எனது வீட்டுக் கதவு தட்டப்படும்போது
நண்பன்தான் என
இயல்பாய் மனசு
எண்ணுவது எப்போது?
வாள்களும் பொல்லுகளும் – ஏன்
உணவில் நஞ்சூட்டலும்கூட
துப்பாக்கிகளின் வேலையைச் செய்யும்போது
நான் சமாதானத்துக்காய்
அழ மட்டுமே முடிகிறது.
பனைவேர்ச்சல்லி மண்ணில்
புதைந்திருந்த நூற்றாண்டு வேரை
இரவோடு பிணைத்த ஒரு பகல்பொழுதுக்குள்
அறுத்தெறிந்த இனத்துயரம் இன்னும்.
நினைவிறக்கப்பட முடியாத
இந்தத் துயரிடை நான்
சமாதானத்தைக் கனவுகாண்பதாயில்லை.
ஆயிரம் ப+க்களென்ன
நாலு ப+க்கள்தன்னும் மலரவிடா
மலட்டுப் ப+ங்காவினிடை
விடப்பட்டவர்கள் நாம்.
ப+த்தல்களுக்காய் நாம் வியர்வைகளை
இறைக்கும்வரை – ஏன்
எமது முளைமடிப்புகளை குலைத்துப் போடும்வரை
சமாதானத்துக்காய் நாம்
நீளமாய்ப் பயணிக்கத்தான் வேண்டியிருக்கும்.
மீண்டும் ஒரு சில்வாவின் பேக்கரியையும்
காதரின் துணிக்கடையையும் காண
விழைகிறது மனம்.
மந்திரியின் வரவேற்பும்
எம்பிக்களின் சுற்றுலாவும்
சமாதானப் பிரமாண்டங்களாய் வெளிவருகிறது
கமராக்களுக்குள்ளிருந்து.
சமாதானக் கனவுகளை நாம்
உற்பத்திசெய்து தள்ள
அப்பாவித்தனம் மலிந்ததா எமது தேசம்?
வியர்க்கிறது தேகம்
குரல்வளையை நினைத்து!
-ரவி (01112002)