“நான் இனி பல்கலைக் கழகம் போகாமல் இருந்துவிடுகிறேன். அவர்களை தண்டிக்க வேண்டாம். மன்னித்து விட்டுவிடுங்கள்”
சொன்னவன் இப்போ இறந்து போய்விட்டான். பல நூற்றுக் கணக்கான தோப்புக்கரணங்கள் போட்டே செத்துப்போனான் அவன் என்றால், அதிர்ச்சியடையாதார் யார்?. இதற்குப் பெயர் “பகிடிவதை”. “பகிடிப்பட்டவன்” வரப்பிரகாஷ்.
“எனது மகனின் மரணச் சடங்கில் எந்த மாணவனும் பங்குபற்றக்கூடாது”.
தட்டியில் துயரமும் கோபமும் கலந்து எழுதிவைத்தார் விதுரா இன் தந்தை. சிறுநீரகம் சிதைக்கப்பட்டு செத்துப்போனவன் விதுரா. செயற்கைச் சிறுநீரகம் பொருத்தி இயங்கவைக்க செய்யப்பட்ட முயற்சிகளெல்லாம் தோல்வியில் முடிந்தது. இவன் பலியாகியதும் “பகிடிவதைக்குத்தான்”.
இவையெல்லாம் அண்மையில் நடந்த துயரங்கள்.
!யாழ் பல்கலைக் கழகத்திலும் றாகிங் சூடுபிடிக்கிறது” என்று எழுதிய -யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும்- பத்திரிகையொன்றின் காரியாலயத்தின் மீது, திரண்டு வந்து கல்வீச்சு நடத்தினர் யாழ் பல்கலைக் கழக மாணவர்கள்.
இதுவும் அண்மையில் வெளிவந்த செய்திதான்.
* * *
“ஏய்! நீர் இண்டைக்கு பின்;னேரம் என்னை வந்து சந்திச்சிட்டுத்தான் போறீர். இப்போதைக்கு காணும்;. போயிட்டு வா”
யாராக இருக்கும்? என்னவாக இருக்கும்?
ஆமியா? பொலிஸா?
நீங்கள் மனசைப் போட்டு அனாவசியமாகக் குழப்ப வேண்டாம்.
அதிகாரத்தின் தொனி. இந்தக் குரலுக்குரியவர் ஒரு பல்கலைக் கழக சீனியர் மாணவன். முன்னே நிற்பவன் புதிய மாணவன்.
றாகிங்!
அங்கீகரிக்கப்பட்ட ஒரு வன்முறை.
இதை புதிய மாணவன் சந்தித்துக் கொண்டிருந்தான். சகித்துக்கொண்டிருந்தான்.
அடுத்த ஆண்டில் இந்தப் பாத்திரம் மாறிவிடும். இவன் முன்னே இன்னொருவன் நிற்பான், இப்படி சதை கழன்றுபோய்.
காலை நேரம். பஸ் நிலையம். அந்நிய மொழி. அந்நிய இடம்.
பல்கலைக் கழக வாயிலை அடையாளம் காணவேண்டும். இறங்கவேண்டும். அதுவேறு பதட்டம்.
றாகிங்! பயம் கௌவியது. உடல் உளம் எல்லாம் சோர்ந்து போக… படித்ததால் பெற்ற பயன் தொடங்குகிறது. அவன் படபடத்துக் கொண்டிருந்தான்.
வெள்ளை றவுசர். வெள்ளை சேர்ட். இள வயசு. ஓ! இவனும் புது மாணவனாகத்தான் இருக்க வேண்டும்.
உதவிக்கு ஒரு ஆள் கிடைத்துவிட்டான். படபடப்பு சற்று தணிகிறது.
அவன் வருகிறான். “நீரும் புதுஆளா?”
ஓம்.
“நானும்தான்.”
உமக்கு கம்பஸ் ஹோல்ற் தெரியுமா?
“தெரியும்”
—
இறங்கிக் கொண்டார்கள்.
“ஏய் பு… மோனை நானென்ன புது ஆளெண்டு நம்பியிட்டியோ?
வா றூமுக்கு!”
தூக்கிவாரிப் போட்டது.
மீட்பர்களைக்கூட நம்பிக் கெட்ட பரம்பரையல்லவா? அதனால் அவனுக்கு ஆச்சரியமாக எதுவும் இருக்கவில்லை.
