ஓடு!
முடிந்தால் நுனி நகத்தை ஊன்றி
பறந்துவிடு.
எனது முகம் உடைந்து
அள்ளுண்டு போகிறது-
உனது மூச்சில்.
சுவாசப் பையுள் கல்நிரப்பும் குரங்குத் தனத்தோடு
கெந்தித் திரிகிறது காற்று.
இன்னமும் இரத்தம் பாய்ச்சப்படாத
புதிய இதயங்களோடு
எமது குழந்தைகள்
ப+மியில் தளிர்க்கட்டும்.
பறந்துவிடு!
நீளமாய், உனது விரல் இடுக்கில்
புகைகிறது யுத்தம்.
ஊதிமகிழ்ந்தது போதும், அணைத்துவிடு.
எமது வாழ்வு உடைக்கும்
தண்டனையின்
கொடூரம் பாரித்த கைதிகள் நாம்.
வளம் தின்று கொழுக்கும்
யுத்த வாயிலிருந்து
எமது நாட்கள் துப்பப்படுகின்றன.
மனிதப் பிறவி மிருகம்போல.
எமது கைமடக்கி
நிலத்தில் ஊன்றி, நடக்கக் கற்றுக் கொண்டதல்லால்
வேறென்ன கண்டோம் உன்னிடத்தில்?
பறந்துவிடு!
வேலியோரம் ஒரு புல்முளைத்து
நாட்களுக்கு
நிறம் வழிந்து
எனை மகிழ்விக்கட்டும்.
எமது நாட்களை
மெல்லிழையாய் எடுத்து
பின்னிடுவோம் -சிலந்தி வலைபோல்.
எண்திசையும் கைகால் எறிந்து
பாரமற்று, நாம் மிதந்து திரிவோம் –
அந்த நாட்களில்.
ஒரு புதிய நீ அப்போ பிறந்திருப்பாய்!
-ரவி (சுவிஸ்)