுபோயிருந்தது.

றஞ்சித்குமார் எழுதி இயக்கிய கனவுகள் என்ற படமும் ஆர்.புவனா எழுதி இயக்கிய தேடல் என்ற படமும் நடுத்தர வர்க்கத்தின் நகர வாழ்க்கையில் தாயும் தகப்பனும் வேலை வீடு என சுழன்றடித்துக்கொண்டிருக்க, அவர்களின் அன்புக்காக ஏங்கும் பிள்ளைகளின் நிலையில் நின்று படம் பேசுகிறது. இயந்திர வாழ்வில் கண்டுகொள்ளப்படாமல் -அதுவும் தமிழ்ப் பண்பாட்டு ரீதியில் அதிகாரத்துவ சூழலுள் விடப்பட்டுள்ள பிள்ளைகளின் நிலையில்- இருக்கும் பிரச்சினையொன்று பேசப்படுகிறது. தேடல் படத்தில் இப் பிரச்சினை இப் படத்தில் தீர்க்கப்பட்டும் விடுகிறது. பார்வையாளனிடமிருந்து பிரதி திருப்பி எடுக்கப்பட்டு மூடப்பட்டுவிடுவது இதன் கனத்தை இல்லாமல் ஆக்கிவிடுகிறது. இப் படமும் ஒரு சின்னத்திரையையே ஞாபகப்படுத்தியது.

தேடல் படம் நடுவர்களால் இரண்டாவது சிறந்த குறும்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. வெள்ளிவிருது.

மதிய உணவாக தமிழ்ச் சாப்பாடு. ஒரு ஒன்றரைமணி நேர இடைவெளி. சுழன்று பார்த்தேன். வந்திருந்த தமிழ்ப் பார்வையாளர்களில் பெரும்பாலானோர் சுவிஸில் எடுக்கப்பட்ட இரு குறும்படங்களில் சம்பந்தப்பட்டோரும் அவர்களின் கலையுலக நண்பர்களும் என பட்டது எனக்கு. இக் குறுந்திரையரங்கிற்கு தமிழ் நண்பர்களுடன் சேர்த்து பெரும்பான்மையாக இருந்த சுவிஸ் கலையுலக நண்பர்களுமாக ஒரு களையைக் கொடுத்திருந்தார்கள் என்று சொல்லலாம். இது குறித்து அஜீவன் உட்பட்ட ய+ரோப் மூவிஸ் கலைஞர்கள் பெருமைப்படலாம். தொடர்ந்து இவ்வாறான குறும்பட விழாக்களை உற்சாகமாக நடத்த ய+ரோப் மூவிஸ்க்கு இந் நிகழ்ச்சி துணிவைக் கொடுக்கத் தவறவில்லை.

மல்லி. இது ஒரு பால்வினைத் தொழிலாளியின் பெயர். ஒரு மனித ஜீவி, அதுவும் பெண் என்ற முறையில் அவளது உணர்வுகளை ஆசைகளை ஊடுருவிச் செல்லும் படம் மல்லி. தன்னிடம் வந்தவன் ஒருவன் தன்னை பிடித்திருப்பதாகவும் பின்னர் அது கல்யாணத்தில் போய் முடிவதையும் இந்தக் காலப் பகுதியிலான காதலிய உணர்வுகளில் திளைத்திருப்பவளாகவும் குடும்பம் என்றானபின் சமூகம் வகுத்திருக்கும் ஒரு அசல் குடும்பப் பெண்ணாகவும் மாறுகிறாள். இந்த குடும்பத்தின் ஆரம்பநிலை தொடரோட்டத்தோடு, ஒரு நல்ல ஆரம்பத்தோடு அவள் நினைவுலகு அல்லது கனவுலகிலிருந்து தன் கட்டிலுக்கே தூக்கிவீசப்படுகிறாள். ஒரு நல்ல கணவனாக உலவியவன் நிஜத்தில் இப்போதும் அவளது கட்டிலில் அவளருகில் அடிச்சுப்போட்ட தூக்கத்தில் இருக்கிறான். எம்போலவே உணர்வுகள் உணர்ச்சிகள் ஆசைகள் உள்ள ஒரு மனித ஜீவிதான் இவளும் என்பதை மல்லி படம் சொல்கிறது. மல்லி படித்தவள் என்பதை இடைச்செருகலாக சொல்லவேண்டிய அவசியம் -இந்தப் படத்தை எடுத்த- மாதவ கிருஷ்ணனுக்கு ஏன் எழுந்ததோ தெரியவில்லை. ஆனாலும் உணர்வுடன் பேசிய நல்ல படைப்பு இது.

