தொற்றவைப்பது எதை?

எப்பிடி சுவிஸ் சனம். உங்களோடை எப்படி?

என்ன… எங்களை ஸ்வாற்ஸ் (கறுப்பர்) என்று சொல்லுவாங்கள். சிலவேளைகளில் இதைச் சொல்லி திட்டுவாங்கள்.
அவங்களுக்குச் சொல்லு, ஊரிலை நாங்கள்தான் வெள்ளையெண்டு.

சிரிப்பதற்கு மட்டுமல்ல ஒரு பொறியாய் அது மனசில் விழுந்தது.

காதலுக்கு குறுக்கே பெற்றோர் வருவது பிழை. அதுவும் புலம்பெயர் நாட்டில் இப்படி குறுக்கே வருவது மோசமான விளைவைத் தரலாம்.
விவாத மேடையில் இப்படி பேசிக்கொண்டிருந்தார் ஒருவர்.
அவருக்குத் தெரியாமலே அவரின் பேச்சு கோணலானது.
என்ரை பிள்ளை ஒரு கறுப்பனை காதலிச்சால்கூட நான் குறுக்கிடமாட்டேன் என்கிறார்.

பொம்பிளை எப்பிடி நிறமோ?
ஆ.. கறுப்…பா?
கல்யாணப் பேச்சில் கேட்டான் என் நண்பன்.
இயல்பாய் பதிலளித்தேன் நான், எதுவித தடங்கலுமின்றி.

என்னிடம் இருட்டு இருந்தது.
பற்றிக்கொண்ட பொறி என்னில் அணைவதாய் இல்லை. அது வளர்ந்துகொண்டிருந்தது.

அந்தக் கலைஞன் மேடையில் தனிநபர் நடிப்பில் வியாபித்துக் கொண்டிருந்தான். புலம்பெயர் வாழ்வின் அவலங்களை முகம் இழந்த மனிதனாக சித்தரிப்பதில் காற்றோடு கலந்துவிட்டிருந்தான்.
இப்போ அவன் பரீஸ் மெட்ரோ நிலையமொன்றுக்கு எம்மை அழைத்துச் சென்றிருந்தான். ஒரு ஆபிரிக்கர் ஏறுகிறார். பின் கதவால் அவரது நாட்டைச் சேர்ந்த இன்னொருவர் ஏறுகிறார். அவர்கள் சுகம் விசாரிக்கிறார்கள் உரத்த குரலில். மிக உரப்பாக பேசிக் காட்டுகிறார் நமது கலைஞர். அவர்களின் மொழியை அறியாதவர் அவர். எம்மை சிரிக்க வைப்பதில் அவருக்கு வெற்றிதான். (அப்படியாக உச்சரிப்புகளை அள்ளி வீசினார்.) அவர்களின் கலாச்சார அடையாளங்களை வெள்ளைத்துவத்துடன் ஒப்பிட்டோ என்னவோ நானும் சிரித்துக் கொண்டுதான் இருந்தேன்.

இவையெல்லாவற்றையும் என் பொறி கிளறி எடுத்து தின்று கொழுத்துக் கொண்டிருந்தது. இப்போ அது என்னைச் சுடுமளவிற்கு வளர்ந்துவிட்டிருந்தது.

சிறீலங்கா எங்கை இருக்கு? ஆபிரிக்காவிலா? என்று சிலர் அப்பாவித்தனமாகக் கேட்டுவிடும்போது துடித்துப் போவேன்;. விழுந்தடித்து மறுத்து ஆசியாவில் என்று நிறுவியபின்தான் மூச்சே…

நாங்கள் கறுப்பல்ல@ பிரவுண் என்பேன்.

எனக்கு குழப்பங்கள் எழுந்துகொண்டிருந்தன. வெள்ளைத் தோல் பிரவுணாக வரவேண்டும் என்பதற்காக சூரியக் குளிப்புக்காக அலைவார்கள். குளித்து குளித்து பின் ஓரிரு நாட்களில் மறைந்து போய்விடுவதற்குள் அந்த பிரவுண் நிறத்தை மற்றவர்களுக்குக் காட்டிக் கொண்டாடுவார்கள்.
ஸோன் பிரவுண். அப்படிச் சொன்னால்தான் அவர்களுக்கு திருப்தி தரும்.

அப்படியாயின் எங்களை ஏன் கறுப்பர் என்கிறார்கள்.

தமிழன் தமீலன் இரண்டுமே எனக்கு ஒரே உணர்வைத் தருவதில்லை.
தமிழன் என்பதன் டொச் மொழி பெயர்ப்பு தமீலன் என்பதற்குள் என் மனசு இப்போ அடங்குவதாகவும் இல்லை.

தமீலன் என்று ஒருவன் சொல்லும் போது ஓங்கி அறைய வேண்டும்போல் இருக்கிறது எனக்கு.

கறுப்பன் என்பதும் ஒரு நிற ரீதியிலான அடையாளப் படுத்தலாக மட்டும் ஏற்க முடியாமல் இருந்தது.

ஸ்வாற்ஸ்.
ஆம் நான் கறுப்பன்தான்.
பிரவுண் என்று சாதிப்பதை நான் தவிர்த்தேன். இன்னும் சொல்லப் போனால் சாட்டுக்கு அப்படிச் (பிரவுண் என) சொல்வதை நான் வெறுத்தேன்.

நிறம் அப்பிடியெண்டாலும் என்ரை மனசு வெள்ளை என்று எனது முகம்கோணாமல் யாராவது சொல்லும்போதெல்லாம்
இல்லை, என்ரை மனசும் கறுப்புத்தான் என்பேன். என் சொற்கள் அவர்களை ஓங்கி அறையும்.

எனது நண்பன் கனடாவுக்குச் செல்லும் வழியில் பொட்சுவானாவில் தடங்கிப்போனான். சுமார் ஒன்றரை வருடம் அங்கு வாழ்க்கையை ஓட்டிவிட்டு கனடா போய்ச் சேர்ந்திருந்தான்.
என்ரை வாழ்க்கையில் அப்பிடி நல்ல சனங்களை காணவே ஏலாது. என்ன அருமையான சனம் என்று எழுதியிருந்தான்.

வெளிப்படையாக பழகுவது அவர்களின் சிறப்பம்சம் என்றான்.
கறுப்பை அப்படித்தான் நான் அடையாளப்படுத்துகிறேன்.
என் மனதை கறுப்பு என நான் கொண்டாடுகிறேன்.

தடித்த சொண்டுகளும் எனக்கு அழகைக் காட்டியது.
மனம் திறந்து அட்டகாசமாய்ச் சிரிப்பதும் உவப்பைத் தந்தது.

ஊரில் எனக்கு ஒரு ஆசிரியர் இருந்தார். ஒவ்வொருத்தருக்கும் பட்டப் பெயர் வைப்பதில் சூரன். கறுவல், சிவலை, வெள்ளையன், கொக்கன், அரிக்கன் (கட்டை இனம்), கிளி மூக்கன்… என்றெல்லாம் பெயர்கள் புழங்கும். அப்படி நாம் மற்ற மனிதர்களின் தோற்றமும் எமக்கு அலசலுக்கான விடயங்களாக இருந்தன. மற்ற மனிதர்களை தோற்றத்திலும்கூட அங்கீகரிக்கப் பழகாமல் வாழ்ந்தோம்.

கடந்த பல வருடமாக கொட்டியிராத ளழெற கொட்டியிருந்தது. பனித்திரளில் நிலம் நுரைத்துப்போய்க் கிடந்தது. வெள்ளை பளிச்சென்றிருந்தது. விதவிதமாக படங்கள் எடுத்தேன். நானில்லாத காட்சிகள் மட்டும் தேறியது. ளழெற என்னுடன் ஒட்டாததுபோல் இருந்தது. ஆனாலும் ஆழப் புதைய புதைய நான் நடந்ததும் அள்ளியெறிந்து விளையாடியதும் பொய்யில்லை. அதில் நான் மகிழ்ந்திருந்ததும் பொய்யில்லை. நான் நின்றெடுத்த படங்களை ஏன் நான் கிழித்தெறிந்தேன். புரியவில்லை. எனது ஆசிரியரின் மொழியில் அதற்கான விடை சுலபமாகவே கிடைத்துவிடும்.
எனது நிறத்தை நான்கூட அங்கீகரிக்க பழகியிருக்கவில்லையோ என்னவோ.

எனக்கு அவனிடம் பொறாமை இருந்தது. அவன் ஒரு ஆபிரிக்கன். என்போலவே வேலைசெய்தான். மனம்விட்டுப் பழகுவான். ஸ்வாற்ஸ் (கறுப்பன்) என்று யாராவது திட்டினால் அவன் பேசத் தொடங்கிவிடுவான். நான் கறுப்பன்தான். அதுக்கென்ன இப்போ. ஒருவித அகங்காரத்துடன் பதிலடி கொடுப்பான். நானோ நான் கறுப்பில்லை. பிரவுண் என்று சாதித்ததை நினைத்து வெட்கப்பட்டேன்.

வெள்ளை தவிர்ந்த எல்லாமே கறுப்பு. இதுதான் வெள்ளைத்துவத்தின் கருத்தியல்.

வெள்ளையர், கறுப்பர் என்பதெல்லாம் ஒரு நிற ரீதியிலான அடையாளப் படுத்தலாக கொள்வது ஒரு பகுதிச் சரிதான். அதைவிட அது சுமந்திருக்கும் கருத்தியல்தான் இயங்கிக் கொள்கிறது.

இப்போது புரிந்துகொண்டேன் தமீலன் (தமிழன்) என்று சொல்லும்போது எனக்கு ஏன் என்னையறியாமல் கோபம் வருகிறதென்று.

ப+க்களை நான் ரசித்தேன். வண்ணத்துப் ப+ச்சிகள் எனக்கு அழகைத் தந்தன. நிறங்கள்… மணங்கள்;… பிடித்ததோ பிடிக்கவில்லையோ கண்ணுக்கு இயல்பானதாகப் பட்டது. ஆனால் மனிதன் மட்டும்… ஏன் இன்னும் முடியாமல் இருக்கிறது. எனக்கும்தான்.

பொறி தீயாய் வளர்ந்து என்னை சுடுதற்கு என்னிடமும் பற்றைகள் புதர்கள் இன்னும் இருக்கின்றன.

என்னை நான் கிளறிக் கொண்டிருந்தேன்.
இப்போ எனது நண்பன் இன்னொரு திசையால் வந்துகொண்டிருந்தான்.

யாழ் மேயரை போட்டுட்டாங்கள்.
செய்தியை கேட்ட அவன் சொல்லிக்கொண்டிருந்தான். தெரியும்தானே… இவையளுக்கு என்ன வேலை. பேசாமல் இருந்திருக்கலாம்தானே. பதவி ஆசை. போய்ச் சேருகினம்.
மனிதாபிமானம் நிறைந்தவன் எனது நண்பன். அவன் செய்தியிட்டுக் கொண்டிருக்கும்போது எதுவும் அவனைப் பாதித்தததாகவும் தெரியவில்லை. மிக இயல்பாகவே இருந்தான்.

பதவி ஆசை. சரி வைத்துக் கொள்வோம். உயிரைக் கொடுத்து பதவியைப் பெறுவது என்பதற்குள் ஒரு முரணும் உனக்கு அகப்படவில்லையா?
உயிர் போகுமென்று தெரியும்போது ஆசை என்பதற்கு என்ன அர்த்தம்?
உயிரைவிட பதவியில் ஆசையா?
எனக்கு குழப்பமாகவே இருந்தது.

அரசியல் வாழ்க்கைக்குள் போனவர்களால் சும்மா இருக்கமுடியாது. ஏதாவது செய்துகொண்டுதான் இருப்பார்கள், கடைசி தமது திருப்திக்காகவேனும். நண்பன் ஆத்மரீதியான காரணத்துள் நுழைய முற்பட்டான். அதற்குள் நானும் சேர்ந்துகொண்டு முரண்டுபிடித்துக் கொண்டிருந்தேன்.

இடையில் இன்னொரு நண்பர் வந்திருந்தார், கையில் எழுத்துக்களை உருட்டியபடி.
ஆத்திரமோ என்னவோ வேகமாகவே உருட்டிக்கொண்டிருந்தார்.
கொலைகளை கண்டிக்கிறோம் என்று சிலர் சொல்லிக் கொண்டிருந்ததால் ஆத்திரப் பட்டுப் போயிருந்தார்.
உண்மையில் எனக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. மனிதாபிமானத்தில் முதிர்ச்சி பெற்றுப்போயிருந்தவர் அவர் என்பது என் அபிப்பிராயம் என்பதால்.

அப்ப என்ன செய்யலாம்?

இக் கொலைகளை சரியென்று சொல்ல யான் வரவில்லை. அதே நேரம் இவைகளை கண்டிக்க வேண்டியதுமில்லை.
எனக்கு இன்னும் குழப்பமாகவே இருந்தது.
அப்படியானால்…
சும்மா இருப்பதே சுகம்.
கண்டும் காணாமல் இருந்துவிட வேண்டியதுதான்.
நான் தூக்கி வீசப்பட்டேன், காரணங்கள் கண்டறியப்படக்கூடாத உலகுள். ஜனநாயகம் என்பது இன்னும் எட்டவாய்ப் போனது.

மனிதாபிமானம் என்பதெல்லாம் என்ன?
அதன் அளவு கோல் என்ன? தான் சார்ந்த கருத்துக்களால் வடித்துப் பார்ப்பதா?
நாளை நான் செரித்த கருத்துக்கள் பிழையெனப் பட்டால்… கொலைசெய்யப்பட்டவர்களை தட்டியெழுப்பிவிட முடியப்போகிறதா?

சமூகத்தின் உடனடித் தேவைகளை நிறைவேற்றும் வழிகளை நிரப்ப முடிந்தால் இவ்வாறான பதவிகளின் கதிரைகள் தானாகவே இறந்துபோய்விடுமா?

அரசியல் சதுரங்கமாடி தமது சுகங்களை பெருக்கிக்கொள்பவர்களின் பகடைக்காய்களாக மடிந்துபோகிறார்களா?
அப்படியென்றால் எய்தவன் இருக்க அம்பை நோவது ஏன்?

நானும் தவித்துக்கொண்டுதான் இருந்தேன் காரணத்தைத் தேடி நுழைய.
இன்னும் முடியவில்லை.
கேள்விகள் மட்டும் எழுந்துகொண்டுதானிருக்கின்றன.
ஆனாலும் ஆனாலும்…
கண்டும் காணாமல் இருப்பதில்தான் எனக்கு இன்னும் அதிகம் அச்சமிருக்கிறது.

ஊரில் பனைமரங்களுக்கிடையில் கக்கூசுக்கு இருக்கும்போது கைக்கெட்டும் கற்களை வரிசையில் வைத்து ஒரு வகுப்பு நடத்தி முடித்துவிடுவேன். கையில் தடியிருக்கும். கேள்வி கேட்பது, பதிலையும் நானே சொல்வது, தண்டிப்பது என தனிநபர் நடிப்பில் ஈடுபடுவேன். இன்று நான் புலம்பெயர் நாட்டில். ஒருநாள் ரொயிலற்றுக்கு இருந்தபோது நான்கு சுவர்களுக்குள் இப்படியொரு யோசனை எழுந்தது.

காரணங்கள் கண்டறியப்படாமல் கொலைசெய்யப்பட்டோர் சார்பாக உன்னிடம் ஏதாவது கவலைகள் இருக்கின்றதா?
ஆம்
அது இருக்கக்கூடாது.
ஆரம்ப காலங்களில் விடுதலை இயக்கங்கள் ஏதாவதில் இருந்தாயா?
ஆம்
நீ ஓர் குற்றவாளி
இன்றைய போராட்டத்துக்கு ஏவாவது ~பங்களிப்பு~ செய்கிறாயா?
இல்லை, உனது அர்த்தத்தில்.
நீ தமிழனல்ல.

கேள்வியும் நானே பதிலும் நானே. எனது காதும் கண்ணும் ஓய்வாக இருந்தன. ரொயிலற்றுக்கள் நிலவும் அமைதியுடன் அவை சிலாகித்தன.

எனது காதுக்குள்ளாலும் கண்ணுக்குள்ளாலும் நுழைப்பதற்கென்றே பல உள்நோக்கங்களை வானொலிகளும் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் தன்தன் வழிகளில் செயற்படுத்திக் கொண்டிருக்கும். சரியைப் பிழையாக்கவும் பிழையைச் சரியாக்கவும் அவைகளால் முடியும். சிறிசைப் பெரிசாக்கவும் பெரிசைச் சிறிசாக்கவும் முடியும்.
மாற்றுக் கருத்துக்களை மழுப்பிவிடவும் ஆதிக்கக் கருத்துக்களை கேள்விக்கிடமற்றதாக்கவும் அவைகளால் முடியும்.

இப்படியாக வெகுஜன கருத்தியலை புலம்பெயர் வெகுஜன தொடர்புச் சாதனங்கள் பல இன்று செய்துகொண்டிருக்கின்றன.

அந்த அலைக்குள் நான் அடிபட்டுப்போகிறேன். உண்மையைத் தேட கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. நிறைய வாசிக்கவேண்டியிருக்கிறது. விவாதிக்க வேண்டியிருக்கிறது. இப்படி நான் மோதல்களை ஏற்படுத்தும்போது பல சந்தர்ப்பங்களில் குழம்பிப் போய்விடுகிறேன்.
எனது ஆழலும் மீளலும் என்னை எனது அறிதலை ஒரு வழியில் நகர்த்திக்கொண்டிருக்கின்றன.

எனது நண்பன் ஒருவன் அண்மையில் செத்துப்போனான். எண்பதுகளின் ஆரம்பத்தில் அவன் தனது இளமைப் பருவத்தை -தனது தேவைகளினூடன்றி- சமூகத்தின் தேவைகளினூடு வழிநடத்திச் சென்றவன். விடுதலைக்காக இயக்கமொன்றில் அயராது உழைத்தவன். இயக்க அராஜகத்தால் அதிலிருந்து அவன் வெளியேறி பல ஆண்டுகளாகிவிட்;டது. தேடப்பட்டான்@ கைதுசெய்யப்பட்டான்@ சித்திரவதைப்பட்டான்@ உருக்குலைக்கப்பட்டான்@ புலம்பெயர்ந்தான்@ மௌனமாய் வாழ்ந்தான். இப்போ வாழ்ந்து முடித்துவிட்டான்.

நானுண்டு என் வேலையுண்டு என வாழும் ஒரு மனிதனின் சாவுக்குக்கூட சனம் திரண்டு வரும். ஆனால் அவனுக்கோ அப்படியிருக்கவில்லை.

அஞ்சலிகளின் பிரமாண்டங்களின் நடுவே வரலாற்றிலிருந்து மறக்கப்பட வேண்டியவர்களாக ஆரம்பகால மாற்று இயக்கப் போராளிகளும் மறைக்கப்படவேண்டிய வரலாறுகளாக அவர்களின் பாத்திரங்களும் எப்படிப் போயின.

இது ஒரு அவலம்.

தான் ஒரு போராளியாக இருக்கிறேன் என்பதை தனது சகோதரனுக்குக்கூட சொல்லமுடியாத சூழல்களுக்குள், கடையில் ஒரு தேனீர் வாங்கி குடிக்கவே (சனத்தின்ரை காசு என்று) யோசிக்கின்ற அர்ப்பணிப்புகளுக்கிடையே உழைத்த உழைப்பெல்லாம் வாய்திறந்து சொல்லி திருப்திப்பட்டுக்கொள்ளக்கூட முடியாதபடி மௌனமாய் வாழ்ந்தே செத்துப்போனவர்கள் பலர். இவர்களுக்கெல்லாம் அஞ்சலி செலுத்துபவர்கள் யார் என்று பத்திரிகையொன்று எழுதியபோது ஆத்திரப்பட்டு பதிலெழுதிய மனிதாபிமானிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

உள்நோக்கம் கொண்ட கொலைகள் எல்லாம் இனந்தெரியாதோரால் கொல்லப்பட்டார் என்ற செய்தியாய்க் கரைந்துபோயின. சபாலிங்கமும் இதே துயரத்துள் அடக்கப்பட்டார்.

இவ்வாறானவர்களுக்கான அஞ்சலியையாவது செலுத்தமுடியாத வெகுஜன தொடர்புச் சாதனங்களின் கருத்தியலும் மௌனமும் சொல்லிவைப்பது எதை?

நான் ரொயிலற்றுக்குள்ளிருந்து வெளியே வருகிறேன்.
வானொலியில் நேயர்களின் தொலைபேசி நிகழ்ச்சி போய்க்கொண்டிருக்கிறது. அறிவிப்பாளரின் குரல் சிரித்துக்கொண்டு வருகிறது. நீங்கள் எட்டடி பாய்ந்தால் இங்குள்ளவர்கள் (வானொலி நிலையத்தார்) பதினாறடி பாய்வார்கள். தெரியுமோ?
நேயரும் அதை ஆமோதிப்பதுபோல் இளிச்சுக்கொண்டே விடைபெறுகிறார்.

வணக்கம்.

– ரவீந்திரன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: