முளைகொண்ட ஓவியமும் நாலு வார்த்தைகளும்

காற்றுக்கூட உறங்க
நினைக்கும் இரவின் அமைதி
நிச்சயமற்றுப்போன ஓர்
இரவில் இது நடந்திருக்கலாம்
அல்லது,
சூரியனின் ஒவ்வொரு கதிர்களையும்
முறித்துப்போடும் வெறியோடு
செல்களும் குண்டுகளும்
படைநடத்திச் சென்ற ஒரு
பகல்பொழுதிலும் இது நடந்திருக்கலாம்

சரியமறுத்து
முறிந்துபோனது இந்தப் பனைமரம்

யாழ்மன ஆழத்தின்
வீணிகள் படியுமிந்தக்
கிளையறியாப் பனைமரத்துக்காய் அழ
மறுக்கிறது என் மனம்

கிளைகொண்டு விரிந்துநில்
என்பதுபோல்
முளைவிடுகிறது ஆலமரவிதையொன்று இந்தப்
பனைத்துண்டின் உச்சியில்.

கூரலகால் விருட்சத்தின் விதைகொண்டு
வரைந்துசென்ற இவ் ஓவியத்தின்
சொந்தக்காரியே – என்
அருமைக் குருவியே
கேள்!
’’பனைவளர்ப்போம் வா’’ என்றால்
பல்லிழித்த மனிதரும் இந்தப்
பனையின் முறிவுக்காய்
அழுவதெனில், அவர்
உச்சந்தலையிலும் விருட்சத்தை
எச்சிலிடு என் குருவியே.

இன்னும் கேள்!
பனைமரத்தில் நெஞ்சுதேய்த்து, அதன்
உச்சியினைத் தொடுபவனை
சாதிக் கோட்டால் அரிந்து
வீழ்த்தும் மனிதரும் பனைமரத்தை
கற்பகதரு என்கின்றனர்
அதற்காய் அழுகின்றனர்.

அற்புத மரம்தான் பனைமரம்
யார் மறுத்தார்.

ஊர்கள் சிதறி
அகதிப்படையாய் கலந்தனர் மனிதர்கள்.
கலத்தலிலென்ன சிதறி ஓடுதலிலும், ஒரு
வேளாளக் கோவணத்தின்
கொடிக்கம்பமாய் அது
நிற்கும்வரை – அதன்
முறிவுக்காய் அழ மறுக்கிறது
என் மனசு!

– ரவி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: