வண்ணத்துப்பூச்சிகள் நிறங்களையெல்லாம்
உதிர்த்துக் கொட்டிய பேய்ச்சோகம்
அவள் முகத்தை சருகிட்டிருந்தது
அப்படியான ஒரு பொழுதில்
மீண்டும் அவளை நான்
சந்தித்தேன் திட்டமிட்டபடி.
கடல் எனது அலைகளையெல்லாம்
வாரியெறிந்து
அவளின் பாறையில்
சிதறிக் கொட்டியது.
வார்த்தைகளின் முழு வலுவையும் திரட்டி
அவள்மீது அறைந்தேன் நான்
அறையவும் முடிந்தது அப்படி
அவைகளை நான்
தயார்செய்து வைத்திருந்ததால்.
என்னை அசைத்தது அவளின் மௌனம்;
என்றேயாகுக
எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா
அவள்மீதான நெருக்குதல்களை எப்படி நான்
எனது உரிமையாக்கினேன்
எங்ஙனம் சாத்தியமாகியது
கிறுக்கிய வரிகளிடை
கவிதை தோய்ந்தெழுந்த தாள்களையெல்லாம்
மனசு விரைந்து தேடுகிறேன்
அந்த வார்த்தைகளின் ஆண்மனத்தை எரித்துவிட
அதன் வெறியை எரித்துவிட.
அலைகள் ஓய்ந்த பொழுதில்
எனது மௌனத்தை கடல்
தாலாட்டியது.
நான் நொந்துபோயிருந்தேன்.
அவள் இன்று வருவதாயில்லை.
வானம் பறவைகளை உதிர்த்ததான
பொழுதில் நான்
பறிபோயிருந்தேன்.
-ரவி (சுவிஸ்)