வருக புத்தாண்டே,
வருக நீ!
நம்பிக்கைகளை புதுப்பிக்கும் ஆற்றல்
எம்மிடம் உள்ளதால்
மீண்டும் வருக
மீண்டும் மீண்டும் வருக!
வரவேற்கிறோம்.
மனித உரிமைகளை ரத்தத்தால்
காப்பாற்ற
கற்றுக்கொண்டுள்ளது மனித குலம்.
மிதக்கும் எம் கனவுகளில்
வெடிகுண்டுகள் பொருத்திய கணங்களால்;
நாட்கள்
யுகம் விழுங்கி அவதிப்பட்டிருக்கின்றன.
ஆனாலும்
வாழ்வு பற்றிய எம்
நம்பிக்கைகள் அழியாததால்தான்
நாம்
கொண்டாடுகிறோம் உனை.
வருக
இன்னொரு புத்தாண்டே
வருக நீ!
ஜனநாயகத்தை யுத்த விமானங்களில்
தருவிக்கும்
ஜனநாயகத்தின் காவலர்களிடம்
நீ வேறு அர்த்தம் சொல்லக்கூடும்.
உனை வரவேற்க
புத்தாண்டுக்கான ஓர் ஜனநாயகம் தாங்கிக் கப்பலொன்றைக்
கட்டுவது பற்றியும் அவர்கள்
யோசிக்கக்கக்கூடும்.
சுமைகளை தாங்க நலிந்த மக்களாய்
விதிக்கப்பட்டிருக்கிறோமா நாம்
என்பது
குறைந்தபட்சம் கேள்வியாகவாவது
எம்மிடம் எஞ்சியிருக்கும்வரை
நாம் நம்பிக்கைகளை
உற்பத்தி செய்துகொண்டுதானிருப்போம்.
அதனால் வருக
புத்தாண்டே வருக நீ!
பாறையில்கூட
தனது முளைப்பை
தேர்வாய்க் கொள்ளும் புல்லிடமும்
கற்றுக்கொள்ள எமக்கு
ஏதாவது இருக்கத்தான் செய்கிறது.
அதனால்
எமக்கு வாழ்வு அவசியமானது
அழுவது என்பதும்கூட
மனச்சுமை கரைப்பதற்கு என்பதால்
அழுவோம் – அப்பால்
அதுவே எம் வாழ்வல்ல.
ஒரு நண்பியோ அன்றி நண்பனோ
முகம்காணும் போதிலெல்லாம்
முதல்பேசும் மொழியாய்
மேலெழுந்து வருகிறதே
சிரிப்பு
மனவேர்ச் சிரிப்பு -அதனால்
வாழ்தலுக்கு
அர்த்தம்
நிறைந்தே இருக்கிறது.
உணர்வுகளின் பகிர்விற்கிற்கும்
உணர்ச்சிகளின் ஒன்றிப்பிற்கும்
மனிதர்களை
இன்னமும் காண முடிவதால்
வருக புத்தாண்டே
வருக நீ!
மரங்களின் துளிர்ப்பிலும்
முகமறியா
குழந்தையொன்றின் சிரிப்பிலும்
ரசனைகொள்ளும்
உள்ளுடல் சஞ்சரிப்புகள் எம்மிடம்
உள்ளவரை
வருக புத்தாண்டே
வருக நீ!
மீண்டும்
நம்பிக்கைகளை வைத்திருக்கிறோம்
உன்மீது ஊன்றிவிட.
வருக புத்தாண்டே
வருக நீ
வருக!
-ரவி (31122002)