ஒரு நாள். தமிழகத்தின் வறுமைப்பட்ட குடும்பமொன்றில் வகைமாதிரியான ஒரு நாள். சிறுமி (மகள்) காலையில் நித்திரையிலிருந்து எழுந்து வேலைக்குப் போகிறாள். தகப்பன் இப்போதும் உறக்கத்தில் பாயில் கிடக்கிறான். தாய் வீட்டுவேலைகளில் ஓய்வின்றி அமிழ்ந்து கிடக்கிறாள். சிறுமி வேலையால் வந்த பின்னும் தாய்க்கு வீட்டுவேலையில் உதவுகிறாள். கடன்சொல்லி காய்கறி வாங்க கடைக்குப் போகிறாள். இருட்டிய பின்னர் நேரம்கெட்ட நேரத்தில் சிறுமியின் தகப்பன் வருகிறான் வெறியில் தள்ளாடியபடி. எதுவித சத்தமும் செய்யாமல் விரிக்கப்பட்டிருந்த பாயில் ஒருவாறு தனது படுக்கை இடத்தை அடைந்து தொப்பென வீழ்ந்து படுக்கிறான். சிறுமி நல்ல உறக்கத்தில் கிடக்கிறாள். இளவயதின் குறும்புகள் ஆசைகள் படிப்புகள் எல்லாம் இழந்துகொண்டிருக்கும் அந்தச் சிறுமியின் ஏக்கப் பார்வை மனசை தைக்கிறது. தாயாக வருபவர் சிறுமி எல்லோருமே மிக யதார்த்தமாக பாத்திரங்களில் உலவுகின்றனர். வறுமையால் வேயப்பட்ட இந்தக் கொட்டிலின் முற்றத்திற்கு எம்மை அழைத்துவந்து அசையவைக்கிறார் -இதை எழுதி இயக்கிய- பாரதி வாசன்.

அநேகமான இந்தக் குறுந்திரைகளுக்குள் சிறுபிள்ளைகளின் நடமாட்டம் இருந்தது. அவர்கள் பிரச்சினைகள் முக்கியத்துவப் படுத்தப் பட்டுமிருந்தன. ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் முன்னறிவிப்பின்படி 12 வயதுக்குக் குறைந்த சிறிசுகளுக்கு இவற்றைப் பார்க்க அனுமதி இல்லை என்று இருந்தது. இதற்கு உளவியல் ரீதியில் காரணம் கவனத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன். எமது தற்காலத் தமிழ்த் திரைப்படங்களின் வன்முறைகளையே குழந்தைகளை வைத்துக் கொண்டு பார்த்துப் பழகிய உளவியலறிவுப் பாரம்பரியம் கொண்டவர்கள் நாம் என்பது ஒருபுறமிருக்க, இங்கு திரையேறிய குறும்படங்கள் ஒருவகையில் சிறிசுகள் பார்க்கவேண்டிய படங்களாகவே எனக்குப் பட்டது.

அப்பா. பாடசாலை வகுப்பில் முதல்நாள் எல்லா மாணவர்களும் தம்மை அறிமுகம் செய்யும்படி ஆசிரியர் கோருகிறார். (ஆசிரியர் தன்னை முதலில் அறிமுகம் செய்யும் முன்மாதிரியான அணுகுமுறை இல்லாமல் போனது பற்றி நீங்கள் யாரும் வீணாக ஆசுவாசப்படாதீர்கள். அவர்கள் அதிகாரம் கொண்டவர்கள் ஆசான் என்ற பெயரில்.) பிள்ளைகள் தாய், தந்தை, பெயர், தொழில் இவற்றை அறிமுகப் படிவமாக வைத்து அறிமுகம் செய்கின்றனர். (பெயர், தொழிலிலிருந்து சாதியை ஊகித்துக் கொள்ளும் வேலையில் ஆசிரியரின் மூளை வேலைசெய்யும் என்பது இன்னொரு பக்கம்). தனது தகப்பன்மாரின் வேலை அந்தஸ்தை பெருமிதமாக சொல்லி மாணவர்கள் அறிமுகம் செய்யும் வேளையிலே இவனின் முறை வருகிறது. துவண்டுபோய் எழுந்து நின்று தகப்பனின் தொழிலை சொல்லமுடியாமல் அவன் கண்கலங்கி குறுகிப்போய் நிற்க… இவனின் தகப்பன் ஒரு றவுடி சார் என்று அவன் அறிமுகம் செய்யப்படுகிறான். தகப்பன் சாதாரண றவுடி நிலையிலிருந்து அரசியல்வாதியின் கையாளாக மாறுகிறான். பொருளாதார நிலையிலும் தகப்பன் உயர குடும்பமும் உயர்கிறது. வசதியான வீடு. நல்ல வாழ்க்கைத்தரம். அரசியல்வாதியின் றவுடி என்பதால் றவுடியிசத்துக்கு அங்கீகாரமும் கிடைத்துவிடுகிறது. இப்போ அடுத்த வகுப்பில் மீண்டும் முதல்நாள் அறிமுகம். பையன் சடாரென்று எழும்பி நெஞ்சில் தட்டாத குறையாய் எனது அப்பா இந்த ஊரில் றவுடியாய் இருக்கிறார் என்கிறான் – இது அப்பாவின் தொழில் என்பதாய். ஆசிரியர் அசந்துபோய்விடுகிறார். பார்வையாளர் பகுதியிலிருந்து சிரிப்பு எழுந்து ஓய்ந்தது. இப் படத்தை எழுதி தயாரித்திருந்தார் காவ்யா புகழேந்தி. இந்தப் படம் சிறந்த குறும்படமாக நடுவர்களால் தீர்மானிக்கப்பட்டது.

சிறந்த படம், சிறந்த நடிகன் சிறந்த நடிகை சிறந்த கமரா சிறந்த படத்தொகுப்பு சிறந்த இசை… என்றெல்லாம் ய+ரோப் மூவி;ஸ் இனால் தனித்தனியான கௌரவிக்கப்பட்டனர். வளர்ந்துவரும் கலைஞர்கள் என்ற வகையில் சுவிஸ் இல் எடுக்கப்பட்ட உருகும் பனிப் ப+க்கள் மற்றும் படிவுகள் இயக்குநர்களும் கௌரவிக்கப்பட்டனர். வளரும் படைப்பாளிகளுக்கான விருது கலைச்செல்வன் (சுவிஸ்) இயக்கிய உருகும் பனிப்ப+க்களுக்குக் கிடைத்தது.

விவரணப்படங்களில் பாரதி சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. பாரதி விவரணப் படம் ஏற்கனவே வெளியாகிவந்த பிரதியிலிருந்து நேரச் செதுக்கலுக்காகவோ என்னவோ காட்சிகள் பல வெட்டப்பட்டிருப்பது தெரிகிறது. பாரதி ஒரு கவிஞனாக வந்து போகிறான். அவனது சமூக எதிர்மோதல்கள் தூக்கலாக இல்லை. ஒரு புரட்சி மனோபாவம் கொண்ட கவிஞனாக பாரதி படத்தில் எழுச்சிப்படவில்லை. அம்சன் குமார் ஏற்கனவே எடுத்த இவ் விவரணப் படத்தை முழுமையாகப் பார்த்தபோது ஏற்பட்ட பாரதியின் பிம்பம் சற்று மங்கியிருப்பதாகவே உணரமுடிகிறது.

அருந்ததி சமூகத்தின் மாத்தம்மா முறை விவரணப்படமாக வந்தது. பெரியளவில் நாம் தெரிந்துவைத்திருக்காத இந்த விடயம் திரைக்கு உடுக்கை ஒலியுடன் கொண்டுவரப்பட்டது. அவர்களது குலதெய்வத்தின் முன்னால் உடுக்கை அடி, பாட்டு, உருவாட்டம் என்று கடவுள் விசுவாச நிலையிலிருந்து… குந்தியிருந்து மலம் கழிக்கவும் பன்றிகள் கூட்டமாய் ஓடிவருவதுமான காட்சிநிலைவரை கமரா பயணித்திருக்கிறது. பெண்பிள்ளைகளுக்கு கடும் சுகவீனம் வரும் போதினிலே அந்தப் பிள்ளையை கடவுளுக்கு முன்னால் கிடத்தி, கடவுளே இவள் உனது பிள்ளை@ விரும்பினால் காப்பாற்று இல்லை சாகவிடு என்று பாரம் கொடுத்து விடுகிறார்கள். சுகம்பெறும் பிள்ளைகள் ஊர்ச்சொத்து ஆகிவிடுகிறார்கள். அவர்கள் திருமணம் செய்யமுடியாது. விழாவில் அவர்கள் ஆடவிடப்படுகிறார்கள். ஆண்கள் தாம் விரும்பிய உடலின் பாகங்களில் காசை சொருகுவது அங்கங்களை தொடுவது என்றெல்லாம் விகாரிப்பது பெரும் கொண்டாட்டமாக்கப்படுகிறது. இப்படி ஆண்களின் வக்கிரங்களுக்கு வடிகாலாக இந்தப் பெண்கள் -கடவுளின் பெயரால்- பயன்படுத்தப்படுகிறார்கள் என்ற செய்தியையும் இதற்கெதிராக போராடும் பெண்கள் அமைப்புகள் பற்றிய சிறிய செய்தியும் சொல்லப்படுகிறது. படத்தின் ஆரம்பத்திலும் பிறகும் வரும் உடுக்கை ஒலியுடனான பாடல் படத்தின் பொதுவான இசையோட்டத்தைப் பிளந்துவிடுகிறது. இது பார்வையாளரை தொந்தரவு செய்வதாகவே படுகிறது. இதையும் மீறி இதன் செய்தி வலியைத் தரும் விதத்தில் லீனா மணிமேகலையால் இயக்கத்துக்கு கொண்டுவரப் பட்டிருக்கிறது என்று சொல்லலாம். விவரணப் படங்கள் மூன்றினுள்ளும் இப் படம் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது.

“த பொக்ஸ் ஒப் யோய்” என்ற படம் வித்தியாசமான முறையில் அமைந்திருந்தது. தொடக்கம் முதல் முடிவுவரை கமரா தபால் பெட்டிக்குள் மட்டும் இருந்துகொண்டு செயல்பட்டது. வளர்ந்துவரும் தொழில்நுட்ப உலகில் இன்ரனெற் மின்தபாலின் பிறப்பால் தபால்பெட்டியின் தேவை அருகி பின் அழிந்துபோய்விடுவதாக -பழைய கழிவுகளுள் நொருக்கி அழிக்கப்படுவதாக- படம் போகிறது. மின்தபாலின் பிறப்பால் காகிதத் தபாலின் தேவை அற்றுப்போய்விடும் என்ற ஒரு எளிமையான தர்க்கத்துக்கு அப்பால் படத்தில் பொருள் இல்லை. இப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஆதித்யன்.

சென்னைப் பட்டணம் என்ற படம் இறுகிப்போயிருந்த பார்வையாளர்களை சற்று அசைத்து சிரிக்க வைத்தது. நகர வாழ்க்கையின் யதார்த்தத்திடை உலவவும் வைத்தது. அசந்தால் ஏமாந்துபோய்விட நேரும் நகர சூழலுள் கிராமத்திலிருந்து நகரத்துக்கு முகவரி ஒன்றினை மட்டும் வைத்துக் கொண்டு வரும் இளைஞனின் அவலம் சிரிப்போடு சேர்த்து பரிதாபப்படவும் வைத்தது. மிக யதார்த்தமாக நடித்திருந்தார். நகரத்தில் அவன் ஏமாற்றப்படுவதும் அதேநேரம் அங்கு மனிதாபிமானம் உள்ளவர்களால் அவனுக்கு உதவி மற்றும் அறிவுறுத்தல் கிடைப்பதும் நகரவாழ் மனிதர்களை எதிர்நிலையில் மட்டும் வைத்துப் பார்க்காத நிலைப்பாட்டை தெளிவாக்குகிறது. இப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பி.ஜே.ஜயபாஸ்கர். இந்தப் படம் நடுவர்களினால் முன்றாவது சிறந்த குறும்படமாகத் தேர்வுசெய்யப்பட்டது.

|அயனன் அவ்கன்பிளிக் லாங் லீபே| என்று டொச் மொழியில் பெயர்கொண்ட இப் படம் இளவயது காதல் உணர்வை நினைவில் ஓர் கனவாக காட்சிப் படிமங்களால் மெலிதாக இழைக்கப்பட்ட படம். வசனம் எதுவுமே இல்லை. புனைவுகளை தர்க்கத்தின் எல்லைக்கு அப்பால் இழுத்துச் சென்று லயிக்க வைக்கும் ஆற்றலை இப் படம் வெளிப்படுத்தியது எனலாம். இந்த வகையில் மற்றைய எல்லாப் படங்களையும் விட்டு இது தனித்துவம் பெற்றதாய் இருந்தது. மிகத் தெளிவான பிடிப்பு இப் படத்தினை முழுமைப்படுத்தியது எனலாம். இயக்கம் ஷபேத் ஹ்ரோன் (ஜேர்மனி).

