ஒவ்வொரு நுனித்தலும் காற்றில்
புதையும்வரையான வியாபித்தலில்
உடல்பெயர்த்து பரவுகிறது என்
நரம்புகள்.
கூண்டினுள் மனிதன் அடைபட
மனிதம் எல்லையற்றுக் குலாவும்
குழந்தைப் பொழுதில் நாம்
திளைத்திருந்தோம்.
எம்மைச் சுற்றிய உலகம் பற்றி
கவலைப்படாதிருந்தோம்.
பேசினோம் குழந்தைபோல்
சிரித்தோம்
மனசை உழுதோம்
வார்த்தைகள் கிளறி.
பிரிவிடை துயருறும்
கண்ணீர்ச் செதுக்கலில்
உருவம் கனத்தேன்.
துயரம்.
நிரப்பப்படவேண்டிய ஓர் குழியாய்
மனசு காத்துக் கிடக்க நாம்
பிரிதல் உற்றோம்.
வேலிகள் கொள்ளவும்
வசதிக்கேற்ப சுருட்டிப் போடவும்
முடிகிறது நான்
ஆண் என்பதால்.
அங்கீகாரம் கிடைக்கிறது ஒரு
நிர்வாகம்போல் இச்
சமூகத்திடமிருந்து.
ஆனாலும் என்
காதலை உரசியவளே கேள்,
சுழிதின்ற எனது மனக்குழியினை
இன்னமும் நிரப்பமுடியாமல்
அவதியுறுகிறேன் நான் என்பதை.
இதயத்தின் ஓர் மூலையில்
பாழ்நினைவுக் கூடமாய் அதை
விட்டுவிட நான் முயல்கிறேன் – என்
துயில்சிதைத்து எழும்
கனவுகளிடை அதற்குள் நான்
தூக்கிவீசப்படாதிருக்க வேண்டும்.
நெருக்கமுற்ற போதினிலே நாம்
செதுக்கிய நினைவுலகை
தலைமறைவாகிவிடப் பணித்திருந்தோம்.
உணர்வுகள் வரைவுசெய்த நீண்ட
பெருவெளியினிலே புள்ளியிடுகிறது
அந்த நினைவுலகு.
எனக்குத் தெரியும்
உனக்கும் அப்படித்தானென.
ஆனாலும் அதை என்
வீதிக்கு நானும் அழைப்பதாயில்லை –
விதித்துத் தரப்பட்ட உனது
வாழ்க்கையில்
அது அனர்த்தம் புரியுமென்பதால்!
– ரவி (02122002)