வான் திரைய
புரண்டோடும் ஓர் பெருநதிப் பரப்பில்
சிறு ஓடம் தத்தளிக்கிறது.
தமிழிச்சியின் வயிற்றில் நான் பிறந்தேனா இல்லையா என
விவாதித்தனர் கனவான்கள்
கொட்டாவி தள்ளி பல்லவி பாடினர்
இலகுவானது
தேடுங்கள் இந்த வழிகளை.
முடியாது
என்னால் முடியாது
இந்த இலகுக்குள் என் சிந்தனையை நலமடித்துவிட.
ஒரு பெரிய வாய் செய்து, வெளியே
சொற்களை தள்ளுகிறார்கள் நம் புத்திஜீவிகள்
உன் சொற்களையும் அதற்குள்ளால் தள்ளிவிடு
அதுவும் இலகு.
முடியாது என்னால் முடியாது
எனது வார்த்தைகள் கனமானவை
அவை எனக்குச் சொந்தமானவை
மழலை வாய்களை
இறுகிப்போன சொற்களை அரைத்துத் துப்பும்
இயந்திரமாய்ச் செய்யும்
குரல்கள் பரவும் காற்றிது
நீயும் சப்பித் துப்பிவிடு
முடியாது என்னால் முடியாது
சொற்களை நான் உற்பத்தி செய்துகொண்டே
இருக்க விரும்புகிறேன் புதிது புதிதாய்.
பட்டினிப் பிசாசு தின்னும்
ஓர் ஆபிரிக்கக் குழந்தைக்காய் வழியும்
என் கண்ணீரை மறுத்து,
என் இனத்துக் குழந்தைக்காய் மட்டும்
மறிப்பிடவும்
எனது உணர்ச்சிகளை அழுதுவடிய மட்டும்
உத்தரவிடவும்
இந்தப் பெருவாய்க் காற்றால் முடியுமெனில்
அதையும்தான் நான் வெறுக்கிறேன்.
எனது நாலு வார்த்தைகளை
காவிச் சென்று
விளைநிலத்தில் சேர்த்துவிட முடியா
சோகைக் காற்று
உலகை மஞ்சள் ப+சிக் காட்டுகிறது.
நான் தமிழிச்சியின் வயிற்றில் பிறந்தேனா இல்லையா என்பதை
அவர்கள் தம் காமாளைக் கூடத்துள்
பரீட்சித்துக் கொண்டிருக்கட்டும்.
நானோ என்
மனவெளியில் ஊற்றெடுத்து பிரவாகிக்கும் நதியாய்
தமிழைக் காண்கிறேன்.
எனது சொற்களை அதில் சுழியோடி சுழியோடி
கண்டெடுத்துக் கொண்டே இருப்பேன்,
உனக்கானதாகவும் தான்.
– ரவி (200299)