சுவிஸில் தயாரிக்கப்பட்ட உருகும் பனிப்ப+க்கள் மேற்குலக கலாச்சாரத்தினதும் தமிழ்க் கலாச்சாரத்தினதும் முரண்பாடுகளுக்கு இடையில் நசிபடும்; இளவயது மாணவியினை குறுந்திரைக்குள் கொண்டுவருகிறது. வளரும் கலைஞர்களுக்கான விருதினை இப் படத்தின் இயக்குநர் கலைச்செல்வன் (சுவிஸ்) பெற்றுக்கொண்டார். தொழில்நுட்ப ரீதியில் இன்னும் நீண்ட தூரம் செல்லவேண்டியிருந்தாலும் புலம்பெயர் சூழலின் முரண்பாட்டின் முக்கிய புள்ளியொன்றை தொட்டிருப்பது மனசை தொற்றவைக்கிறது. முரண்பாடுகளுள் அங்குமிங்குமாக சுழலாமல் குறிப்பான முரண்பாட்டினை தெளிவாக தொட்டிருப்பது பாராட்டுக்குரியது.

இதேபோல் படிவுகள் குறும்படத்தை சுவிஸ் பாலகுமார் இயக்கியுள்ளார். கலையுலகினுள் ஆர்வம் மட்டுமல்ல விடாமுயற்சியும் செயற்பாடும் கொண்ட கலைஞர்களுள் பாலகுமார் சுவிஸில் அறியப்பட்டவர். முக்கியமாக நாடகத்துறையில் அறியப்பட்டவர் இவர். இத் துறையில் அறியப்பட்ட இன்னொரு முக்கிய நடிகர் பாஸ்கர். இப் படத்தில் தனது இளமை மறைத்த ஒரு தாத்தாவாக இவர் வருவதும் அந்தப் பாத்திரத்தை வார்த்தெடுப்பதிலும் ஒரு நாடகபாணி காட்சி தோற்றுவிக்கப்பட்டது எனலாம். இப் படமும் புலம்பெயர் சூழலினுள் மாணவன் ஒருவன்மீது -பெற்றோர்- கல்வியைத் திணிக்கும் மனோபாவத்தினுள் உடுருவுகிறது. இங்கத்தைய மொழியறிவு, பாசாலை இயங்குமுறை, படிப்பித்தல் முறை, பிள்ளைகளுக்கு படிப்பில் உதவக்கூடிய அறிவு… என்பவற்றில் பெற்றோர் பரிச்சயமின்மை இருக்கும்போது இம் மாணவர்கள் கடினமாக உழைக்கவேண்டியவர்களாகின்றனர். இந்த நிலையில் தமிழ், சமய பாடத்துக்கான படிப்புநேரமாக -மேலதிகமாக- காலைவேளையிலும் நித்திரைவிட்டு எழுப்பப்பட்டு கட்டாயப்படுத்தப்படுகிறான். விளைவு… பெற்றோர் விரும்பிய எல்லைகளுக்குள்ளிருந்து வெளியே அவன் போய்விட நேர்கிறது. படமும் இந்த எல்லைக்குள்ளிருந்து தர்சினி கொலை மற்றும் தாத்தாவின் விடலைப்பருவ சேட்டைகள் (சிரிப்பால் மிகவும் முக்கியத்துவப்படுத்தப் படுகிறது), போராட்ட நினைவுகள் என வசனங்களில் அலைபடுகிறது. தர்சினியின் கொலையை குறியீடாக்கிய விதம் (இதற்கான தேவை இப் படம் சொல்லவந்த விடயத்திற்குள் இருப்பதாகப் படவில்லை) எந்த அதிர்வையும் தரவில்லை.

அது பாடசாலை வகுப்பு. பாடசாலை முடியும் நேரம் அண்மிக்கிறது. ஆசிரியர் வீட்டுப் பாடத்தை கரும்பலகையில் எழுதிக்கொண்டிருக்கிறார். மாணவர்கள் எல்லோரும் அசுமாத்தமின்றி உடைமைகளை மெதுவாக பைகளுக்குள் திணித்தபடி ஆயத்தமாகின்றனர். அவன் எழும்புகிறான். சேர் நான் பத்து நிமிஷம் முதலே போகவேண்டும் என்கிறான். ஏன், …..சரி இன்றைக்கு போ@ நாளையிலிருந்து இப்படி செய்யாதே என்கிறார் ஆசிரியர். இல்லை சேர் நான் நாளைக்கும் இப்படித்தான் செய்வேன் என்றுவிட்டு போகிறான் அவன்.

பாடசாலை முடிவு மணி ஒலித்தததும் முதலிலே யார் வெளிவாசல் கேற் இனைத் தொடுவது என்ற போட்டியில் மாறிமாறி வெல்வது வழக்கம். ஆனால் ஒருவனால் ஒருநாளுமே இது சாத்தியப்படவில்லை. அவனது கால்கள் ஊனம்.

அவனை தன் தோளில் சுமந்தபடி ஓடுகிறான் அந்த மாணவன். தோள்மீதிருந்தவன் இன்று கேற் இனை முதலில் தொட்டுவிடுகிறான். வெற்றி பெருமிதத்தில் கை உயர்கிறது அவனுக்கு. படம் முடிகிறது. மனித நேயம். படத்தின் தலைப்பு எமது தலைக்குள் காவப்படுகிறது. நாளையும் இப்படித்தான் செய்வேன் என்ற அவனது வசனம் மனித நேயத்தின் உயிர்வாழ்தலாய் ஒலிக்கிறது. சொல்லப்பட வேண்டிய விசயம் மிக எளிமையாய் சுருக்கமாய் நேர்த்தியாய் சொல்லப்பட்டிருக்கிறது. இதை லோகேஸ், பாபு ஆகியோர் இயக்கியிருக்கின்றனர். இந்தப் படம் (சுவிஸ் மற்றும் தமிழ்ப்) பார்வையாளர்களால் சிறந்த குறும்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. ய+ரோ மூவிஸ் தகவலின்படி 90 வீதத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் இப் படம் தேர்வாகியது என்பது மனித நேயத்தின் இழப்பையும் அதன்பாலான ஆதங்கத்தையும் காட்டிக் கொள்வதாக எடுத்துக்கொள்ளலாம்.

2002 இன் சிறந்த யதார்த்தத் தமிழ் முழுநீள திரைப்படமாக தங்கபர்ச்சன் இயக்கிய அழகி படம் யூரோ மூவிஸ் இனால் தெரிவுசெய்யப்பட்டது. இந்த அறிவிப்பு செய்யப்பட்டபோது பலத்த கைதட்டல் எழுந்ததை அவதானிக்க முடிந்தது.

நன்கு பேசப்படும் சிங்களக் கலையுலகிலிருந்து குறும்படங்கள் யூரோ மூவிஸ் க்கு எட்டாமல் போனது ஒரு குறைபாடுதான்.

இவ்வாறான ஒரு நிகழ்ச்சியை யூரோ மூவிஸ் அஜீவன் மிகக் கடினமான முயற்சியினூடு சாதித்திருப்பார் என்று சொல்வதில் எந்த மிகையும் இல்லை. இலங்கை இந்திய மற்றும் புலம்பெயர் நாடுகளிலிருந்து இப் பிரதிகளை பெற்றுக்கொள்வதிலிருந்து அவற்றை தெரிவுசெய்வதினூடாக நிகழ்ச்சியை நடத்திமுடிப்பதுவரை யூரோமூவிஸ் இன் செயற்பாட்டில் அவரது பங்கு அதிகம் வேண்டப்பட்டிருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது. அத்தோடு யூரோமூவிஸ் சுவிஸ் கலைஞர்களினது உழைப்பும் வரவேற்பும் அந்யோன்யமான உரையாடலும் இந்தக் குறுந்திரைப் படங்களோடு சேர்ந்து ஒரு கலைக்கூடமாகியது என்பதை பாராட்டாகக் கொள்ளலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: