சான்ரீஸ்!
கோலம் கொள்
கொள்ளை கொள்ளையாய்
கூந்தலாய் முகில் விரித்து
உச்சி வழிந்து
முகம் மறைத்து ஏமாற்றினாய்
எனை
சென்ற தடவை.
இறுமாப்பின்றி
உட்கார்ந்திருக்கிறாய்
இன்று நீ.
வானத்தை அதன்
எட்டா இருப்பிலே
விட்டுவைத்த பணிவு
இன்று உனக்கு.
நீலம் பாரித்திருக்கிறது வானம்.
காட்சிகளைக் கோர்த்துக் கோர்த்து
பார்வையைக் கோதுகிறாய்.
ஒரு சினிமாக்காரனின் கமராவிற்குள்ளோ
கம்பிய+ட்டர் புனைவுக்குள்ளோ
அகப்படாத நீ
ப+ச்சுகளற்று
ரம்யமாய் என்
கண்வெளியில் பரவுகிறாய்.
அகதிப் பாடலுடன் உனை
முதன்முதல் சந்தித்தேன்
பதினான்கு ஆண்டுகளின் முன்.
பாடலின் சோகம் துடைத்து எனை
ஒற்றிக்கொண்டாய்.
உச்சியை மோந்து நின்றேன்.
உறவுகொண்டேன்.
மனிதர்கள் அறியார் என்
கவி மனசு ஆழம்.
ஊடுருவிப் பரவினாய் நீ
இயற்கையின் கோலமாய்.
காலை கதிரவனின் முதல் கதிரிலிருந்து
மாலையை முடித்துவைக்கும்
இறுதிக் கதிர்வரை
உன் காட்சி நீளும்.
என்றிருந்த போதிலும்
நிலவின் ஒழுக்கில்
கருமை போர்த்து
நிமிர்ந்து நிற்பாய்.
நிறங்கள் கண்டிய முகில் திரள்களிடை
இருளும் கலைய மறுக்கும்
அமைதிச் சமுத்திரத்தில்
உறக்கம் கொள்வாய்.
இப்படியாய் தொடரும் உன்
காட்சிநீள் வாழ்வை
காண நான்
மீண்டும் மீண்டும் வருவேன் –
தனியாகவோ
நட்புகளுடனோ.
கோலம் கொள்
கொள்ளை கொள்ளையாய்!
– ரவி (01082001)