வாழ்தல் என்பது…
Posted May 11, 2002
on:- In: கவிதை
- Leave a Comment
எனது கண் இறைக்கும் ஒளியை
ஓர் புள்ளியில் தேக்க
எனக்கு இஸ்டமில்லை.
அது படர்வதற்குரியது.
விரும்பியபோது விரும்பிய இடத்தில்
ஆடவும் பாடவும்
அதிகளவு சுதந்திரம் அனுபவிக்கிறது
ஒரு குழந்தை –
என்னைவிட.
அழுதலுக்காக இரங்க ஆயிரம் மனிதர்கள்.
தனிமையாய்
மனம்விட்டு சிரிக்கும் எனை
பைத்தியமென பார்வையெறிந்து
கொல்லும் உலகில்
சேர்ந்து சிரிக்க நான் மனிதர்களைத் தேடுகிறேன்.
மரணத்தை
பூச்சாண்டி காட்டி
பயமுறுத்தும் மதமும்
எனை வெற்றிகொண்டு நூற்றாண்டுகளாயிற்று.
வாழ்வின் ஒரு பகுதியே மரணம்.
தடித்த விரல்களால்
கூனிய முதுகுகளில்
பிராண்டி எழுதிய விதிமுறைகளில்
கசியவிடப்பட்டது வாழ்க்கை
என்றாயிற்று.
இலேசானவனாய் மிதந்துவிடாமல்
பாரமேற்றப்பட்டு
செதுக்கி செதுக்கி அழிக்கப்பட்டவன் நான்.
ஒரு புள்ளி நோக்கி ஓடுவதில்
இறகுகள் சொடுக
கிளைவிடாது
பார்வைகள் நெடுத்துக் கொள்கின்றன –
அதிகார வெளியைத் தேடி!
வாழ்தல் என்பது
ஒப்புவிக்கப்பட்ட பாதையினூடு
ஒடுங்கிச் செல்வதல்ல
பரந்து விரிவது அது –
ஓர் உயிர்ப்பு வெளியாய்!
– ரவி
Leave a Reply