எனது பார்வையில் “செட்டை கழற்றிய நாங்கள்”

சந்திரவதனா செல்வகுமாரன்  (யேர்மனி)

95 இல் பதிவாக்கப் பட்ட ஒரு கவிதைத் தொகுதி ஆறு வருடங்கள் கடந்து ஏழாவது வருடம் என் கரம் வந்து குந்தியதில் எனக்கு நிறையவே மகிழ்ச்சி.

செட்டை கழற்றிய நாங்கள் – கவிதைத் தொகுப்பின் தலைப்பே ஒரு கவிதை போல – ஆனால் சோகத்தைத் தனக்குள்ளே நிரப்பி வைத்திருப்பது போன்றதொரு பிரமையை எனக்குள் தோற்றுவித்தது.

சிறிய தொகுப்பு ஆனாலும் தனக்குள்ளே புலம்பெயர் அவலங்களையும், புலம் பெயர மறுத்த நினைவுகளையும் நிறைத்து வைத்திருக்கிறது தொகுப்பு.

இக்கவிதைத் தொகுப்பு
இருப்பை இடம் பெயர்த்து சுவிசுக்கு மாற்றி விட்டு, அங்கு விருப்போடு அமர முடியாது தவிக்கும் பாலமோகன் எனப்படும் ரவியின் கவிதைகளால் தொகுக்கப் பட்டுள்ளது.

1995 இல் பதிக்கப் பட்ட இத் தொகுப்புக்கான முகவுரையை அ.மார்க்ஸ் அவர்கள் எழுதியுள்ளார்.

தற்போதைய புலம்பெயர் தமிழர்களின் நிலையை விட ஆரம்பகாலப் புலம் பெயர் தமிழர்களின் நிலை பரிதாபத்துக்குரியதாகவே இருந்தது.
அதை நான் முன்பும் ஒரு தடவை குறிப்பிட்டிருந்தேன்.

அந்தப் பரிதாபத்துக்குரிய புலம் பெயர் தமிழர்களில் இந்தக் கவிதைத்தொகுப்பின் கவிதைகளைப் புனைந்த பாலமோகன் ஆகிய ரவி அவர்களும் ஒருவர் என்றே எனக்குத் தோன்றுகிறது.
புலம் பெயர்வு அவருக்குள் ஒரு புயலையே ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

சொந்த மண்ணின் நினைவுகள் அவரை மிகவும் அலைக்கழித்திருப்பது அவர் வடித்த கவிதைகளின் வீச்சில் தெரிகிறது.
மிகவும் தரமான கவிதைகள். இன்னதென்று பிரித்துச் சொல்ல முடியாத படியான ஒரு ஆழ்ந்த தேர்ச்சியும் நிறைவான வளமும் அவர் கவிதை நடையில் தெரிகிறது.

அவர் கவிதைகளை வாசிக்கும் போது,
நீண்ட நாட்களாகக் கவிதை எழுதுவதையே மறந்து உறங்கியிருந்த எனது கற்பனைப் பறவை மெல்ல இறகு விரிக்க எத்தனிக்கிறது. உறைந்து போயிருந்த என் பேனாமை மீண்டும் ஊற்றெடுக்கத் தொடங்குவது போல ஒரு ஆனந்தம் எனக்குள்.
ஏதோ ஒரு சக்தி அவர் கவிதைகளுக்குள் இருப்பதை என்னால் உணர முடிகிறது. அதை எழுத்தில் வடிக்கத்தான் என்னால் முடியவில்லை.
எழுத்தார்வமும் வாசிப்புத்தாகமும் கொண்டவர்கள் கண்டிப்பாக இத் தொகுப்பை வாசித்துப் பார்க்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.

ரவி தன்னுரையில் இப்படிச் சொல்கிறார்.-

இது எனது முதல் கவிதைத் தொகுதி. சுமார் ஐந்து ஆண்டு கால இடைவெளிக்குள்ளான கவிதைகள் இவை. கடந்தகால கசப்பான சமூக அனுபவங்கள் – இதன் தாக்கங்கள், வேரறுந்த இன்றைய அகதி வாழ்வு என்பன உணர்வு நிலையில் – இந்நிலைமையிலுள்ள எல்லோரையும் போலவே – என்னைப் பாதிக்கிறது. இவற்றைக் கவிதையில் பதிவு செய்வது திருப்தி தருகிறது.

என்று தொடங்கி …..தொடர்ந்து

கவிஞனின் உணர்வு நிலை உயர்ந்தது. அதை அர்த்தப ;படுத்துவதற்கு வாழ்வியல் விதிமுறைகள் மீதான புரிதல்கள், தேவையாயின் அதன் மீதான தாக்குதல்கள் கூடத் தேவை. ஆதிக்க சக்திகள் மறறும் அதன் நிறுவனங்களால் (அரசு, மதம், குடும்பம், பாடசாலை…..) கட்டமைக்கப் பட்ட கருத்தியல்கள் – புனைவுகள் மற்றும் வாழ்வியல் விதிமுறைகள் எல்லாவற்றையும் இயல்பானது என்று ஏற்றுக் கொள்ளும் ஒருவனின் உணர்வு நிலை கவலையையும் விரக்தியையும் தாண்டிவிடப் போவதில்லை. எனது கவிதைகளும் இவற்றை முழுமையாய்த் தாண்டியதாயில்லை.

என்று முடித்திருக்கிறார்.
இவரின் கவிதைகளில்
சிறுவயது நினைவுகள், கனவுகள், இளமைக்கால பசுமையோடு பின்னிப்பிணைந்திருந்த தாயக ஏக்கங்கள்,
புலம்பெயர் மண்ணில் அந்நாட்டு மக்களது அந்நியன் என்றதான பார்வைகளை
எதிர் கொள்ள முடியாத தவிப்பு,
நிறம் ஒரு குறையாக அவர்கள் பார்வைக்குள் தான் குறுகிப் போனதிலான இயலாமையுடனான கோபம்……. என்று
பலவிதமான ஆற்றாமைகள் புதைந்து கிடக்கின்றன.

அவைகளை எழுதிய விதம் மிகவும் அழகாக, கவிதைக்கே உரிய கவர்ச்சியுடன்
மீண்டும் மீண்டும் அவைகளை வாசிக்கத் தூண்டுகின்றன.
புலம்பெயர்ந்தவர்கள் ஊரில் உள்ளவர்களுக்குப் பணமனுப்ப வேண்டிய ஒரு கட்டாய அவஸ்தையில் தம்மைத் தொலைப்பதைக் கூட அவர் கவிதையாக்கத் தவறவில்லை.
அது பற்றியதான யாரொடு நோக….. என்ற கவிதையிலிருந்து ஒரு சில வரிகள் –

நித்திரைப் பாயில் வைத்தே அமத்தும்
இந்த கொழும்பு ரெலிபோன் க்கு
விவஸ்தையே கிடையாது.
தனது காலில் தட்டுப் படும் எல்லாவற்றையும்
உதைத்து நொருக்கி
இருளில்
என்னை வந்து உலுக்கி எழுப்புகிறது.
மொட்டவிழும் போலிருக்கும்
என் சின்னச் சின்ன ஆசைகளைக் கூட
நுனிவிரலால் கிள்ளி எறிந்த படி
கைவீசி வருகிறது – ஒரு குழந்தைபோல்!
என்னால் கோபிக்கக் கூட முடிவதில்லை.
கடைவாயால் ஒழுகும் சிரிப்பும்
தேவைகளும்
எனது உழைப்பை அதிகம் கேட்டு
சுற்றி நின்று தொந்தரவு செய்யும்………..
………………………………………………………………..
…………………………………………………………………
சிலவேளைகளில் அது
நிதானமாய் வருவது போல
குரல் கொடுத்த படி வரும்.
எனக்கும் எனது அத்தான்மாருக்குமிடையில்
கால் மீது கால் போட்டு
அனுபவஸ்தன் போல் அமர்ந்து கொள்ளும்.
அத்தான்மாரின் புதியவிலை கேட்டோ
அல்லது பாக்கி விலை கேட்டோ
பேச்சைத் தொடங்கும்.
போதாததிற்கு தன்னுடன் யதார்த்தத்தை
அழைத்து வருகிறது,
தலையாட்டுவதற்காக.
எனது நியாயங்களை
இருவருமாய்த் தின்றுதீர்ப்பது
அத்தான்மாருக்கு மகிpழ்ச்சியளிக்கிறது –
எனது சகோதரிகளுக்குங்கூடத்தான்!

காலைப் பொழுது என்னை எடுத்துப்
பிணைத்துக் கொள்வதில் அவசரப்படுத்தும்
நானோ இவர்களுக்கு வழி சொல்லியாக வேண்டும்.
இந்த இழுபறியில்
எனது இடைவெளி நேரங்களும்
விழுந்து நொருங்கும்.
30 கவிதைகளைத் தன்னகத்தே கொண்ட இக்கவிதைத் தொகுதியில்
ஒவ்வொரு கவிதைக்குள்ளும் உயிரோட்டமான ஒவ்வொரு விதமான உணர்வுகளும் நெகிழ்வுகளும் நிகழ்வுகளும் இருக்கின்றன.

மெழுகுதிரியில் அமர்ந்திருக்கும் தீபத்தைக் கூட அவர் விட்டு வைக்கவில்லை.
அந்தத் தீபத்தின் மீதான அவரது பிரசவிப்புகள் என்று கவிதை சுவையானது.
சுகமானது. ஆனால் ஆழ்ந்து கருத்தை உணர்ந்து வாசிக்கும் போது இருப்பை இழந்த அவரது சோகம் தெரிகிறது.
(பக்கம் – 39-40) ( கவிதை உங்களிடம் இல்லையானால் தருகிறேன்)

பிரசுரமாகும் கடிதம் என்ற கவிதை – 83 யூலைக் கலவரத்தில் தமிழர் கப்பலேற்றப் பட்ட போது – ஒரு சிங்களப் பெண்ணுடனான சினேகமான உறவும் கப்பலேற்றப் பட்டதைச் சொல்கிறது.

இப்படியே இவரது ஒவ்வொரு கவிதையும்…. அர்த்தங்களுடன் கவிதைநயம் குன்றாமல் அருமையாகப் புனையப் பட்டுள்ளது.

இருந்தாலும், இத்தொகுப்பைப் பற்றியதான எனது அபிப்பிராயத்தின் ஒரு துளியையே என்னால் இங்கு தரமுடிந்தது. அது ஒரு குறையாக அமையாது என்ற நம்பிக்கையுடன் தற்போதைக்கு முடிக்கிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: