புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் பொழுதுபோக்கின் பெரும்பகுதியை ஆரம்பத்தில் தமிழ்ச் சினிமா விழுங்கியிருந்தது. இப்போதெல்லாம் புலம்பெயர் வானொலிகள் (தொலைக்காட்சி?) இதை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கின்றன. வலிமையான வெகுஜன தொடர்புச் சாதனங்கள் என்ற வகையில் எமது தமிழ்ச் சமூகத்தின்மீது இவை ஏற்படுத்தும் பாதிப்பு அதிகமானது.
சமூக நோக்கின் அடிப்படையில் இவை எந்தளவுக்கு செயற்படுகின்றன என்றளவுக்கு முழுமையான ஆய்வுக்குள் இவ் விமர்சனம் போகவில்லை. இவ் விடயத்தில் எல்லா வானொலிகளையும் பொதுமைப்படுத்துவதில் சில சிக்கல்களுமிருக்கின்றன. இருந்தபோதும் நாட்டின் போர்ச்சூழல், அல்லலுறும் மக்கள் என்பவற்றை விடுதலைக்கான தேவையோடு இணைப்பதிலும் பார்க்க, புலம்பெயர்ந்து வந்ததினால் ஏற்பட்ட குற்றவுணர்வுகள் மீதான வேல்பாய்ச்சலாக அவற்றைப் பாவிப்பதில் ஒன்றுபட்டுத்தான் இருக்கின்றன. இதன்மூலம் விடுதலைக்கான பங்களிப்பாக புலம்பெயர் மக்களிடமிருந்து பணத்தை பெற்றுக் கொடுப்பதை மட்டுமே தமது சமூக நோக்காகக் குறுக்கிக் கொண்டுள்ளதை வானொலி நிகழ்ச்சிகள் சில படம்பிடிக்கின்றன. அதுமட்டுமன்றி ~நாட்டைவிட்டு ஓடிவந்திட்டம்@ எங்களுக்கு போராட்டத்தை விமர்சிப்பதற்கு என்ன தகுதியிருக்கு~ என்று பொறுப்பின்றி நொந்துகொள்ளும் அல்லது விமர்சனங்களை மறுக்கும் போக்கும் இவ் வானொலிகளால் உரப்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் ஒரு தமிழ்ஜீவி தனது உரிமைகளை தாரைவார்க்கும் போக்கும் மாற்றுக் கருத்துக்களுக்கான சூழலை மங்கச்செய்வதான போக்கும் உரமூட்டப்படுகின்றன. கருத்தியல் தளங்களை சமூக நோக்கு நிலையில் நின்று அணுகாமல் அதை வளர்த்தெடுக்காமல் பொதுப்புத்திக்குள் நேயர்களை உழலவைப்பதுக்கு மேலால் ஒரு அடிகூட நகரமுடியாமல் குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டிக் கொண்டிருக்கின்றன.
விவாதங்களை நடத்துவதில் ஒரு சமூகப் பொறுப்பு இருக்கிறது என்பதை விவாதங்களை நடத்தும் அறிவிப்பாளர்கள் சிலர் புரிந்து வைத்திருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டுப் பட்டிமன்றங்களில் காணப்படும் அளவுக்குக்கூட இந்த பொறுப்பு ரிஆர்ரி யின் நடுஇரவு விவாதக் களத்தில் உணரப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. இந்த விவாதங்களை நடத்துவோர் ~பேசப்படும்~ வானொலி அறிவிப்பாளர்களாக இருப்பது மட்டும் ஒன்றும் விவாதத்தைக் களப்படுத்துவதற்கான தகுதியைத் தந்துவிடாது. வெறும் பொதுப்புத்தியில் அதுவும்கூட அதற்குள் நிகழ்த்தப்படக்கூடிய சீர்திருத்தவாதப் போக்கில்கூட இல்லாமல் கடைக்கோடித்தனமான அறிதல்களுடன் விவாதத்தை நடத்துவதில் பயனில்லை. குரல்வளமும் பம்பலடிக்கும் திறமையும்தான் விவாதத்தை நடத்துவதற்கான தகுதியை தந்திருப்பது ஒரு அவலம்.
ரி;ஆர்ரி யில் சில நாட்களாக நடுஇரவில் நடந்த விவாதமொன்று (மே மாத முன்நடுப் பகுதியில்) -பெண் ஒடுக்குமுறையை புரிந்துகொண்டிருந்த- பலரை விசனப்படுத்தியிருந்தது. அப்பட்டமான ஆணாதிக்க நிலையில் நின்று விவாதங்களை தொகுப்பது, முன் நிபந்தனைகள் விதிப்பது, விவாதங்களுக்குள் மூக்கை நுழைப்பது, வசதியாக உதாரணங்களை எடுத்து விடுவது… என்று பொறுப்பின்றி நடந்தார் அறிவிப்பாளர். இதன்மூலம் ஆணாதிக்க மனோபாவங்கள் உசும்பிக் கொண்டன. வாதங்களை பிரயோசனமாகவும், அதன் தலைப்புக்குள்ளும், தனிநபர் தாக்குதலுக்கான களமாக ஆக்காமலும் களப்படுத்துவதற்குப் பதில் இவற்றை சிதைத்து விவாதத்தை வளர்த்துவிட்டார் அறிவிப்பாளர். தங்களுக்கு துதிபாடும் நேயர்களை உற்பத்தி செய்வதால் தமிழ்ச் சமூகத்துக்கு வானொலிய+டாக எதை வழங்கப் போகிறார்கள் இவர்கள்?
புலம்பெயர் சமூகத்தில் வாசிப்புத் திறன் மிக மோசமான நிலையிலேயே இருக்கிறது. இங்கு வெளிவரும் சிறுபத்திரிகைகள் என்பது பலருக்கு எட்டத்தில் உள்ள சமாச்சாரம். வெகுஜனப் பத்திரிகைகளின் வாசிப்பும்கூட கணிசமான அளவில் இல்லை. புலம்பெயர் மொழியில் புலமையற்ற நிலையில் இந் நாட்டு மொழிகளில் வெளியாகும் வெளியீடுகள் மீதான வாசிப்பு, அறிதல் எப்படியிருக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. இயந்திர வாழ்கையை -இதில் ஓரளவு உண்மை இருந்தபோதும்கூட- தமது அறிவுத் தேடலின்மீதான சோம்பேறித்தனத்துக்கு கணிசமானோர் காரணம் காட்டுவதில் சளைக்கவே மாட்டார்கள். இந்த வகையறாக்களுக்குள் உள்ள ஒருசிலர் ரிஆர்ரி யில் நடுஇரவு நேரங்களில் நடத்தப்படும் விவாதங்கள் உட்பட அனைத்து விவாதங்கள், தொலைபேசி நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் சளைக்காமல் ஈடுபடுகிறார்கள். அதற்கு மட்டும் அவர்களுக்கு போதியளவு நேரம் கிடைத்துத்தான் விடுகிறது. கோயில் மேளம்போல சகல விவாதங்களிலும் (குறிப்பிட்ட ~ரெக்ஸ்ற்~ தான் அவர்களிடம் இருக்கும். அதை விவாதத்தின் தலைப்புக்கு ஏற்ப நெளித்து) பங்குபற்றுகிறார்கள் சிலர். அவர்களின் பெயர்கள் அறிவிப்பாளருக்கு மட்டுமல்ல, தொடர்ந்து வானொலியைக் கேட்கும் நேயர்களுக்கும் பாடமாகிவிடும். இதன்மூலம் ஒருவகை பிரமுகர்களாகிவிடுகிறார்கள். இந்த பிரமுகர்கள் தமக்குள் தொடர்புகளை பேணி அணிசேர்கிறார்கள். விவாதங்களில் ஒருவரை ஒருவர் தெரியாததுபோல சார்பானவர்களை விவாதத்தில் ஆதாரம் காட்டிச் செல்வார்கள்@ எதிரானவர்களை தாக்குவார்கள். இந்தவகை அணிதிரளலின் மூலம் தனிநபர் தாக்குதல்களை நோக்கமாக வைத்தே விவாத கருத்துக்களை முன்வைப்பதும்கூட அவர்களின் விவாத அம்சம்தான் என்பதை தொடர்ந்து இவ் வானொலி விவாதங்களை கேட்பவர்கள் புரிந்துகொள்ள முடியும். இதன்மூலம் தனது கருத்தை நேர்மையின்றியும் சந்தர்ப்பவாதமாகவும்கூட முன்வைக்கின்றனர். பலதரப்பட்ட கருத்துக்களுக்கான முனைப்புகளுக்கு சந்தர்ப்பம்; இல்லாமல் செய்து நேரத்தை கொறித்துவிடுகின்றனர்.
இவ் வகையறாவைச் சேர்ந்த ஒரு நேயருடன் தொலைபேசியில் தனிப்பட தொடர்புகொண்டபோது எனது மதிப்பீடுகளை உறுதிப்படுத்துவதுபோல் இருந்தது.
அறிமுகம் – சுமார் 3 நிமிட நேரம். எப்படி எனது தொலைபேசி இலக்கத்தை எடுத்தீர்கள்? கோழையாக இல்லாமல் சொல்லுங்கள். யார் தந்தார்கள்?. இப்படியே 3 நிடமும் முயன்றுகொண்டிருந்தார்.
சுமார் 50 நிமிடம் கதைத்தோம். அவ்வளவு நேரமும் (நான் சாதாரணமாக உரையாடலாமே என்று கேட்டுக் கொண்டும்கூட) மேடைப்பேச்சு தமிழில் பேசிக்கொண்டார். வானலையில் வராமல் தொலைபேசியில் வந்திருக்கிறீர்கள் என்றார்.
முன்னர் (ஆர்ஏசி) கனேடிய வானொலியில் கதைத்தபோது முற்போக்கான கருத்துக்களை வைத்தெல்லாம் கதைப்பீர்கள். இப்போ ரிஆர்ரி யில் இப்படி மோசமான வாதங்களை முன்வைத்தீர்களே என்று கேட்டபோது சொன்னார்,
அந்த வானொலி கேட்டதென்று சொல்கிறீர்கள்@ அப்படியென்றால் என்னை நன்றாக புரிந்துகொண்டிருப்பீர்கள். இது ரிஆர்ரி என்றார்.
பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம் என்றெல்லாம் யாராவது சரியாக விளக்கினால் அதுபற்றி நாம் விவாதங்களை முன்வைக்கலாம். ஒருத்தரும் சொல்கிறார்களில்லையே? என்று வானொலி விவாதத்தில் சொன்னீர்கள். சரி அதுபற்றி தெரியாமல் எப்படி விவாதத்தில் பங்குபற்றினீர்கள்? சரி அதை விடுவம். விவாத நிகழ்ச்சி தொடங்கியவுடன் ஒருவர் அதுபற்றி விளக்கமாக தொலைமடல் மூலம் அனுப்பிய கடிதத்தை அறிவிப்பாளர் வாசித்தாரே? (இக் கடிதம் எழுத்து தெளிவில்லாமல் இருக்கிறது என இடையில் வாசிப்பது நிறுத்தப்பட்டது இவ் இடத்தில் குறிப்பிடப்பட வேண்டியது) என்றபோது, நான் இடையிலிருந்துதான் கேட்டேன்@ அதனால் தெரியாது என்றார். கேட்காமல் எப்படி அவ்வாறு விவாதத்தை முன்வைத்தீர்கள் என்றேன். திசைதிரும்பி, அத் தொலைமடல் எழுதிய பெண் பற்றி சொல்லத் தொடங்கினார். நான் அதை இடைநிறுத்தினேன்.
இந்த உண்மை உதாரணம் எனது மதிப்பீடுகளுக்கு ஒரு மாதிரியாக இருந்ததால் இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
இதேபோல அந்த அறிவிப்பாளரையும் ஒரு சிறு அறிமுகம் செய்கிறேன்.
அறிவிப்பாளர்: பாரதியார்கூட தனது மனைவியிடம் அடிவாங்கினார்@ ஏன் தெரியுமா? (நகைச்சுவை கலந்த தொனியுடன்).
நேயர்: தெரியாது
அறிவிப்பாளர்: பட்டினி தாங்க முடியாமல் தனது மனைவி பக்கத்துவீட்டிலை வாங்கிவந்த சாப்பாட்டை காகங்களுக்கு போட்டுக்கொண்டிருந்தாராம்.
அறிவிப்பாளரின் மறுவாசிப்பு அப்படி. இவருடைய பாரதியார் அரிசியை சிட்டுக் குருவிகளுக்குப் போடவில்லை. சாப்பாட்டை காகங்களுக்கு போட்டிருக்கிறார்.
இதைவிட இதற்குள் இருக்கிற கடைக்கோடித்தனம் என்னவென்றால் பெண்விடுதலை பேசிய பாரதிமீதே மனைவி வன்முறையை பிரயோகிப்பவளாக இருந்தாள் என்று சித்தரிப்பதுதான்.
இவ் விவாதத்தில் பங்குபற்றிய இன்னொரு நேயர் சொன்னார்,
பெண்ணடிமைத்தனம் எண்டதெல்லாம் எப்பவோ காலாவதியாகிப்போன பிரச்சினை. அதை இப்ப கிளறி எடுத்து கதைக்கிறார்கள்.
ஏதோ உரிமையுடன் கோபப்பட்டு பேசினார். இந்த சகிப்பின்மைக்குப் பின்னால் இருந்த உளவியல் ஆணாதிக்க மனோபாவம்தான் என்பது அவருக்கு விளங்க நியாயமில்லை.
எந்த நிகழ்ச்சியை எடுத்தாலும் பெண்விடுதலை பெண்விடுதலை எண்டு சிலர் (யாரையோ மனதில் வைத்து) கவிதை எழுதிறதும், கதை எழுதிறதுமாக இருக்கினம் என்று எரிந்து விழுந்தார்.
இன்னொரு நேயர் வந்தார். பியர் அடிக்கிறதுக்கும், படுக்கிறதுக்கும்தான் பெண்விடுதலை கேட்கினம் என்றார்.
பெண்ணியம் சம்பந்தமான கோட்பாடுகள், விவாதங்கள் உலகம் ப+ராவும் (ஓரளவுக்கு தமிழ்ச் சூழலிலும்கூட) இன்று வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் நிலையில் இப்படியான விவாதங்களை பொருத்திப் பார்த்தால் வெட்கப்படாமல் என்ன செய்ய முடியும்.
இவ் விவாதத்தில் பெண்ணிய வாதிகளின் மீது தாக்குதல் தொடுப்பதில் சிலர் (ஒருசில பெண்களும் உட்பட) தமது தொனியை வெளிப்படுத்தினார்கள். ஆணாதிக்க கருத்தியல்களே சமூகத்தின் கருத்தியல்களாக இருப்பது என்ற அடிப்படையான விடயம்கூட இவர்களில் பலருக்கு புரியாமல் இருந்தது. இக் கருத்தியல்களை உள்வாங்கிய பெண்ணும் ஆண்நோக்கில்தான் நின்று கதைப்பாள் என்பதை (அறிவிப்பாளர் உட்பட) பலர் புரிந்து வைத்திருப்பதாகத் தெரியவில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பிரச்சினையாக இவ் விவாதத் தலைப்பு (எமது சமூகத்தில் பெண்கள் சமத்துவமாக நடத்தப்படுகிறார்களா? இல்லையா? என்பதுதான் தலைப்பு) குறுக்கப்பட்டுவிட்டது. இந்த எல்லைக்குள்தன்னும் பெண்களின் ஒடுக்கப்படும் உணர்விலிருந்து எழும் விவாதங்களை அதன் நியாயங்களை புரிந்துகொள்ளவாவது முயற்சிப்பதற்குப் பதில் ஆண் அதிகாரத்துவ மனோபாவத்தில் நின்று சகிப்பின்மையுடன் எதிர்வாதம் புரியப்பட்டது. (இருந்தபோதும் இந்த அடாவடித்தனத்துக்குள்ளும் சில பெண்கள் தங்கள் கருத்துக்களை ஓரளவு பெண்நிலையில் நின்று துணிவுடன் முன்வைத்தார்கள் என்பதும் குறிப்படப்பட வேண்டிய ஒன்று.) முன்னால் நின்றிருந்தால் அடித்து நொருக்கிவிடுவார்களோ என்று எண்ணுமளவுக்கு ஒருசில ஆண்கள் திமிருடன் பேசினார்கள். இவ்வாறான விவாதங்கள்கூட அறிவிப்பாளரின் திறந்த மடைகளுக்கூடாக தடுப்பேதுமின்றி பாய்ந்துகொண்டிருந்தது. பெண்நிலையிலான விவாதங்கள் பல தடவைகளில் குறுக்கீடுகள் செய்யப்பட்டன. இதை சில நேயர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர்.
நீங்கள் ஒருபக்க சார்பாக நடந்துகொள்கிறீர்கள் என்று ஒரு பெண் நேயர் -நியாயமாகவே- குற்றஞ்சாட்டியதற்கு, தான் அப்படி செய்வதன்மூலம் விவாதத்தை தூண்டுவதாக அறிவிப்பாளர் சாதுர்pயம் புரிந்தார்..
இந்த இலட்சணங்களில் நடத்தப்படும் விவாதங்கள் தமிழ்ச் சமூகத்தின் பெண் ஒடுக்குமுறைக் கருத்தியலில் ஒரு சிறு அசைவைத்தானும் ஏற்படுத்துமா என்பது சந்தேகமே. ஆயுதம் ஏந்திப் போராடும் தமிழீழப் பெண் போராளிகள் பற்றி ஆணாதிக்க மனோபாவம் படைத்தவர்கள் பெருமைப்பட்டுக் கொள்வதில் -பெண்நிலையிலான- அர்த்தம் என்ன இருக்கிறது. இன ஒடுக்குமுறை, ஆண் ஒடுக்குமுறை என்பற்றினூடாக தேசிய விடுதலைப் போராட்டத்தில் தியாகங்கள் புரியும் இந்தப் பெண் போராளிகளின் எதிர்காலம் பற்றி கவலைகொள்ளாமல், ஒருபுறத்தில் அவர்களை பெருமைபேசிக்கொண்டு மறுபுறத்தில் ஆணாதிக்க வீம்பு பேசும்; இவர்களே எதிர்காலத்தில் மீண்டும் இவர்களை அடுக்களைக்கு அனுப்பிவைக்கப் போகிறவர்கள். வியட்நாமும் நிக்கரக்குவாவும் இதற்கு சிறந்த உதாரணங்கள். அங்கு வீரஞ்செறிந்த போராட்டத்தை நிகழ்த்திய பெண் போராளிகள் போராட்டம் முடிவுற்றபோது குசினிக்கு அனுப்பபட்டதும் அல்லது விபச்சாரிகளாக மாறியதும் நடக்கத்தான் செய்தது. அவர்களுக்கான சமூக உத்தரவாதம் போராட்டத்தின்போது கட்டியெழுப்பப்;படாமல் இருந்ததே அதற்கு முக்கிய காரணம். சமூகத்தின் ஆணாதிகக் கருத்தியலை மாற்றியமைக்காதவரை இந்த ஆபத்து நிகழ்ந்தே தீரும். வெறும் சட்டங்களாலோ பயமுறுத்தலினாலோ அல்லது மனிதாபிமானத்தாலோகூட இவற்றைச் சாதிக்க முடியாது.
இப்படியிருக்க பெண்ஒடுக்குமுறை காலாவதியாகிப்போன ஒன்று என்று வாதிடவும், தமிழீழத்தில் அப்படியெல்லாம் இல்லை என்று சிறுபிள்ளைத்தனமாக பேசிக்கொள்ளவும், ஆணாதிக்கம் என்றால் அலர்ஜி கொள்ளவும், பெண்விடுதலை பேசுபவர்கள்மீது தாக்குதல் தொடுக்கவும், பெண் ஒடுக்குமுறை பற்றி ஆணாதிக்கம் பற்றி தெரிந்துகொள்ள மறுப்பதும்தான் இவ்வகை விவாதங்களில் கட்டமைக்கப்படுமென்றால்,
திருப்திப்பட்டுக் கொள்ள என்ன இருக்கிறது??
ஆதுசரி, பெயரிட விரும்பாத நேயரின் காரசாரமான பக்ஸ் கடிதத்துக்கு பதிலளித்தபோது, ரிஆர்ரியின் பணிப்பாளர் ~தனது தந்தையின் பெயரைச் சொல்ல வெட்கப்படும் தனயனாக இருக்கிறார் என்பதுதான் அர்த்தம்| என சந்திச் சொல்வேட்டுகளை தீர்த்துக் கொண்டவரல்லவா@ அவரது வானொலி என்ன பேசப்போகிறது போ என்கிறீர்களா??
-ரவீந்திரன்
15051999
(இவ் ஆக்கம் பரிசிலிருந்து வெளிவரும் -தமிழ்த் தேசியப் பத்திரிகை என தன்னைத்தானே அறிவித்துக் கொள்ளும்- ~ஈழமுரசு|க்கு பிரசுரத்துக்காக அனுப்பப்பட்டது. புpரசுரமாகவுமில்லை. பதிலுமில்லை.)