தயக்கம். நேரத்துக்கு கம்பஸ் போகவேண்டும் என்ற பதட்டம் வேறு. ஆனாலும் கேட்க முடியாது.
போனான்.
அறிமுகமே காட்டுமிராண்டித் தனமாகத் தொடங்கிவிட்ட அந்த நாள்.
அவன் உத்தரவுப்படியான மாலைத் தரிசனம்.
இப்போ அவன் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். றவுசர் பொக்கற்றை இடையிடையே அமத்தி சரிசெய்தபடி. அதற்குள் அவனது பென்ரர் (underwear) இருந்தது.
“ஏய் உடுப்பைக் கழற்று!
நீ —ச்சிருக்கிறியா? (அங்கீகரிக்கப்பட்ட தமிழில் சொன்னால் நீ உடலுறவு கொண்டிருக்கிறியா? என்று வரும்)
கை—-போட்டிருக்கிறாய்தானே. போ ரொயிலற்றுக்கை. ———- விந்தை கொணர்ந்து காட்டு”.
அவன் உடல் உதறியது.
பாலியல் வக்கிரம் பல்லுக் காட்டிச் சிரித்தது. மனித நினைவே அகன்றுபோன சூன்ய நிலை. பாலியல் புலனுணர்வு பற்றிய எதுவித பிரக்ஞையுமற்று இப்படியொரு உத்தரவு வேறு. அவர் ஒரு பல்கலைக் கழக மாணவன். சீனியர். படித்தவர்.
அவன் அழுதான். நொந்துபோய் நின்றான்.
“உனக்கெல்லாம் சா… எழும்பவில்லையெண்டால் உனக்கு என்னத்துக்கு பென்ரர்.
போடு றவுசரை. இந்தா பென்ரர். கையிலை கொண்டு போ!”
பிதுங்கிப்போய் ஒழுங்கைக்குள் விழுந்த அவன் மெல்ல பென்ரரை பொக்கற்றுக்குள் திணித்துவிட்டு உடலை இயக்குகிறான்.
இன்றைய காலை வரவேற்புக்கும் இப்படியானதோர் மாலை வழியனுப்பலுக்கும் இடையில்….
பல்கலைக் கழக வளவுக்குள் றாகிங் சொறிந்துவிட்டுக் கொண்டு திரிந்தது.
Room றாகிங்
Group றாகிங்.
Physical றாகிங்.
Severe றாகிங் (கொடுமையான றாகிங்) என்று பல முகங்கள் அதற்கு.
ஆண்குறியையும் விதையையும் சேர்த்து “சலோ ரேப்” இனால் ஒட்டுதல் (கம்பஸ் சீல்)
ஆண்குறிக்கு மேலுள்ள உரோமத்தை வெட்டுவித்து நெருப்பில் எரித்து சத்தியப் பிரமாணம் எடுத்தல்
இராவணனின் ஆண்குறியை உருவகித்து அதனுடனான சேட்டைகளை மேற்கொள்ளுவித்தல்
தூசண வார்த்தைகளை மூச்சுவிடாமல் சொல்லுவித்தல்
உன்ரை சதோதரியை எனக்கு….. போன்ற வார்த்தைப் பிரயோகங்கள்…
எல்லாம் சுழன்றடித்து சூழல் பரபரப்பாக இருக்கும், இரண்டு கிழமைகள். பிறகு மெல்ல மெல்ல ஓய்ந்து ஒரு மாதம் வரை நலிந்து நீடித்து றாகிங் செத்துப் போய்விடும். இப்போ அவை சொல்லிச் சிரிப்பதற்கான சுவாரசியங்களாக உருமாறிப்போய்விடும். வன்முறையை பழக்கப்படுத்திக் கொள்வதில் ஒரு பயிற்சி நடந்தேறிவிடும்.
மாணவ பருவம் வாழ்நாளின் ஓர் அற்புதமான காலம். குருத்து முற்றி விரியும் உடலில் இள ரத்தம் ஓடும் காலம். மனம் எண்ணற்ற எதிர்பார்ப்புக்களை வாரி இறைத்துக் கொண்டிருக்கும். துடிப்பு. எதிலும் ஒரு வேகம். படபடப்பு. சமூகம் அவர்களுக்கு வழிவிட்டு நிற்கும். ஒருவித மதிப்பு. அதிலும் மிகக் கடினமான முயற்சிகளைக் கொட்டி, தடைகளைத் தாண்டி கம்பஸ் வாயிலை தாவிப் பிடித்துவிட்டால்…. ஒரு இலட்சியம் நிறைவேறினமாதிரி ஒருவித திருப்தி. இந்த உணர்வுகள் எல்லாம் புரிந்துகொள்ளப்பட வேண்டியதுதான்; மதிக்கப்பட வேண்டியதுதான். ஆனால் இதெல்லாம் றாகிங் க்கு எந்தவித நியாயத் தன்மையையும் தராது.
மாணவர்கள் தமக்கிடையில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றிக் கொள்ள இது உதவும் என்று சொல்லப்படும் வியாக்கியானம், அவர்கள் சீனியர் ஆகியதும் (குறிப்பாக மருத்துவஃபொறியியல் பீடங்களில்) தானாகவே தகர்ந்து போகிறது. சில சந்தர்ப்பங்களில் இறுதி ஆண்டு மாணவனைக் கண்டதும் ஆரம்பநிலை மாணவர்கள் எழுந்து இடம்கொடுத்து மரியாதைப்படுத்துவதுகூட நடந்தேறுகிறது. தமக்கிடையில் ஒரு அறிமுகப்படுத்தலுக்கும் பரஸ்பர இறுகிய நட்புத்தன்மைக்கும் இது உதவும் என்பதெல்லாம் ஒரு பசப்புத்தான். இதைச் சாதிப்பதற்கு இப்படியொரு (வன்)முறை உதவுமென்றால் சமூகம் எங்குபோய் நிற்கும்.
உண்மையில் றாகிங் இல் எற்படும் திருப்திதான் அதை நியாயப்படுத்துவதற்;கான காரணங்களைத் தேடிக் கண்டுபிடிக்கிறது. இந்தத் திருப்தியை தனிமனித அகநிலைக்குள் குறுக்கிவிட முடியாது. இதற்குள் புதைந்திருக்கும் அரசியல்தான் முக்கியமானது. அதிகாரம் செலுத்தலும், பணிந்துபோதலும் தான் இதன் அரசியல். குழந்தைப் பருவத்திலிருந்தே குடும்பம், பாடசாலை போன்ற சமூக நிறுவனங்களெல்லாம் இந்த அரசியலை கொண்டுள்ளதுதான் அடிப்படைக் காரணம். தகப்பன்-பிள்ளை, ஆண்-பெண், ஆசிரியர்-மாணவர் உறவுகளெல்லாம் இந்த அரசியலுக்குள் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஒழுக்கம், கட்டுப்பாடுகள், மரபுகள் என்றெல்லாம் கருத்தியல்களை தமக்கு சாதகமாக ஆதிக்கம் வகிக்கும் சக்திகளே வகுத்துக்கொள்கின்றன. கலாச்சார, கருத்தியல் நிறுவனங்களினூடாக இவை சாதிக்கப்பட்டு (அது இயல்பானதாக) மனதில் இருத்திக்கொள்ளப்படுகிறது. இந்த அரசியலை இனங்கண்டு கேள்விகேட்காதவரை இந்தத் தளத்திற்கு வெளியே வந்து மனித வாழ்வை வேறு பரிமாணங்களில் புரியும் முயற்சிகளுக்கு சாத்தியமில்லை.
இந்த அதிகாரம் செலுத்துதலும் பணிந்துபோதலும் கருத்தியல் ரீதியில் சமூக நியதிகளாக சாதிக்கப்பட்டு பிரக்ஞைப+ர்வமாக ஏற்றுக் கொள்ளச் செய்யப்படும்போது இரு சாராருக்குமே இந்த உறவுமுறையில் திருப்தி வருகிறது. விருப்பமின்றி அதிகாரத்துக்கு (இயலாமையால்) பணிந்துபோகும் சந்தர்ப்பங்களில் அதிகாரம் செலுத்தும் சக்திகளுக்கு மட்டுமே இவை திருப்தி தருகிறது. தம்மால் அடக்கப்படும் சக்திகளின் வேதனைகளைவிட அவர்களுக்கு தங்கள் திருப்தி முக்கியமாகப் (குறைந்தபட்சம் தவிர்க்கமுடியாதவையாகவோகூட) படுகிறது. உயர்சாதியினருக்கு தாழ்த்தப்பட்ட சாதியினர் தரும் மரியாதை, ஆசிரியனுக்கு மாணவன் தரும் மரியாதை, கணவனுக்கு மனைவி தரும் மரியாதை, தகப்பனுக்கு பிள்ளை தரும் மரியாதை எல்லாவற்றிலும் இந்தக் கூறுகளை நாம் கண்டுகொள்ளலாம். யாழ் முஸ்லிம் மக்கள் விடயத்தில்கூட அவர்கள் சொந்த மண்ணிலிருந்து பெயர்த்தெறியப்பட்போது அவர்களின் வேதனைகள், உணர்ச்சிகள், கோபம் எல்லாவற்றையும் கொட்டி எழுதும் ஒரு கவிதையைவிட அவர்கள் தமிழ்-முஸ்லிம் மக்களின் உறவுகளை மீட்டு எழுதும் ஒரு கவிதை எமக்கு அதிக திருப்திதந்துவிடுகிறது.
றாகிங் தோற்றம்பெற்றதற்கான காரணங்கள் எப்படியிருந்ததென்ற ஆராய்ச்சியைவிட அது இன்றளவும் உயிர்வாழ்வதற்கான காரணங்கள் இவ்வகையில் முக்கியம் பெறுகின்றது எனலாம்.
எனவே இதன் விளைவுகள் அதிகார சக்திகளுக்கு, அதன் நிறுவனங்களுக்கு துணைபோக வைப்பதில் ஒரு பங்கை ஆற்றுகிறது; அல்லது குறைந்தபட்சம் அதை கேள்விகேட்க விடாமலாவது பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது. வாழ்நாளில் இளமைப் பருவம் அதுவும் மாணவ பருவம் சக்திவாய்ந்தது எனலாம். துடிப்பு, வேகம், எதையும் புதிதாக அறிந்து கொள்ளும் ஆர்வம், அதற்கான வசதி வாய்ப்புக்கள் என்பவற்றுக்கும் மேலாக ஒன்று இருக்கிறது. ஆதுதான் அவர்களின் விரைவாக அணிதிரளும் வசதிகள். ஒருவகையில் ஒரு கூட்டுவாழ்க்கைமுறை என்றும் சொல்லலாம். இதனால் செய்திகள் விரைவாக பரிமாறப்படுகின்றன. கூட்டு விவாதங்கள், கருத்துப் பரிமாறல்கள், செய்திப் பரிமாறல்கள் எனபனவெல்லாம் மிக வேகமாக நடந்தேறுகின்றன. இந்த ஆற்றல்களின் திரட்சியெல்லாம் ஒன்றுகூடி செயற்பாட்டு வடிவம் பெறும்போது அதன் தாக்கம் அபரிதமானது. ஆட்சி, அதிகாரங்களை உலுக்கிய வரலாறுகள்கூட மாணவ சக்திக்கு உண்டு. யாழ் பல்கலைக்க கழகம் இதற்கு சிறந்த உதாரணம். சமூக சேவை, சமூக விழிப்புணர்வு என்பதையும்கூட தாண்டி ஜனநாயகத்துக்கான குரலில் உயிரைக்கூட தானமாகக் கொடுத்திருக்கிறார்கள் என்பதெல்லாம் மனசைவிட்டு இலேசில் அகன்றுவிடக் கூடிய சரித்திரமல்ல. (இப்போ றாகிங் பற்றி எழுதியதற்காக இது கல்லெறியாய்த் தேய்ந்துபோனது ஒரு அவலம்)
இத்தகைய ஆற்றலை தன்னகத்தே கொண்டுள்ள மாணவ சந்ததி றாகிங் இன் அரசியலை கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்று அவாப்படுவதில் தவறில்லை. மற்றபடி மாணவ சமுதாயத்துக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டாக இதை எடுத்துக் கொள்ளக்கூடாது.
மனிதாபிமான அடிப்படையில் பார்த்தால்கூட இதை சகித்துக் கொள்ளமுடியாமலே உள்ளது. அண்மையில் பேராதனைப் பல்கலைக் கழக பொறியியல் பீட மாணவன் வரப்பிரகாஷ் றாகிங்கினால் கொல்லப்பட்டுவிட்ட செய்தி மனித நாகரிகத்தையே பிடித்து உலுப்பிவிடக்கூடியது. இன்றைய போர் நிலைமைகளில் ஒரு நெருப்புக் குச்சிக்கே அலைந்துதிரியும் காலம்… குண்டுகள் பிளம்பாய் விரியும் பயங்கரங்களின் நடுவே படித்து சாதித்துப் பெற்ற வெற்றி றாகிங் க்கு இரையாகிவிட்டது ஒன்றும் சாதாரண விடயமல்ல் மிகவும் கஸ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்த (சிங்கள மாணவன்) விதுரா பெற்ற வெற்றியும் றாகிங் இடம் தோற்றுப் போனது. இவையெல்லாம் மாணவ சமுதாயத்தின் உள்வீட்டு விவகாரமல்ல.
Physical றாகிங் என்பதே உடலியல் ரீதியல் மோசமான வதையாக மேற்கொள்ளப்படுகிறது. பழைய மாணவர்களின் அறைகளில் மட்டுமல்ல, கம்பஸ் வளவுகளுக்குள் மட்டுமல்ல, வகுப்பறைக்குள்கூட கதவைச் சாத்திவிட்டு குறூப் றாகிங் என்ற பெயரில் நடக்கிறது. மேசை கதிரைகளுக்குக் கீழால் புகுந்து செல்லுதல், ஒற்றைக் காலில் நிற்றல், தலைகீழாய் நிற்றல், நூற்றுக் கணக்காக தோப்புக் கரணம் போடுவித்தல் போன்ற பலவித உடற்பயிற்சிகள்… எல்லாம் மூச்செறிய செய்விக்கப்படுகிறது. மறுநாள் எழுந்து நடக்க சிரமப்படும் அளவுக்கு இது துன்புறுத்தலாக அமைகிறது. இவ்வளவு காலமும் சுதந்திரமாய் கத்திச் சொல்ல முடியாத அதிகார, ஆபாச வார்த்தைகளை கொட்டித்தீர்ப்பதில் குதூகலம் வேறு. அதுவும் குறிப்பாக பெண்கள்மீது இவ் வார்த்தைகளை மெல்ல எறிவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
அடங்காத மாணவர்களை அடக்குவதில் பேணப்படும் றாகிங் பல சந்தர்ப்பங்களில் கொடுரமானதாக இருக்கும். தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களிடம் அவர்களை ஒப்படைத்து “சிவியர் றாகிங்” வேண்டுகோள் விடுப்பர். கத்திமுனையில் றாகிங் செய்யப்படும் நிலைகூட ஏற்படுவதுண்டு.
றாகிங் ஒருவகையில அங்கீகரிக்கப்பட்ட அல்லது கண்டும் காணாமல் விடப்படுகின்ற ஒரு வன்முறை. எல்லாம் ஒரு இரண்டு கிழமைக்குத்தானே என்று பல்லைக் கடித்துக் கொள்ளும் சுபாவம். இரண்டும் பிணைந்து பிறக்கும் விளைவு….?
இரண்டும் பிணைந்து கொள்ளாதபோது இப்படியொரு காட்சி.
அந்தப் புதிய மாணவன் உடம்பில் உடையேதுமின்றி கையால் பொத்தியபடி ஓடுகிறான். பழைய மாணவனின் றூம் றாகிங்கிலிருந்து அவன் தப்பி ஓடுகிறான்… பின்னால் ~”அடே! இந்தா சரம். இதை உடுத்து. சனம் பார்க்குது|…”. அப்போதைக்கு கையில் அகப்பட்ட தனது சரத்தோடு பின்னே பரிதாபமாக ஓடிக்கொண்டிருந்தார் பழைய மாணவன். அவனோ நிற்பதாக இல்லை.
பிறகென்ன! இது சொல்லிச் சிரித்து மகிழும் சுவாரசியமாக மாறிவிட்டது.
ஆனால் வரப்பிரகாஷ் விடயத்தில்…?? விதுராவின் விடயத்தில்…??
– ரவீந்திரன்
குறிப்பிட்ட சம்பவங்கள் தரவுகள் எதுவும் புனைவு அல்ல. மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் அனுபவித்தவற்றில், கண்டுகொண்டவற்றில் ஒரு பகுதியை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன். கட்டுரைக்கு ஆதாரம் சேர்க்கிற வகையிலான அளவுக்குத்தான் அவை சொல்லப்பட்டிருக்கின்றன.
மிகவும் நல்ல பதிவு…
தீவிரவாத வன்முறைகள், கொடுமைகள் என்று மனதை உலுக்கும் கொர சம்பவங்களை நிகழ்த்துபவர்களுக்கும் ராகிங் செய்பவர்களுக்கும் மனநிலை ரீதியில் பெரிய வித்தியாசம் இல்லை என்றே நினைக்கிறேன்.