சுடுமணல்

முன்னாள் போராளி ஈஸ்வரன் நினைவாக..

Posted on: January 26, 1999

மரணம்

வயதை வெல்லும் மரணம்
கொடியது
நண்பனே
எடுத்துச் செல்
எனது இரு கண்ணீர்த் துளிகளையும்
எடுத்துச் செல்
மிகுதியை என் கண் மடல்களுக்குள்
தேக்கிவைக்கிறேன்.

உனது முகம் இறுகியது
உன் புன்னகை செத்துப் போனது
பார் நண்பா
ஒரு கனவை செய்து காட்டுமாப்போல்
நீ
சவப்பெட்டிக்குள்
வளர்ந்து கிடந்தாய்
நம்ப முடியவில்லை
என்னால் நம்பமுடியவில்லை – நீ இறந்துபோய்விட்டதாய்.

என்னிடம் இன்னும் கண்ணீர்த் துளிகள் இருக்கின்றன
அவையும்
ஒரு தசாப்தத்தை பின்னால்
இழுத்துச் செல்லும் வல்லமை கொண்டன
அவை
தொலைந்துபோன தோழர்களுக்காகவும்
இழந்துகொண்டிருக்கும் நண்பர்களுக்காகவும்- உன்போல.

எப்படி முடிந்தது
ஆயிரமாயிரம் தோழர்கள்
வீசியெறிந்த பயங்களை எப்படிச் சூடினர்
ஓயாமல் இயங்கிய தசைகளை
எது கட்டிப் போட்டது
விரக்திகள் கொண்டதும்
வாழாவிருந்ததும்
எப்படி எப்படி…
எல்லாம் பட்டியலாய் நீண்டுபோனது

நதியொடுங்கி ஓடையானாய்
இருந்தும்
ஓய்ந்துபோக முடியவில்லைப் பார்
உன்னால்

கேள் நண்பா
எல்லாமே நேற்றுப்போல
காலத்தை அழித்து அழித்து எழுதிய
உன் உழைப்பும்
மனங்களில் மறைந்து போகுமெனில்
தியாகங்கள் மறக்கப்படுமெனில்…
ஒரு மண்புழுவோடுகூட
நான் நிறைய பேசவேண்டியிருக்கும் – அதன்
அப்பாவித்தனத்திற்காய்.

குளிர்காலம். வானம் வெளித்திருந்தது. மரணம் துயர் நிரப்பிக் கொண்டிருந்தது. கொட்டித் தீர்ந்துவிட்டிருந்த பனித்திரளும் உருவழிந்து சரைகளாக வீதியில் ஒதுங்கிப் போயிருந்தது. நான் தனியாக நின்றுகொண்டிருந்தேன். பழகியிராத முகங்கள். சுமார் பதினைந்து பேர்வரை காத்திருந்தனர். அந்த கிரிமற்றோரியம் சுடலை என்று தமிழ்ப்படுத்த எனக்கு தயக்கமாக இருந்தது. சோலை. அதனுள் விரிந்துபோய்க் கிடந்த கட்டடத்தின் ஒரு பகுதிக்குள் அவன் உடல் வைக்கப்பட்டிருந்தது. மதிய இடைவேளைக்குப் பிறகு அது திறக்கப்படும். அதுவரை காத்திருந்தோம்.
எல்லாம் ஒரு கனவுபோல. சில மாதங்களின் முன் அவனை நான் ஒரு கலை நிகழ்ச்சியில் சந்தித்திருந்தேன். எப்போதும் சிரித்த முகம் தமிழர்களுக்கு என்பார்கள் இந் நாட்டவர்கள். எனக்கோ அவன் சிரித்த முகம் கொண்டவன். கலகலப்பாகவே பேசுவான். அன்றும் அப்படியே பேசிக்கொண்டிருந்தான். அதுவே அவனை நான் சந்தித்த கடைசி நாள். எனக்கு கஸ்டமாக இருந்தது.

வீதியின் முன்னால் இருந்த வீட்டிலிருந்து ஜன்னல்களுடாக கிழவி ஒருத்தி எங்களைப் பார்த்து பொழுதுபோக்கிக் கொண்டிருந்தாள்.

நான் தனிமைப்பட்டுகொண்டிருந்தேன். இன்னும் அரை மணித்தியாலம் இருந்தது. நான் காத்திருக்கவில்லை. இன்னும் கொஞ்ச நேரம் தள்ளிப்போனாலென்ன என்றிருந்தது. அவனது புன்னகைப்பட்ட முகத்தை நான் அவனிடமே ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படுத்தவே என் மனம் விரும்பியது.

பிரமாண்டங்களின் உலகம். சினிமா, விளம்பரம், விளையாட்டு…
சம்பிரதாயம்… சடங்கு…விழா… அஞ்சலிகளும்கூடத்தான். இந்தப் பிரமாண்டங்களின் அலையில் அவன் கரையொதுங்கிப் போயிருந்தான்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட காலங்களின் ஆரம்பங்கள் அவ்வளவு ஒன்றும் சுலபமானதாக இல்லை. கடையில் ஒரு தேனீர் வாங்கிக் குடிப்பதற்கே மனமுவக்காது. சனத்தின்ரை காசு. வீண்செலவு செய்யக்கூடாது என்றெல்லாம் ஆத்மார்த்தப்பட்டுப்போன காலம். அயராத உழைப்பு. சைக்கிளில் டவுள் போகவே பயப்படும் பொலிஸ் காலம். பிறகு இராணுவ காலம். எல்லா இடர்ப்பாடுகளுக்கும் இடையில் தம்மை இனங்காட்டி வேலைசெய்ய முடியாத நிலைமைகளுக்கிடையில் எத்தனை போராளிகள் ஓடிஓடி உழைத்தார்கள். அகப்பட்டார்கள். சித்திரவதைப்பட்டார்கள் – எல்லாப் பக்கத்தாலும். அழிந்தார்கள். அழிக்கப் பட்டார்கள். ஓடித்தப்பினார்கள். விரட்டப்பட்டார்கள்… அராஜகம் சிறகு முளைத்துத் திரிந்தது அப்போது.

இப்போது அந்தக் கிழவி வேடிக்கை பார்ப்பதை முடித்துக் கொண்டுவிட்டாள். ஜன்னலையும் சாத்திக் கொண்டாள்.

சனக்கூட்டம் முன்னரைவிட அதிகமாகிக் கொண்டிருந்தது. ஆனாலும் அவன் சமூகத்துக்கு செலுத்திய உழைப்பு அந்தக் கூட்டத்தை சுருக்கிக் காட்டிக் கொண்டிருந்தது.

வேதனையாகத்தான் இருந்தது. மற்றைய இயக்கங்களில் இருந்ததையே ஒரு குற்றம் என்பதுபோல் கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழல். தமிழ்த் தொடர்புச் சாதனங்கள் அப்படி முன்னேறியிருக்கின்றன. இன்றைய விடுதலைப் போராட்டத்துக்கு காசு கொடுக்காதவன் தமிழிச்சியின் வயிற்றில் பிறக்காதவன் என்று சொற்சன்னதம் ஆடுமளவிற்கு போய்விட்டது.

சக மனிதனை மதிப்பது, ஒருவனது உழைப்பை மதிப்பது, ஜனநாயகத்தை மதிப்பது, மாற்றுக் கருத்துகளை மதிப்பது.. தேவையானவை இவை. ஆனால் தேறுவதோ இவற்றை சிதைப்பது.

சாதாரண பிறந்த நாள் வாழ்த்துகளுக்கே நாமும் வாழ்த்துகிறோம் என்று தம்மையும் இணைத்துக்கொள்ளும் வானொலிகள், இந்த சமூகத்துக்காய் உழைத்தவர்களின் மரண அறிவித்தலிலாவது அப்படி நடந்துகொள்வதுதான் எப்போ?

அன்றிரவு ஐபிசியில் சுவிசிலுள்ள றயின்தாளர் தமிழ் மன்றம் நடத்திய அரைமணிநேர அஞ்சலியின் பின்னரும்கூட தமது துயர இணைவை வானொலி செய்யவே இல்லை.

அதையும்விட தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் முன்னர் அயராது உழைத்து கிழக்கிலங்கை மக்கள் மத்தியில் அரசியல் வேலை செய்து பின்னர் கழகத்தின் மத்தியகுழு உறுப்பினராக செயல்பட்ட(1986 இல் வெளியேறியிருந்தான்) ஒரு வரலாற்றுப் பாத்திரத்தை முற்றாக மூடிமறைத்து அவனை ஒரு நாடக நெறியாளனாக மட்டும் சித்தரித்து அஞ்சலி செலுத்தப்பட்டதுதான் இன்னும் துயரமானது.

ஈஸ்வரனின் நண்பர்கள், பழைய தோழர்கள் என தத்தம் வலுவிற்கு சிறு சிறு அஞ்சலி பிரசுரங்களை கைகளிலிட்டனர்.
வாய்விட்டு சிலர் அழுதனர். பலர் கண்கலங்கி நின்றனர்.

எல்லோரிடமிருந்தும் அவன் தன் புன்னகையை திரும்ப வாங்கிக் கொண்டான். மலர்களின் நடுவே கிடத்தப்பட்டிருந்தான்.
விகாரமாக செதுக்கப்பட்டிருந்த சிலைகளின் கீழே அவன் கிடந்தான். அவன் கண்திறந்தால் வானம்வரை வளர்ந்திருக்கும் அவை.

சுமார் 45 நிமிடம்வரை அசைவற்றுக் கிடந்து பேசினான். பேச வைத்தான். அழவைத்தான். கலங்க வைத்தான்.
போய்விட்டான்.

காற்று கனத்துப்போய்க் கிடந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Pages

Follow சுடுமணல் on WordPress.com

Archives

Blog Stats

  • 28,402 hits
%d bloggers like this: