இச் சஞ்சிகைகளின் pdf வடிவம் படிப்பகம் இணையத்தளத்திலிருந்து பிரதிசெய்யப்பட்டவை. அவர்களுக்கு எமது நன்றிகள்!
மனிதம்
ஈழப் போராட்டத்தில் 1980 களின் நடுப் பகுதியில் இயக்கங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் விரைவாக நடந்து முடிந்த ஒரு வரலாறு உண்டு. அது இயக்க உள் முரண்பாடுகளாகவோ அல்லது மாற்று இயக்கத்தை (புலிகள்) அழித்தொழித்ததினூடாகவோ நடந்த வரலாறு. இருந்தபோதும் இதன் உள்ளார்ந்த தன்மை அரசியல் வறுமையிலிருந்துதான் தொடங்கியது. ஏராளமான இளைஞர் யுவதிகளின் தன்னொறுப்பும் அவர்களின் சமூகம் சார்ந்த சிந்தனையும் வீணடிக்கப்பட்டன. பலர் அகதிகளாக இடம்பெயர்ந்தனர்.
எமது அரசியல் போதாமையை உணர்ந்துகொண்ட -புகலிடம் கோரி வந்த- நம்மில் சிலர் சுவிசில் 1987 இல் “வாசகர் வட்டம்” என்ற சிறு அமைப்பை தொடங்கினோம். கற்றலும் உரையாடலும் சேர்ந்த ஓர் அறிவுச் செயற்பாட்டை அது நோக்கமாகக் கொண்டிருந்தது. ஒருவகையில் ஒரு உளவழிச் சிகிச்சையாகவும்கூட இருந்தது. அது ஒரு வெளித்தெரியாத அமைப்பாக இருந்து, பின்னர் கொஞ்சம் கூடுதலான பங்களிப்பாளர்களோடு வெளிப்படையாக தனது கற்றல் விவாதித்தல் செயற்பாட்டை விரிவுபடுத்தியது. மாதம் ஒருமுறை ஒரு முழுநாள் கூடலாகவும் ஒருவகை வாழ்வாகவும் அது பரிணமித்தது. இயக்கங்களினதும், இலங்கை அரசினதும், இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தினதும் அதிகாரத்துவங்கள் உட்பட சகல அதிகாரத்துவத்திற்கும் எதிரான குரலாக மனிதம் தனது நிலைப்பாட்டை எடுத்திருந்தது.
சொல்வதற்கும் எழுதுவதற்கும் நேர்மையாக இருப்பது என்பது ஒரு அகநிலைப் போராட்ட வாழ்வாகவும், புறநிலையில் தவறுகள் அடையாளம் காணப்பட்டு சுயவிமர்சனமாகவும் விமர்சனமாகவும் அந்த வாழ்வு தொடர்ந்தது. அதில் நாம் ஏற்கனவே சமூகத்திலிருந்தும் இயக்கத்திலிருந்தும் பெற்றுக்கொண்ட ‘ஒழுக்கம்’, ‘கட்டுப்பாடு’ என்பன குறித்த புரிதலில் சில தவறுகள் இருந்தன. ஆனால் நேர்மை இருந்தது. இதை கொச்சையாக விமர்சித்து கேலிசெய்தவர்களில் சாமான்ய மனிதர்கள் மட்டுமன்றி, ஒருசில மாற்று இலக்கியவாதிகள்கூட இருந்தார்கள். ஆனால் நாம் தவறுகளை அடையாளம் கண்டு அவற்றை கேள்விக்கு உட்படுத்தி சரியாகத் தெரிவனவற்றை ஏற்றுக்கொண்டு அல்லது மாற்றிக்கொண்டு முன்னேறிக்கொண்டுதான் இருந்தோம். 1995 இன் முற்பகுதியில் முரண்பாடுகளுக்குள் அகப்பட்டு குழு சிதைந்து போனது. இதுகுறித்து இன்னொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதுகிறேன்.
வாசகர் வட்ட காலத்தில் சுமார் இரண்டு வருடத்தில் 5 காணொளிச் சஞ்சிகைகளை -கிடைத்த மிகச் சிறு வளத்தோடு- வெளியிட்டோம். ஈழ அரசியல் மட்டுமல்ல, உலக அரசியல், இலக்கியம், விஞ்ஞானம் என சிறுசிறு ஆக்கங்களோடு அச் சஞ்சிகைகள் வெளிவந்தன. அந்த காணொளி சஞ்சிகையின் பெயர்தான் “மனிதம்”. காணொளி வடிவமாகையால் அது விரைவாகவே பரவலாகியது. அதன்பின்னர் எமக்கு “மனிதம் குழு” என்ற பெயர் வந்து சேர்ந்தது.
1989 இந்திய இராணுவம் இலங்கைக்குள் பிரவேசித்தபோது, முதன்முதலில் 89 புரட்டாதியில் மனிதம் கையெழுத்துச் சஞ்சிகை வெளிவரத் தொடங்கியது. கணனிப் பயன்பாடு எமை எட்டாத காலம் அது. இணையமும் இல்லை. கூட்டு வேலைமுறைகளாக, ஆக்கங்களை கையெழுத்துக்களில் எழுதுவதும், பிரதி பண்ணுவதும், pin பண்ணுதும், விநியோகிப்பதும் இருந்தது. 1992 இலிருந்து (மனிதம்-15) சஞ்சிகை கணனியை உபயோகித்து வெளிவரத் தொடங்கியது. ஒவ்வொரு இதழும் ஐரோப்பா, கனடாவுக்கு அனுப்பப்படுவது போக, இலங்கை இந்திய நாடுகளிலிருந்து ஆர்வத்துடன் தொடர்புகொண்ட 200 க்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாகவே (விமானத் தபால் மூலம்) அனுப்பிவைக்கப்பட்டன. இரண்டு மாதத்துக்கு ஒருமுறை தவறாது வெளிவந்த மனிதம் இதழ்கள் அந்த 5 வருடத்திலும் 30 இதழ்களோடு வெளிவந்து நின்று போயிற்று. தனது இறுதி இதழில் வாசகர்களுக்கு அறிவித்துவிட்டு நின்றது.
காணொளி சஞ்சிகைகளை இங்கு பதிவேற்றுவதில் சிக்கல் எழுந்ததால் அதை தவிர்க்க வேண்டியுள்ளது. காணொளிக்கான காட்சிகள் ஆவணப் படங்களிலிருந்தும் தொலைக்காட்சிகளிலிருந்தும் பதிவுசெய்து எடுக்கப்பட்டிருந்தன. youtube இல் பதிவேற்றியபோது, (காட்சிகளில் தொலைக்காட்சிகளின் பெயர்கள் வெளித்தெரிவதால்) அதை கூகிள் உரிமப் பிரச்சினைகளை கேள்விகேட்டு தொல்லை கொடுத்ததால் பதிவேற்றம் செய்யப்பட்டவை நீக்கப்பட்டன. மனிதம் சஞ்சிகை இதழ்களை மட்டுமே இங்கு பதிவேற்றியுள்ளோம்.
- ரவி (மனிதம் குழு சார்பாக) 10102021